×

தென் இந்தியாவில் முதல் முறையாக குன்னூர் சிம்ஸ் பூங்காவில் தேயிலை கண்காட்சி துவக்கம்

குன்னூர்: தென் இந்தியாவில் முதல் முறையாக குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 2 நாட்கள் நடைபெறும் தேயிலை கண்காட்சி நேற்று துவங்கியது. இந்தியாவில் 1830ல் இருந்து தேயிலை வணிக உற்பத்தி ஆரம்பமானது. உலகில் மிகப்பெரிய தேயிலை உற்பத்தி நாடாகவும், தேயிலை நுகர்வு நாடாகவும் இந்தியா திகழ்கிறது. இந்தியாவின் வணிக பயிர்களில் தேயிலை மிகவும் முக்கியமான ஒன்றாகும். அசாம், டார்ஜிலிங் தொடர்ந்து தமிழகத்தின் நீலகிரி தேயிலை சிவப்பு புவிக்குறியீட்டு எண் பெற்றுள்ளது. சர்வதேச தேயிலை தினம் மே 21 (இன்று) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தங்களின் வாழ்க்கையில் ஒன்றிணைந்த தேயிலை குறித்து டைகர் ஹில் டேன் டீ பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தின் மத்தியில் 1200 தேயிலை தொழிலாளர்கள் இணைந்து மனித சங்கிலி நிகழ்ச்சியை நேற்று நடத்தினர்.

இந்நிகழ்ச்சியை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், கலெக்டர் அம்ரித் ஆகியோர் துவங்கி வைத்தனர். தொடர்ந்து குன்னூர் சிம்ஸ் பூங்காவில் தென் இந்தியாவில் முதன்முறையாக தேயிலை கண்காட்சியை துவக்கி வைத்தனர். 30 அரங்குகளில் நீலகிரியில் சில்வர் டீ, க்ரீன் டீ, ஆர்த்தோடக்ஸ் டீ, ஒயிட் டீ உள்ளிட்ட பல்வேறு வகையான தேயிலை தூள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது. அது மட்டுமின்றி தேநீரை சுவைத்து பார்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலப்பட தேயிலை தூளை கண்டறிய விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகள் இவற்றை கண்டு ரசித்தும், ருசித்தும் வருகின்றனர். இன்றும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நிகழ்ச்சியில் தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குனர் முத்துக்குமார், இன்க்கோ சர்வ் மேலாண்மை இயக்குநர் மோனிகா ராணா, குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் பூஷ்ணகுமார், வட்டாட்சியர் சிவகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post தென் இந்தியாவில் முதல் முறையாக குன்னூர் சிம்ஸ் பூங்காவில் தேயிலை கண்காட்சி துவக்கம் appeared first on Dinakaran.

Tags : South India ,Gunnur Sims Zoo ,Gunnur ,Gunnur Sims Park ,
× RELATED வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம்: வாக்களிக்காமல் வெளியேறிய மமிதா பைஜு