×

அடுத்த சுற்று வாய்ப்பு யாருக்கு?; டெல்லி-சென்னை பிற்பகல் மோதல்: லக்னோ-கொல்கத்தா இன்றிரவு பலப்பரீட்சை

புதுடெல்லி:16-வது ஐ.பி.எல். டி20 தொடரில் டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் 67-வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்சை சந்திக்கிறது. டோனி தலைமையிலான சிஎஸ்கே அணி இந்த தொடரில் இதுவரை 13 போட்டிகளில் ஆடி 7 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லை என 15 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. `பிளே-ஆப்’ சுற்றுக்குள் நுழைய இன்று நடைபெறும் தனது கடைசி லீக் போட்டியில் சிஎஸ்கே வென்றால் போதும். தோல்வி அடைந்தால் மற்ற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டிய நிலை உருவாகும்.

ஒருவேளை சிஎஸ்கே தோற்று லக்னோ, மும்பை, பெங்களூரு அணிகள் தங்களது கடைசி போட்டியில் வெற்றி பெற்றால் அடுத்த சுற்று வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்படும். சிஎஸ்கே அணியின் போட்டிக்கு பின்னர் தான் லக்னோ, மும்பை, பெங்களூரு அணிகளின் போட்டிகள் நடக்கிறது. எனவே சென்னை அடுத்த சுற்றுக்குள் நுழைய வெற்றி பெற வேண்டியது அவசியமானதாகும். டெல்லி ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துவிட்டது. அந்த அணி 13 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 8 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்றுள்ளது. தனது சொந்த மண்ணில் நடைபெறும் கடைசி ஆட்டத்தை வெற்றியுடன் முடிக்க டெல்லி அணி முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.பி.எல். தொடரில் இவ்விரு அணிகளும் 28 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 18-ல் சென்னையும், 10-ல் டெல்லியும் வெற்றி பெற்று இருக்கின்றன.

இதையடுத்து இரவு 7.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் லக்னோ-கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இதில் குருணல் பாண்டியா தலைமையிலான லக்னோ அணி 13 போட்டிகளில் ஆடி 7 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லை என 15 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் லக்னோ வெற்றி பெற்றால் அந்த அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும். தோல்வியடைந்தால் மற்ற அணிகளின் முடிவை பொறுத்தே அடுத்த சுற்றுக்குள் நுழைய முடியும். அதாவது பெங்களூரு, மும்பை அணிகள் தங்களது கடைசி போட்டியில் தோல்வி அடைந்தால் வாய்ப்பு கிட்டும். நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா அணி 13 போட்டிகளில் ஆடி 6 வெற்றி, 7 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ளது. இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா வெற்றி பெற்றாலும் மற்ற அணிகளின் முடிவுகள் தங்களுக்கு சாதகமாக அமைவதுடன் ரன்-ரேட்டிலும் மிக உயர்ந்த நிலையை எட்டினால் தான் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post அடுத்த சுற்று வாய்ப்பு யாருக்கு?; டெல்லி-சென்னை பிற்பகல் மோதல்: லக்னோ-கொல்கத்தா இன்றிரவு பலப்பரீட்சை appeared first on Dinakaran.

Tags : Delhi ,Chennai ,Afternoon ,Lucknow ,Kolkata ,New Delhi ,16th IPL ,league ,Delhi Arun Jaitley Stadium ,Kolkata Test ,Dinakaran ,
× RELATED இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட்...