×

கோடை வெப்பத்தை சமாளிக்க தொழிற்சாலைகள் தினமும் 4.5 லிட்டர் குளிர்ந்த குடிநீர் தொழிலாளருக்கு வழங்க வேண்டும் தொழிலக பாதுகாப்பு, சுகாதார கூடுதல் இயக்குனர் தகவல்

திருச்சி, மே 20: கோடை வெப்பத்தில் இருந்து தொழிலாளர்களை பாதுகாக்கும் விதமாக ஒவ்வொரு தொழிலாளிக்கும் நாள் ஒன்றுக்கு 4.5 லிட்டர் குளிர்ந்த நீர் வழங்குவது அவசியம் என தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குநர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நண்பகல் 12 மணிக்கு மேல் மதியம் 3 மணி வரை தேவையின்றி பொதுமக்கள் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என அரசு தரப்பில் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொழிற்சாலைகள், கட்டுமானப்பகுதிகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் உட்பட கூலித்தொழிலாளர்களின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியதாக உள்ளது. இதைகருத்தில் கொண்டு கோடை வெப்பத்தில் இருந்து தொழிற்சாலை தொழிலாளா்கள் மற்றும் கட்டுமானப்பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்களைபாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குனர் தெரிவித்துள்ளதாவது, கோடை வெப்பத்தில் இருந்து தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான பணியாளர்களை பாதுகாக்கும் விதமாக ஒரு தொழிலாளருக்கு நாள் ஒன்றுக்கு 4.5 லிட்டா் என்ற விகிதத்திலும், இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணிபுரியும் தொழிற்சாலைகள் எனில் குளிர்ந்த குடிநீர் சட்டப்படி வழங்க வேண்டும். ஒவ்வொரு தொழிலாளரும் 15 முதல் 20 நிமிடங்களுக்கு ஒரு க்ளாஸ் தண்ணீர் அருந்துவதை உறுதி செய்ய வேண்டும். வெப்பம் அதிகம் உள்ள ஸ்டீல் ரோலிங், வெப்ப உலை, டயா் உற்பத்தி உள்ளிட்ட தொழிற்சாலைகளில் இரண்டு ‘பேட்ஜ்’-ஆக தொழிலாளா்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும். ஒன்று அல்லது இரண்டு மணி நேர வேலை சுற்றிற்கு பிறகு (rotational basis) முறையில் வேலை செய்யவும், ஓய்வு எடுப்பதற்காக அருகில் ஓய்வு அறை அமைக்க வேண்டும். நேரடியாக சூரிய ஒளியில் வேலை செய்யும் கட்டுமான தொழிலாளா்களின் வேலை நேரத்தை மாற்றியமைக்க வேண்டும். சுத்தமான தேவையான அளவு குடிநீர் மற்றும் கூடுதலாக ‘எலக்ட்ரோலைட்’ கலந்த நீரும் வழங்க வேண்டும். வெப்ப அலை அதிகம் இருக்கும் நிலையில் போதுமான இடைவெளியில் தொழிலாளா்களுக்கு ஓய்வு அளித்து வேலை கொடுக்க வேண்டும் என அனைத்து தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான நிறுவனத்தினா் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.

The post கோடை வெப்பத்தை சமாளிக்க தொழிற்சாலைகள் தினமும் 4.5 லிட்டர் குளிர்ந்த குடிநீர் தொழிலாளருக்கு வழங்க வேண்டும் தொழிலக பாதுகாப்பு, சுகாதார கூடுதல் இயக்குனர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Factories ,Trichy ,Dinakaran ,
× RELATED ட்ராலி பேக் வீல்களின் ஸ்குரூக்களில் தங்கம் கடத்தல்