×

10ம் வகுப்பு தேர்வில் இரட்டை சகோதரிகள் ஒரே மதிப்பெண்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அடுத்துள்ள சின்ன கணவாய் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன்(45). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய இரட்டை மகள்களான ராமாதேவி, லட்சுமிதேவி ஆகியோர் செக்கரப்பட்டி அருகே உள்ள தொ.கனிகரஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தனர். இந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவு நேற்று வெளியானது. இந்த பொது தேர்வை எழுதி தேர்வு முடிவுக்காக காத்துக் கொண்டிருந்த இரட்டை சகோதரிகளுக்கு பெரும் மகிழ்ச்சி காத்திருந்தது. நேற்று இணையதளம் மூலம் ராமா தேவி தன்னுடைய 347 மதிப்பெண்களை பார்த்து தேர்ச்சி பெற்றதை தெரிந்து கொண்டார். மேலும் அருகில் இருந்த லட்சுமி தேவியின் 347 மதிப்பெண்களை இணையதளத்தில் பார்க்கும்போது இன்ப அதிர்ச்சி அடைந்தனர். இரட்டை பெண் பிள்ளைகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்தது அந்த கிராம மக்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி அவர்கள் கூறியதாவது; நாங்கள் இரட்டையராக பிறந்ததால், எங்களுக்கு தேவையான அனைத்தையும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என எங்களுடைய பெற்றோர் எதிர்பார்த்து அதனையே செய்வார்கள். இதனால் எங்களுக்குள் எப்பொழுதுமே எந்த வேறுபாடுமே ஏற்பட்டது இல்லை. பள்ளிக்கூடத்திலும் ஒன்றாகவே சேர்ந்து ஒரே வகுப்பறையில், ஒரே இடத்தில் தான் அமர்ந்து இதுவரை படித்தோம். விடுமுறை நாட்களுக்கு கூட நாங்கள் இரண்டு பேரும் ஒன்றாகவே எங்கு வேண்டுமானாலும் செல்வோம். தேர்வு நாட்களில் ஒருவருக்கு தெரிந்த விடைகளை பரிமாறிக் கொண்டு படித்தோம். இதனால் தான் என்னவோ தெரியவில்லை நாங்கள் இரட்டையர்கள் மாதிரியே பத்தாம் வகுப்பில் 347 என்று ஒரே மதிப்பெண்ணை எடுத்துள்ளோம். இது எங்களுக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது என்றனர்.

The post 10ம் வகுப்பு தேர்வில் இரட்டை சகோதரிகள் ஒரே மதிப்பெண் appeared first on Dinakaran.

Tags : Darmapuri ,Krishnan ,Ganavai ,Thoppur, Darmapuri district ,Dinakaran ,
× RELATED ?வாஸ்து எந்திரம் என்றால் என்ன? அதை எதற்காக பயன்படுத்துகிறார்கள்?