×

ஸ்ரீபெரும்புதூர் அருகே 2ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி: தொல்லியல் துறை அதிகாரிகள் துவக்கி வைத்தனர்

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வடக்குப்பட்டு ஊராட்சி நத்தமேடு பகுதியில் கடந்தாண்டு ஜூலை 3ம் தேதி அகழ்வாராய்ச்சி பணி துவங்கியது. 3 மாதங்கள் வரை நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின்போது, 15000 ஆண்டுக்கு முன்பு இடைக்கால, கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கருவி மற்றும் ரோமாபுரியர்களின் மண்பாண்டங்கள், தங்கம் உள்ளிட்ட பொருட்கள் கிடைத்தன. இந்த பொருட்கள் அனைத்தும் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வரலாற்று சிறப்புமிக்க இந்த பகுதியில் தொடர்ந்து அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள டெல்லியில் உள்ள இந்திய தொல்லியல் துறை அலுவலகத்தில் அனுமதி பெறப்பட்டது.

இதையடுத்து, 2ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை தொடங்குவதற்கான பூமி பூஜை நத்தமேடு பகுதியில் நேற்று நடந்தது. இந்திய தொல்லியல்துறையின் சென்னை மண்டல கண்காணிப்பாளர் காளிமுத்து, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மற்றும் கலை பண்பாட்டுத்துறை ஆணையர் காந்தி ஆகியோர் அகழ்வாராய்ச்சி பணியை துவக்கி வைத்தனர்.

இதையடுத்து, சென்னை மண்டல கண்காணிப்பாளர் காளிமுத்து கூறுகையில், “வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வடக்குப்பட்டு ஊராட்சியில், இடைக்கால, கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கீழடியைவிட 12500 முதல் 15000 ஆண்டுக்கு முந்தைய 1500க்கும் மேற்பட்ட கற்களால் செய்யப்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. இந்த பொருட்களை உற்பத்தி செய்யும் இடமாக இந்த பகுதி இருந்திருக்கலாம். அதிகப்படியான மக்கள் இப்பகுதியில் வாழ்ந்திருப்பதற்கான சாத்திய கூறுகள் உள்ளன. கைப்பற்றப்பட்ட பழங்கால கற்கள் ஆய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. முதற்கட்ட அகழ்வாராய்ச்சி பணி முடிந்து, தற்போது 2ம் கட்ட பணி துவங்கியுள்ளது. 6 மாதங்கள் 2ம் கட்ட பணி நடைபெறும்’ என்றார்.

The post ஸ்ரீபெரும்புதூர் அருகே 2ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி: தொல்லியல் துறை அதிகாரிகள் துவக்கி வைத்தனர் appeared first on Dinakaran.

Tags : Archaeology Department ,Sripurudur ,Nathamedu ,Sripurudpur ,Dinakaran ,
× RELATED நத்தம்பேடு பகுதியில் ₹5 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு