×

‘ராஜீவ் ஜோதி’ சென்னை வந்தடைந்தது; ரூ.2000 செல்லாது என்ற அறிவிப்பால் மக்களுக்கு என்ன பலன்?: பிரதமர் மோடிக்கு கே.எஸ்.அழகிரி கேள்வி

சென்னை: மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் 32வது நினைவு தினத்தை முன்னிட்டு, வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் தலைமையில் கன்னியாகுமரி முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை ராஜீவ் நினைவு ஜோதி யாத்திரை நடைபெற்றது. இந்த யாத்திரையானது பல்வேறு மாவட்டங்கள் வழியாக நேற்று சென்னை வந்தடைந்தது. சென்னை வண்ணாரப்பேட்டை எம்சி ரோடு காமராஜர் சிலை அருகே நேற்று நடைபெற்ற ஜோதி வரவேற்பு நிகழ்ச்சியில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு மற்றும் ஜெயக்குமார் எம்பி, துரை சந்திரசேகர் எம்எல்ஏ, மாநில துணை தலைவர்கள் கோபண்ணா, பொன்.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தலைவர் டில்லி பாபு, கவுன்சிலர்கள் சுரேஷ். கீர்த்தி மற்றும் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டு ஜோதியை வரவேற்றனர்.

நிகழ்ச்சியின் போது, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறுகையில், ‘2000 ரூபாய் நோட்டு செல்லாது என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். என்ன கொடுமை இது. 2 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டு மக்களை துயரத்துக்கு ஆளாக்கினார்கள். நுனி மரத்தில் உட்கார்ந்து கொண்டு அடிமரத்தை வெட்டுகின்ற செயல். நாடாளுமன்ற தேர்தல் வரை காத்திருந்தார்கள். ஆனால், கர்நாடகா தேர்தல் தோல்வியால் முடிவை மாற்றிக் கொண்டு இப்போது அறிவித்துள்ளார்கள்.

கருப்பு பணம் எவ்வாறு உருவாகிறது என்று மோடிக்கு தெரியவில்லை. பெரிய பணக்காரர்கள் யாரிடமும் ரூ.2000 நோட்டு இல்லை சிறு வியாபாரிகள் நடுத்தர வாசிகள் மட்டுமே சிறு தொகையாக ரூ.2000 இருக்கிறது. ரூ.2000 நோட்டு செல்லாது என அறிவித்ததற்கு காரணம் என்ன?. இதன் மூலம் என்ன பலன் கிடைக்கும் என்பதை ஒன்றிய அரசு தெரியப்படுத்த வேண்டும். ஒரு திட்டத்தை அறிவித்தால் அந்த திட்டத்தால் நாட்டு மக்களுக்கு என்னென்ன நன்மை கிடைக்கும் என்று சொன்னால் தான் அது சரியானதாக இருக்கும். ராகுல் காந்தி இப்பொழுது ஒரு காந்தியாக, காமராஜராக உருவெடுத்து காட்சி அளிக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

The post ‘ராஜீவ் ஜோதி’ சென்னை வந்தடைந்தது; ரூ.2000 செல்லாது என்ற அறிவிப்பால் மக்களுக்கு என்ன பலன்?: பிரதமர் மோடிக்கு கே.எஸ்.அழகிரி கேள்வி appeared first on Dinakaran.

Tags : Rajiv Jhothi ,Chennai ,PM Modi ,S.S. Anakiri ,32nd Memorial Day ,Rajiv Gandhi ,Eastern District Congress ,Vadashennai ,S.S. Analakiri ,
× RELATED அதிக அளவில் மக்களை வாக்களிக்க வைக்க...