×

வெறும் பொருளாதார, அரசியல் விவகாரமல்ல உக்ரைன் போர் மனிதநேய பிரச்னை: ஜி7 மாநாட்டில் அதிபர் ஜெலன்ஸ்கியை நேரில் சந்தித்த பிரதமர் மோடி கருத்து

ஹிரோஷிமா: ‘‘ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் வெறும் பொருளாதார, அரசியல் விவகாரமல்ல, அது மனிதநேய பிரச்னை. இதற்கு தீர்வு காண எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்’’ என ஜி7 மாநாட்டின் இடையே, முதல் முறையாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை நேரில் சந்தித்த பிரதமர் மோடி கூறி உள்ளார். வளர்ந்த நாடுகளின் ஜி7 கூட்டமைப்பின் உச்சி மாநாடு, ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடக்கிறது. ஜப்பான் பிரதமர் கிஷிடா அழைப்பின் பேரில் இம்மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க பிரதமர் மோடி ஹிரோஷிமா சென்றுள்ளார். மாநாட்டில், உணவு, உரம், எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட உலகளாவிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த விவாதத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகையில், ‘‘தொழில்நுட்பம் ஜனநாயகமாக்கப்பட வேண்டும். அப்போதுதான் அது வளர்ச்சிக்கும் ஜனநாயகத்திற்கும் இடையே பாலமாக மாறும். சிறு விவசாயிகள் உட்பட மிகவும் பாதிக்கப்படக் கூடியவர்களை பாதுகாக்கும் வகையில் அனைவரையும் உள்ளடக்கிய உணவு முறையை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். உலகளாவிய உர விநியோகச் சங்கிலிகள் பலப்படுத்தப்பட வேண்டும். இதில் உள்ள அரசியல் தடைகள் அகற்றப்பட வேண்டும். உணவு வீணாவதைத் தடுப்பது நமது கூட்டுப் பொறுப்பாக இருக்க வேண்டும். உலகம் முழுவதும் உரங்களுக்கு மாற்றாக இயற்கை விவசாயத்தின் புதிய மாதிரியை உருவாக்க முடியும். டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பலனை உலகில் உள்ள ஒவ்வொரு விவசாயிக்கும் கொண்டு செல்ல வேண்டும். சிறுதானியங்கள் ஊட்டச்சத்து, காலநிலை மாற்றம், நீர் சேமிப்பு மற்றும் உணவு பாதுகாப்பு ஆகியவற்றின் சவால்களை ஒரே நேரத்தில் நிவர்த்தி செய்கின்றன. இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்,’’ என வலியுறுத்தினார்.

இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி 12க்கும் மேற்பட்ட பல்வேறு நாட்டுத் தலைவர்களையும், முக்கிய பிரபலங்களையும் சந்தித்து பேசினார். இதில் குறிப்பாக, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடனான சந்திப்பு நடந்தது. ரஷ்யா போருக்கு பின் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை பிரதமர் மோடி முதல் முறையாக நேரில் சந்தித்து பேசினார். அப்போது, ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு இந்தியாவின் ஆதரவை ஜெலன்ஸ்கி கோரியதாக கூறப்படுகிறது. உக்ரைன் படைகள் ரஷ்யாவுக்கு எதிராக பெரிய அளவில் எதிர்த்தாக்குதலை நடத்த தயாராகி வருவதாகக் கூறப்படும் நிலையில், உக்ரைன் அதிபர் உலகெங்கிலும் உள்ள முக்கிய நாடுகளின் ஆதரவைப் பெற முயற்சித்து வருகிறார். மேலும் உக்ரைனுக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்தார்.

அப்போது பிரதமர் மோடி, ‘‘உக்ரைன் போர் உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய விவகாரம். இதை வெறும் பொருளாதார, அரசியல் விஷயமாக மட்டும் நான் கருதவில்லை. இது மனிதநேய பிரச்னை. இந்த போருக்கு தீர்வு காண இந்தியா தன்னால் முடிந்த எதையும் செய்யத் தயாராக இருக்கிறது. என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வேன்’’ என உறுதி அளித்தார். ஏற்கனவே ரஷ்ய அதிபர் புடினுடனான சமீபத்திய தொலைபேசி உரையாடலிலும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.

அதிபர் ஜெலன்ஸ்கி தவிர, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, ஜெர்மனி அதிபர் ஓல்ப் ஸ்கோல்ஸ், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், இந்தோனேஷியா அதிபர் விடுடு, தென் கொரியா அதிபர் யோன் சுக் யியோல், வியட்நாம் பிரதமர் பாம் மின் சின் மற்றும் ஐநா பொதுச் செயலாளர் ஆண்டோனியா குட்டரஸ் ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். ஜப்பானில் இந்திய கலாச்சாரத்தை பரப்பும் பிரபலங்களையும் பிரதமர் மோடி சந்தித்தார். முன்னதாக, நேற்று காலை ஹிரோஷிமாவில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தேடி வந்து கட்டிபிடித்து வாழ்த்து கூறிய பைடன்
ஜி7 மாநாட்டு அரங்கில் உலக தலைவர்கள் வரிசையாக அமர்ந்திருந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தேடி வந்து பிரதமர் மோடியை கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்தார். இரு தலைவர்களும் அப்போது வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் நேற்று வைரலானது. அடுத்த மாதம் பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்கிறார். ஜூன் 22ம் தேதி அதிபர் பைடன், அவரது மனைவி ஜில் பைடன் தரும் அரசு விருந்தில் மோடி பங்கேற்க உள்ளார். 2014ல் மோடி பிரதமரான பிறகு பலமுறை அமெரிக்கா பயணம் மேற்கொண்ட போதிலும், அமெரிக்க அதிபரின் அழைப்பின் பேரில் அரசு முறை பயணம் மேற்கொள்வது இப்போதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இது, அமெரிக்காவின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் நட்பு நாடுகளுக்கு வழங்கப்படும் சலுகையாகும்.

குவாட் மாநாடு
இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் நாடுகளை கொண்ட குவாட் அமைப்பின் உச்சி மாநாடு ஆஸ்திரேலியாவின் சிட்னியில் அடுத்த வாரம் நடக்க இருந்த நிலையில் கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டது. இந்த மாநாடு ஜி7 மாநாட்டின் இடையே ஹிரோஷிமாவில் நேற்று நடந்தது. இதில், பிரதமர் மோடி, அதிபர் பைடன், ஜப்பான் பிரதமர் கிஷிடா மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானிஸ் ஆகியோர் பங்கேற்று இந்தோ-பசிபிக் பிராந்தியம் உள்ளிட்ட உலகளாவிய விவகாரங்கள் குறித்து பேசினர். அடுத்த ஆண்டு குவாட் மாநாடு இந்தியாவில் நடத்தப்பட உள்ளது.

சீனாவின் ஆதரவு தேவை
ஜி7 நாடுகளின் தலைவர்கள் நேற்று வெளியிட்ட கூட்டறிக்கையில், ‘‘உக்ரைனில், ரஷ்யா தனது ராணுவ ஆக்கிரமிப்பை நிறுத்தவும், உடனடியாக, முழுமையாக, நிபந்தனையின்றி உக்ரைனில் இருந்து தனது படைகளை திரும்பப் பெறவும் சீனா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் ஐநா சாசனத்தின் கொள்கைகள், நோக்கங்களின் அடிப்படையில் விரிவான, நியாயமான மற்றும் நீடித்த அமைதியை ஆதரிக்க, உக்ரைன் உடனான நேரடி பேச்சுவார்த்தை உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள சீனாவை நாங்கள் ஊக்குவிக்கிறோம். உலகளாவிய சவால்களில் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு சீனாவின் ஒத்துழைப்பு அவசியம்’’ என கூறப்பட்டுள்ளது.

The post வெறும் பொருளாதார, அரசியல் விவகாரமல்ல உக்ரைன் போர் மனிதநேய பிரச்னை: ஜி7 மாநாட்டில் அதிபர் ஜெலன்ஸ்கியை நேரில் சந்தித்த பிரதமர் மோடி கருத்து appeared first on Dinakaran.

Tags : Ukraine ,PM ,Modi ,President ,Zelansky ,G7 ,Hiroshima ,Russia ,Dinakaran ,
× RELATED உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத்...