×

திருப்பதி அருகே நள்ளிரவு பரபரப்பு; ஓடும் ரயிலில் பக்தர்களிடம் 60 சவரன், 3 லட்சம் கொள்ளை: 20 பேர் கும்பல் அட்டூழியம்

திருமலை: திருப்பதி அருகே நள்ளிரவில் ஓடும் ரயிலில் பக்தர்களிடம் 60 சவரன் நகை, ₹3 லட்சம் பணத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்துச்சென்றுள்ளனர். ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து குண்டூருக்கு நேற்றிரவு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. இந்த ரயில் கடப்பா மாவட்டம் எர்ரகுடிபாடு ரயில் நிலையம் அருகே சிக்னலுக்காக மெதுவாக சென்றது. இதில் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு ஏராளமான பக்தர்கள் பயணித்தனர். நள்ளிரவு 12.30 மணியளவில் மெதுவாக சென்ற ரயிலில் திடுதிப்பென 20க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் ரயில் பெட்டிகளில் ஏறினர். பின்னர் அவர்கள் அங்கிருந்த பக்தர்கள் மற்றும் பயணிகளை மிரட்டி நகை, பணம் கேட்டனர்.

அப்போது பெரும்பாலான பக்தர்கள் தூக்க கலக்கத்தில் இருந்ததால் நடந்ததை அறிய முடியவில்லை. இதையடுத்து கொள்ளையர்கள் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டி பெண்களின் கழுத்தில் இருந்த நகை, பணம் ஆகியவற்றை பறித்துள்ளனர். இதன்பின்னர் பயணிகள் கூச்சலிட்டனர். ஆனால் சத்தம் போட்டால் கொன்றுவிடுவோம் என அவர்கள் மிரட்டினர். 50க்கும் மேற்பட்டவர்களிடம் சுமார் 60 சவரன் நகை, ₹3 லட்சம் வரை பணத்தை கொள்ளையடித்ததாக தெரிகிறது. இதன்பின்னர் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து நடுவழியில் ரயிலை நிறுத்தி கொள்ளையர்கள் இறங்கி தப்பியோடிவிட்டனர்.

நகை, பணம் கொள்ளை போனதால் அதிர்ச்சியடைந்த பக்தர்கள் ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த கொள்ளை சம்பவத்தில் பழைய குற்றவாளிகள் யாரேனும் ஈடுபட்டார்களா? அல்லது வட மாநில கும்பலின் கைவரிசையா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

The post திருப்பதி அருகே நள்ளிரவு பரபரப்பு; ஓடும் ரயிலில் பக்தர்களிடம் 60 சவரன், 3 லட்சம் கொள்ளை: 20 பேர் கும்பல் அட்டூழியம் appeared first on Dinakaran.

Tags : Tirupati ,Tirumalai ,
× RELATED ராமேஸ்வரம் – திருப்பதி பயணிகள் ரயில் பாதை தண்டவாளத்தில் விரிசல்!