×

நாளை காலை 07.00 முதல் 09.00 மணி வரை கடற்கரையை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி: தமிழ்நாடு அரசு ஏற்பாடு

சென்னை: நமது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும், நமது கடற்கரைப் பகுதிகளைப் பாதுகாப்பதற்கும் குறிப்பிடத்தக்க முயற்சியாக, தமிழக அரசு, இந்திய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்துடன் இணைந்து, நாளை காலை 07.00 முதல் 09.00 மணி வரை கடற்கரையை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிகழ்வானது சென்னை மாவட்டத்திலுள்ள பெசன்ட் நகர் கடற்கரை, செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள கோவளம் கடற்கரை மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மணக்குடி கடற்கரை உள்ளிட்ட மூன்று கடற்கரைகளில் நடைபெற உள்ளது. சுற்றுச்சூழலுக்கான ஜி 20 கூட்டங்களின் ஒரு அங்கமாக பொதுமக்களின் பங்களிப்பு மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கையை ஊக்குவிக்கும் அதே வேளையில், சுத்தமாக மற்றும் ஆரோக்கியமாக கடற்கரைகளை பராமரிப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.

பல்வேறு உள்ளூர், பிராந்திய, தேசிய மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்வுகள் நாடு முழுவதும் நடத்தப்பட உள்ளன. ஜி20 நாடுகள் கடற்கரையை சுத்தம் செய்யும் நடவடிக்கைகளில் நாடு சார்ந்த தரப்படுத்தப்பட்ட நெறிமுறைகள், விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் கடற்கரை குப்பைகளைத் தடுப்பதற்கும் குறைப்பதற்கும் சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவற்றின் மூலம் ஈடுபட்டுள்ளன.

கடலில் குப்பைகள் சென்றடைவதை தடுத்தல் மற்றும் நிர்வகிப்பதற்கான அவசியம் குறித்து உலகளாவிய கவனத்தை ஈர்க்கும் வகையில், பல ஜி20 நாடுகளும் ஒரே நாளில் மாபெரும் கடற்கரையை தூய்மைப்படுத்தும் இயக்கத்தில் இணைந்துள்ளன. இருபது உறுப்பினர்கள் கொண்ட இக்குழுவானது (G20) 19 நாடுகளையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் உள்ளடக்கியதாகும் ‘கடல் குப்பைகள் மீதான ஜி20 யின் செயல்திட்டங்களின் படி ஜி20 நாடுகள், கடலில் உள்ள கழிவுகளை குறைக்கவும், அதனை மீண்டும் பயன்படுத்தவும் மற்றும் மறுசுழற்சி செய்யவும் உறுதிபூண்டுள்ளன.

தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் நிலையான கடலோர மேலாண்மைக்கான தேசிய மையம் (NCSCM) ஆகியவற்றின் ஒருங்கிணைப்புடன் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் தமிழகத்தில் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறது. இதில் பள்ளிகள்/கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் கலந்து கொள்வார்கள்.

நாளை நடைபெறும் மாபெரும் கடற்கரை தூய்மைப்படுத்தும் நிகழ்வில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன், தன்னார்வலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள்.

இந்த நிகழ்வில் தூய்மையான கடற்கரை மற்றும் கடற்கரை பாதுகாப்பு குறித்த உறுதிமொழி எடுக்கப்படும். மேலும், மணல் சிற்பங்கள், விழிப்புணர்வு பதாகைகள் காட்சிப்படுத்துதல் கலை நிகழ்ச்சிகள் மற்றும் மாணவர்களின் ஓவியங்களை காட்சிப்படுத்துதல் ஆகியவை இந்நிகழ்வின் அங்கமாகும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட கடற்கரை பகுதியில் சிதறிக்கிடக்கும் திடக்கழிவுகள் பைகளில் சேகரிக்கப்பட்டு, இறுதியாக வரையறுக்கப்பட்ட சேகரிப்புத் தொட்டிகளில் நிரப்பப்படும். இவ்வாறு சேகரிக்கப்படும் கடற்கரை குப்பைகள் உரிய முறையில் தரம் பிரிக்கப்பட்டு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்கப்படும்.

The post நாளை காலை 07.00 முதல் 09.00 மணி வரை கடற்கரையை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி: தமிழ்நாடு அரசு ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Govt. ,Chennai ,Tamil Nadu Government ,Indian Environment ,Forest Department ,
× RELATED தமிழக அரசின் அனுமதி இல்லாத ஆம்னி...