நாகப்பட்டினம்,மே20: பமகுகளில் அதிக குதிரைத்திறன் கொண்ட சீன் இன்ஜின்களை பொருத்தப்பட்டு இருந்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குச் சட்டத்தின் படி கடலில் மீன்வள பெருகுவதற்காக ஏப்ரல் மாதம் 15 முதல் ஜூன் மாதம் 14ம் தேதி நள்ளிரவு வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடைக்காலத்தில் மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கரையில் நிறுத்தி வைத்துவிட்டு மீன்பிடி உபகரணங்களை பழுது நீக்கம் செய்வார்கள். இந்நிலையில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் நேற்று (19ம் தேதி) விசைப்படகுகள் ஆய்வு செய்யப்படும் என உத்தரவு பிறப்பித்து இருந்தனர். இதன்படி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் ஜெயராஜ் தலைமையில் தர்மபுரி உதவி இயக்குனர் கோகுல ரமணன் உள்ளிட்ட 11 குழுவினர் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு வந்தனர். இந்த குழுவினர் நாகப்பட்டினம் துறைமுகம், நாகூர், நம்பியார்நகர், ஆற்காடுத்துறை உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்தி வைத்திருந்த பதிவு பெற்ற 545 விசைப்படகுகளை ஆய்வு செய்தனர். ஆய்வின் போது படகு உரிமையாளர்கள் பெயர், படகுகளின் பதிவுச் சான்று, மீன்பிடி உரிமம், படகு காப்பீட்டு உரிமம், வரி விலக்கு அளிக்கப்பட்ட டீசல் பாஸ் புத்தகம் ஆகியவற்றை படகு உரிமையாளர்களிடம் இருந்து மீன்வளத்துறையினர் பெற்று ஆய்வு செய்தனர்.
மேலும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் வழங்கப்பட்ட தொலைதொடர்பு கருவிகள், கடல் பயணத்தின் போது பாதுகாப்பு கருவிகள் ஆகியவற்றையும் ஆய்வு செய்தனர். மீன்பிடி தடை காலங்களில் விசைப்படகுகளை பழுது நீக்கம் செய்து பொருத்தப்பட்ட புதிய இன்ஜின்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளோடு உள்ளதா? என்பது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். விசைப்படகுகளுக்கு அனுமதிக்கப்பட்ட நீளம் சரியாக உள்ளதா என்றும் பச்சை வண்ணங்கள் பூசப்பட்டு படகுகளில் பதிவு எண்கள் தொலை தூரத்தில் இருந்து பார்த்தாலும் தெரியும் படி தெளிவாக எழுதியுள்ளனரா என ஆய்வு செய்தனர். ஆய்வின் போது காண்பிக்கப்படாத விசைப்படகுகளுக்கு டீசல் மானியம் ரத்து செய்வதுடன் படகுக்கான பதிவு சான்றும் ரத்து செய்யப்படும். ஆய்வின்போது உட்படுத்தாமல் உள்ள படகுகளை வேறு நாட்களில் ஆய்வு செய்யக்கோரி படகு உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தால் அது ஏற்கப்படாது. அதிக குதிரைத்திறன் கொண்ட சீன இன்ஜின்கள் பொருத்தப்பட்டு இருந்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களிடம் தெரிவித்தனர்.
The post படகுகளில் அதிக குதிரைத்திறன் கொண்ட சீன இன்ஜின்கள் பொருத்தப்பட்டு இருந்தால் உரிமம் ரத்து செய்யப்படும் appeared first on Dinakaran.
