×

10ம் வகுப்பு ரிசல்ட்டை அடுத்து பிளஸ்1 கணினி அறிவியல், வணிக பாடத்திற்கு அதிக `டிமாண்ட்’: போட்டி போட்டு விண்ணப்பங்களை பெற்றனர்

நெல்லை: பத்தாம் வகுப்பு தேர்வு வெளியான உடனேயே 11ம் வகுப்பு சேர்க்கைக்கான விண்ணப்பம் பள்ளிகளில் வழங்கப்பட்டன. கணினி அறிவியலுடன் கூடிய 2வது குரூப் மற்றும் வணிகப் பாடப்பிரிவுக்கு கடும் போட்டி நிலவுகிறது. மருத்துவக் கல்விக்கான நீட் தகுதி தேர்வு காரணமாக முதல் குரூப்பான ‘பயோ மேத்ஸ்’ குரூப்பை (கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல்) தேர்வு செய்வதில் மாணவர்கள் தயக்கம் காட்டுகின்றனர். தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள், நேற்று முன்தினம் ஒரே நாளில் வெளியானது. காலையில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளும், பிற்பகலில் பிளஸ்1 தேர்வு முடிவுகளும் வெளியாகின. இதையடுத்து மாணவர்கள் உடனடியாக பிளஸ்1 வகுப்புக்கு விண்ணப்பங்களை பெற்றனர்.

பல பள்ளிகளில் விண்ணப்பம் பெற கடும் கூட்டம் காணப்பட்டது. சில மாணவர்கள் விரும்பிய பிளஸ்1 பாடப்பிரிவு, வேறு பள்ளியில் இருப்பதால் அங்கு சேர்ந்து பயில விரும்பி அந்தப் பள்ளிகளுக்கு சென்று விண்ணப்பம் பெற்றனர். சில பள்ளிகளில் டோக்கன் வழங்கப்பட்டு மாணவர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது. தேர்ச்சி மற்றும் மதிப்பெண்கள் எடுப்பதில் சாதனை படைக்கும் பள்ளிகளில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டினர். இந்த ஆண்டு வணிகவியல், கணினி அறிவியலுடன் கூடிய 2வது குரூப் போன்ற பாடப்பிரிவுகளை தேர்வு செய்வதில் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். மருத்துவக் கல்வி பயில நீட் தகுதி தேர்வு அவசியம் என்பதால் சில அரசு உதவிபெறும் பள்ளிகளில் நீட் தகுதிக்கான அறிவியல் பாடங்களுடன் கூடிய முதல் குரூப்பை தேர்வு செய்வதில் மாணவர்கள் தயக்கம் காட்டுகின்றனர் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

10ம் வகுப்பு தேர்வில் 480க்கும் அதிகமான மதிப்பெண் எடுத்த சில மாணவர்கள் கூட நீட் தகுதிக்கு உரிய பாடப்பிரிவை தவிர்த்து கணினி அறிவியல் பாடப்பிரிவை தேர்வு செய்வதாக ஆசிரியர்கள் கூறினர். அதே நேரத்தில் அரசுப்பள்ளிகளில் தொடர்ந்து பயிலும் மாணவர்கள் 7.5 சதவீத இடஒதுக்கீடு கிடைப்பதால், அங்கு மாணவ -மாணவிகள் மருத்துவக்கல்விக்கு உரிய முதல் பாடப்பிரிவை தேர்வு செய்கின்றனர். தனியார் மெட்ரிக். பள்ளிகளிலும் மருத்துவக்கல்விக்கான அறிவியல் பாடப்பிரிவில் சேரும் மோகம் இந்த ஆண்டு குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது. உதாரணமாக முன்னர் முதல் குரூப் (பயோ மேத்ஸ்) அறிவியல் பாடப்பிரிவுக்கு 6 பேர் விண்ணப்பித்தால் 2வது பாடப்பிரிவு கணினி அறியிலுக்கு 4 பேர் விண்ணப்பிப்பார்கள். இந்த எண்ணிக்கை இப்போது தலைகீழாக மாறியுள்ளது. கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

* டாக்டர் கனவு சாத்தியமானது தான்
ஆசிரியர்கள், கல்வியாளர்கள் கூறுகையில், இந்திய அளவில் தமிழகத்தில் அதிக மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. மேலும் எதிர்காலத்தில் பல மாவட்டங்களில் புதிதாக தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மாவட்டத்திற்கு ஒரு அரசு மருத்துவக்கல்லூரி என்ற குறிக்கோளுடன் அரசு முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. எனவே மருத்துவக்கல்வி பயில தமிழகத்தில் அதிக சீட் கிடைக்க வாய்ப்புள்ளது. உயர் கல்விக்காக கூடுதல் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. மேலும் அரசு பள்ளிகளில் பயில்பவர்களுக்கு 7.5 சதவீத் சிறப்பு இடஒதுக்கீடு கிடைக்கிறது. எனவே அறிவியல் தொடர்பான முதல் பாடப்பிரிவை தேர்வு செய்ய தகுதியுள்ள மாணவர்கள் தயங்க வேண்டாம், என்றனர்.

The post 10ம் வகுப்பு ரிசல்ட்டை அடுத்து பிளஸ்1 கணினி அறிவியல், வணிக பாடத்திற்கு அதிக `டிமாண்ட்’: போட்டி போட்டு விண்ணப்பங்களை பெற்றனர் appeared first on Dinakaran.

Tags : Plus1 ,Dinakaran ,
× RELATED கலைவாணி மெட்ரிக் பள்ளி பிளஸ்1 தேர்வில் 100% தேர்ச்சி