×

பெங்களூரு கண்டீரவா மைதானத்தில் பிரமாண்ட விழா கர்நாடக முதல்வராக சித்தராமையா பதவி ஏற்பு: டி.கே.சிவக்குமார் துணை முதல்வரானார்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் 24வது முதல்வராக சித்தராமையா நேற்று பதவியேற்றார். துணைமுதல்வராக டி.கே.சிவகுமார் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே உள்பட 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இவ்விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட ஆறு மாநில முதல்வர்கள், தேசிய தலைவர்கள், ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பதவியேற்பு விழா நடந்த கண்டீரவா ஸ்டேடியத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கூடியதால் பெங்களூரு மாநகரமே குலுங்கியது.

224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு கடந்த 10ம் தேதி தேர்தல் நடந்தது. அதில் பதிவான வாக்குகள் 13ம் தேதி எண்ணப்பட்டது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் 135, பாரதிய ஜனதா கட்சி 66, மதசார்பற்ற ஜனதாதளம் 19 தொகுதிகளிலும் 4 பேர் சுயேட்சைகளாக வெற்றி பெற்றனர். காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவராக சித்தராமையா நேற்று முன்தினம் தேர்வு செய்யப்பட்டார். அதை தொடர்ந்து தங்கள் கட்சியை ஆட்சி அமைக்க அழைக்கும்படி ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் உள்பட கட்சியின் மூத்த தலைவர்கள் நேரில் சந்தித்து கடிதம் கொடுத்தனர்.

சித்தராமையா பதவியேற்பு: அதையேற்று கொண்ட ஆளுநர் புதிய அரசை அமைக்க சித்தராமையாவுக்கு அழைப்பு விடுத்தார். நேற்று பகல் 12.30 மணிக்கு பதவியேற்பு விழா பெங்களூரு கண்டீரவா விளையாட்டு அரங்கில் நடந்தது. மாநிலத்தின் 24வது முதல்வராக சித்தராமையா பதவியேற்று கொண்டார். அதை தொடர்ந்து துணைமுதல்வராக டி.கே.சிவகுமார் பதவியேற்றார். அவர்களுக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

அமைச்சர்கள் பதவியேற்பு: அதை தொடர்ந்து டாக்டர் ஜி.பரமேஸ்வர் , கே.எச்.முனியப்பா, கே.ஜே.ஜார்ஜ், எம்.பி.பாட்டீல், காங்கிரஸ் தலைவர் கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே, சதீஷ்ஜார்கிஹோளி, ராமலிங்கரெட்டி, ஜமீர்அகமதுகான் ஆகியோர் அமைச்சர்களாக பதவி ஏற்று கொண்டனர். அவர்களுக்கும் ஆளுநர் கெலாட் பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். முதல்வர் சித்தராமையா, துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் உள்பட அமைச்சர்களுக்கு ஆளுநர் கெலாட் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

மு.க.ஸ்டாலின் உள்பட தலைவர்கள் பங்கேற்பு: பதவியேற்பு விழாவுக்காக அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட மேடையில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, அகில இந்திய காங்கிரஸ் பொதுசெயலாளர் பிரியங்கா காந்தி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக்கெலாட், பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார், பீகார் மாநில துணைமுதல்வர் தேஜஸ்வி யாதவ், இமாச்சலபிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங், ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன், சட்டீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாஹல், உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர்கள் பருக் அப்துல்லா மற்றும் மெஹபூபா முக்தி, மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வர்கள் சரத்பவார், உத்தவ்தாக்கரே, மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத், திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் காகோலிகோஸ்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி திகம்பர பட்டாச்சார்யா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் மக்களவை உறுப்பினருமான திருமாவளவன், மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் லட்சக்கணக்கான பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடியதால் பெங்களூரு மாநகரமே குலுங்கியது. விழாவில் பங்கேற்க வந்த வெளி மாநில முதல்வர்கள் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களை துணைமுதல்வர் டி.கே.சிவகுமார் வரவேற்றார். பதவி ஏற்பு விழா பகல் 12.38 மணிக்கு தொடங்கி 1.15 மணி வரை 38 நிமிடங்கள் நடந்தது.

முதல்வர் சித்தராமையாவுக்கு ₹1 கோடியில் சொகுசு கார்
முதல்வர் சித்தராமையாவுக்காக கர்நாடக அரசு சார்பில் புதிய சொகுசு கார் வாங்கப்பட்டுள்ளது. ஜப்பானை சேர்ந்த டொயட்டோ நிறுவனத்தின் தயாரிப்பான டொயட்டோ வெல்பயர் என்பது அந்த காரின் பெயர். இதன் விலை பெங்களூருவில் ₹96 லட்சம். வாகன பதிவெண், இதர உதிரிபாகங்கள் பொருத்துதல் உள்பட ஆன்ரோடு கட்டணமாக ₹1 கோடியே 19 லட்சம் ஆகும்.

திரையுலகினர் பங்கேற்பு
முதல்வர் பதவியேற்பு விழாவில் கன்னட திரையுலக மூத்த நடிகர் சிவராஜ்குமார், அவரது மனைவி கீதாசிவராஜ்குமார், முன்னாள் அமைச்சரும் நடிகையுமான உமா, நடிகை ரம்யா, நடிகர் துனியாவிஜய், நடிகை நிக்‌ஷிதா, திரைப்பட தயாரிப்பாளர் ராஜேந்திரசிங் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காரில் என்னென்ன வசதிகள்
ஸ்பிளிட் எல்.இ.டி. முகப்பு விளக்குகள் உள்ளன. பகலில் எரியும் டி.ஆர்.எல். விளக்குகளும் இருக்கிறது. பனிமூட்டமாக இருக்கும் சமயத்தில் ஒளிரும் பாக் விளக்கு வசதியும் இதில் உள்ளது. இது பெட்ரோலில் இயங்கும் ஹைபிரிட் மாடல் காராகும். 150 எச்.பி. திறன் கொண்ட 2.5 லிட்டர் என்ஜினை கொண்டது. இத்துடன் 143 எச்.பி. எலெக்ட்ரிக் மோட்டாரும் உள்ளது. இவை ஒன்றிணைத்து 145 எச்.பி. திறனை வெளிப்படுத்தக்கூடியவை. இதில் டிரைவர் உள்பட 6 பேர் அமர்ந்து பயணிக்கலாம். இருக்கைகள் ஒவ்வொன்றும் இடைவெளியில் அமைந்துள்ளது. ஒவ்வொரு இருக்கையும் நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. நமது வசதிக்கு ஏற்ப முன், பின் நகர்த்தும் வசதியும். கால்களை வைக்க கீழ் பகுதியில் சிறிய மெத்தை போன்ற பகுதி இருக்கிறது. அத்துடன் தேவைப்படும் போது மேற்கூரையை விலக்கி கொள்ளும் வசதி உள்ளது. இந்த காரின் பக்கவாட்டில் சாத்தக்கூடிய ஸ்லைடிங் கதவுகள் உள்ளன. 3 விதமான சீதோஷ்ண நிலை கன்ட்ரோல் செய்யும் வசதி உள்ளது. இதில் 7 இன்ச் அளவில் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்ட்மென்ட் சிஸ்டம் உள்ளது. இது மிகசிறந்த பொழுதை நமக்கு தரும். அதுபோல் பின் இருக்கைகளில் 10.2 அங்குல எல்.சி.டி. டி.விக்களும் உள்ளன. இந்த கார் 2020-ம் ஆண்டு தான் சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல்.

மு.க.ஸ்டாலின் நினைவு பரிசு
பதவியேற்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், புதிய முதல்வராக பதவியேற்ற சித்தராமையா மற்றும் துணைமுதல்வராக பதவியேற்ற டி.கே.சிவகுமார் ஆகியோருக்கு பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டிருந்த பட்டு சால்வைகள் அணிவித்தார், பின் சிறப்பு நினைவு பரிசு வழங்கினார். அதை இருவரும் மகிழ்ச்சியுடன் பெற்று கொண்டனர். டி.கே.சிவகுமார் சால்வையை தோளில் இருந்து எடுக்காமல் கடைசி வரை போட்டுக் கொண்டிருந்தார்.

கர்நாடக சட்டசபை நாளை கூடுகிறது
காங்கிரஸ் ஆட்சி அமைந்த பிறகு முதன் முறையாக சட்டசபை நாளை கூடுகிறது. இது குறித்து முதல்வர் சித்தராமையா கூறியதாவது, ‘கர்நாடக சட்டசபை நாளை கூடுகிறது. 3 நாட்களுக்கு சபை நடைபெறும். இது குறித்து ஆளுநரிடம் கோரிக்கை விடப்பட்டுள்ளது. மே 24ம் தேதிக்குள் புதிய சட்டசபை அமைய வேண்டும். மூத்த எம்எல்ஏ ஆர்.வி.தேஷ்பாண்டே தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்படுகிறார். இவர் எம்எல்ஏக்களுக்கு பதவி பிரமாணம் செய்துவைப்பார். புதிய சபாநாயகரை சட்டசபை கூட்டத்தில் தேர்வு செய்வோம்’ என்றார்.

The post பெங்களூரு கண்டீரவா மைதானத்தில் பிரமாண்ட விழா கர்நாடக முதல்வராக சித்தராமையா பதவி ஏற்பு: டி.கே.சிவக்குமார் துணை முதல்வரானார் appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Chief Minister ,Siddaramaiah ,Kandirava Maidan, Bengaluru ,TK Sivakumar ,Deputy Chief Minister ,Bengaluru ,24th Chief Minister of Karnataka ,DK Sivakumar ,All India Congress Party ,Kandaerava Maidan, Bangalore ,Dinakaran ,
× RELATED வறட்சி நிவாரணத்தை உடனடியாக விடுவிக்க...