×

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் உறுதி செய்த அதிகாரத்தை, அவசரச் சட்டத்தின் மூலம் பறித்த ஒன்றிய அரசு!

டெல்லி : டெல்லி மாநில நிர்வாகத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே முழு அதிகாரம் உள்ளதாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறும் வகையில் ஒன்றிய அரசு அவசர சட்டம் கொண்டு வந்து இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி அரசுக்கும் துணை நிலை ஆளுநருக்கும் இடையே மோதல் முற்றிய நிலையில், மாநில நிர்வாகத்தில் யாருக்கு அதிகாரம் உள்ளது என்பது குறித்து உச்சநீதிமன்றத்தில் ஆம் ஆத்மி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிக்க, இடமாற்றம் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசுக்கே முழு அதிகாரம் என்று கடந்த வாரம் தீர்ப்பு வழங்கியது.

அரசு அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு வழங்கப்படாவிட்டால் அரசியலமைப்பின் அடிப்படையே கேள்விக்குறியாகிவிடும் என்றும் உச்சநீதிமன்றம் தமது தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தது.இந்த தீர்ப்பு வெளியான சில மணி நேரத்திலேயே சேவைகள் துறை செயலாளர் ஆஷிஷ் மோரை இடமாற்றம் செய்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டார். ஆனால் டெல்லி துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.

இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவையே நீர்த்துப்போகும் செய்யும் வகையில், ஒன்றிய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டத்தில் பணி நியமனம், இடமாற்றம் தொடர்பாக முடிவு செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. முதல்வர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் தலைமை செயலாளர் மற்றும் உள்துறை முதன்மை செயலாளர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் பெரும்பாண்மை முடிவின்படி பணி நியமனம் மற்றும் இடமாற்றம் முடிவுகள் இருக்கும். ஒருமித்த முடிவு ஏற்படாவிட்டால் துணை நிலை ஆளுநர் எடுக்கும் முடிவே இறுதியானது என்று கூறப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் அவசர சட்டத்திற்கு குடியரசு தலைவர் உடனடியாக ஒப்புதல் வழங்கியதால் இந்த சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி மேல்முறையீட்டு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

The post மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் உறுதி செய்த அதிகாரத்தை, அவசரச் சட்டத்தின் மூலம் பறித்த ஒன்றிய அரசு! appeared first on Dinakaran.

Tags : Union Government ,Supreme Court ,Delhi Government ,Delhi ,Dinakaran ,
× RELATED கொலிஜியத்தின் 70 பரிந்துரைகள் நிலுவை...