×

தஞ்சாவூர், நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளை கோடு அமைக்கும் பணி மும்முரம்

திருவாரூர், மே 20: ரூ.114 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டு வரும் தஞ்சாவூர், நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் சீரமைக்கப்பட்ட பகுதிகளில் நெடுஞ்சாலை துறையினர் வெள்ளை கோடு அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடகா மாநிலம் மைசூரிலிருந்து நாகை செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 67ல் தஞ்சையிலிருந்து நாகை வரையில் சாலை விரிவாக்க பணிக்காக கடந்த 2 வருடத்திற்கு முன்பு ஒன்றிய அரசு மூலம் 2ம் கட்டமாக ரூ 340 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது பணிகள் துவங்கியுள்ளன. இந்நிலையில் இந்த சாலை விரிவாக்க பணியானது ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்த பணியினை காரணம் காட்டி ஏற்கனவே இருந்து வரும் சாலையானது மிகவும் குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு பயனற்ற சாலையாக இருந்து வருகிறது. இதன் காரணமாக இந்த தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்று வரும் நிலையில் இந்த சாலையினை சீரமைக்க கோரி கடந்த அதிமுக ஆட்சி காலத்தின் 10 ஆண்டு காலமும் அவ்வப்போது போராட்டங்களும் நடைபெற்று வந்தன. இதனை ஒன்றிய அரசும், அதிமுக அரசும் செவிடன் காதில் ஊதிய சங்காகவே எடுத்துக்கொண்டன.

இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் திமுக ஆட்சியில் மக்களுக்கான பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த சாலையினை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இதுகுறித்து நெடுஞ்சாலைதுறை அமைச்சர் ஏ.வ.வேலு பெரும் முயற்சியின் காரணமாக ஒன்றிய அரசின் நிதி மூலம் ரூ.114 கோடியே 87 லட்சம் மதிப்பில் நாகப்பட்டினத்தில் இருந்து தஞ்சாவூர் வரையில் இந்த சாலையினை சீரமைக்கும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு காரணமான தமிழக அரசுக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ள நிலையில் தற்போது நாகையிலிருந்து திருவாரூர் வரையில் புதிதாக போடப்பட்டுள்ள இந்த சாலையில் தற்போது நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் சாலையின் இருபுறம் மற்றும் மையபகுதி ஆகியவற்றில் இயந்திரம் கொண்டு வெள்ளை கோடு அமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.

The post தஞ்சாவூர், நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளை கோடு அமைக்கும் பணி மும்முரம் appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Nagapattinam ,highway ,Tiruvarur ,Thanjavur- ,Nagapatnam National Highway ,
× RELATED அட்சய திருதியையொட்டி தஞ்சாவூர்...