×

எங்களிடம் தரமான பேட்டிங் வரிசை இருந்தும் புள்ளி பட்டியலில் இருக்கும் இடத்தை பார்க்க அதிர்ச்சியாக உள்ளது: ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் விரக்தி

தர்மசாலா:ஐபிஎல் தொடரில் தர்மசாலாவில் நேற்று நடந்த 66வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன் குவித்தது. அதிகபட்சமாக சாம் கரன் நாட் அவுட்டாக 49 (31 பந்து), ஜிதேஷ் சர்மா 44 (28பந்து), ஷாருக்கான் நாட் அவுட்டாக 41 (23பந்து) ரன் அடித்தனர். ராஜஸ்தான் பவுலிங்கில் நவ்தீப் சைனி 3 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் களம் இறங்கிய பஞ்சாப் அணியில் பட்லர் டக்அவுட்டாக ஜெய்ஸ்வால் 50 (36பந்து), தேவ்தத் படிக்கல் 51 (30 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்), ஹெட்மயர் 46 ரன் (28 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) அடித்தனர். 19.4 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 189 ரன் எடுத்த ராஜஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தேவ்தத் படிக்கல் ஆட்டநாயகன் விருது பெற்றார். 7வது வெற்றியுடன் நிறைவு செய்த ராஜஸ்தான் 14 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது. பெங்களூரு, மும்பை அணிகள் தங்கள் கடைசி போட்டிகளில் தோல்வி அடைந்தால் ராஜஸ்தானுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். 8வது தோல்வியை சந்தித்த பஞ்சாப் வாய்ப்பை இழந்து வெளியேறியது.

வெற்றிக்கு பின் ராஜஸ்தான் கேப்டன் சாம்சன் கூறியதாவது: ஹெட்மயர் அதிரடியாக ஆடியதால் நாங்கள் 18.5 ஓவரில் வெற்றிபெறுவோம் என நினைத்தேன். எங்களிடம் ஒரு தரமான பேட்டிங் வரிசை உள்ளது. ஆனால் புள்ளி பட்டியலில் நாங்கள் இருக்கும் இடத்தை பார்ப்பது கொஞ்சம் அதிர்ச்சியாக உள்ளது. ஜெய்ஸ்வால் பற்றி நான் ஒவ்வொரு ஆட்டத்திலும் பேசி வருகிறேன். இந்த வயதில் அவர் 100 டி.20 போட்டிகளில் விளையாடியது போல் முதிர்ச்சியுடன் பேட்டிங் செய்கிறார். ஏறக்குறைய 90 சதவீத நேரங்களில் போல்ட் முதல் ஓவரிலேயே விக்கெட் எடுப்பார் என்று நினைக்கிறேன். கடந்த சில ஆட்டங்களில் நாங்கள் அழுத்தத்தில் இருந்தோம்’’ என்றார்.

கேட்சுகளை தவறவிட்டது சரிவை தந்தது: தவான் பேட்டி
தோல்வி குறித்து பஞ்சாப் கேப்டன் தவான் கூறியதாவது: பவர்பிளே ஓவர்களில் நாங்கள் நிறைய விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். அதுதான் எங்களுக்கு மிகப்பெரிய பின்னடைவை கொடுத்துவிட்டது. ஆனால் சாம்கரன், ஜித்தேஷ் சர்மா, ஷாருக்கான் எங்களை ஆட்டத்திற்குள் கொண்டு வந்தனர். பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. பவுலர்கள் நன்றாக செயல்பட்டு கொடுத்தாலும், நடுவில் நாங்கள் கேட்சுகளை தவறவிட்டது எங்களை சரிவடையவைத்தது. இந்த பிட்சில் 200 ரன் அடித்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். பவர்பிளேவில் விக்கெட்டுகளை இழந்ததால் கூடுதலாக 20 ரன் அடிக்க வேண்டியதை தவற விட்டுவிட்டோம். இந்த தொடர் முழுவதும் ஒரு சில போட்டிகளில் எங்களது பேட்டிங் சிறப்பாக இருந்திருக்கிறது. ஒரு சில போட்டிகளில் பவுலிங் மிகச் சிறப்பாக இருந்திருக்கிறது. இரண்டையும் ஒட்டுமொத்தமாக செய்யத் தவறிவிட்டோம். இதுதான் நாங்கள் பிளே-ஆப் செல்லமுடியாமல் போனதற்கு காரணமாக பார்க்கிறேன், என்றார்.

The post எங்களிடம் தரமான பேட்டிங் வரிசை இருந்தும் புள்ளி பட்டியலில் இருக்கும் இடத்தை பார்க்க அதிர்ச்சியாக உள்ளது: ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் விரக்தி appeared first on Dinakaran.

Tags : Rajasthan ,Sanju Samson ,Darmasala ,Rajasthan Royals ,Punjab Kings ,66th league ,IPL ,Dinakaran ,
× RELATED ஐபிஎல் டி20-யில் இன்று 2 போட்டி:...