×

கோவையில் பாஜ செயற்குழு கூட்டம் கூட்டணி பேச அண்ணாமலை தயக்கம்: கர்நாடகா படுதோல்வி குறித்து ‘கப்சிப்’

கோவை: கோவையில் நடந்த பாஜ செயற்குழு கூட்டத்தில் கூட்டணி பற்றி அண்ணாமலை வாய் திறக்காமல் வெற்றிக்காக உழைக்க வேண்டும் என்று மட்டும் பேசினார். தமிழக பாஜ மாநில செயற்குழு கூட்டம் கோவை ஈச்சனாரி விநாயகர் கோவில் எதிரே உள்ள தனியார் மஹாலில் நேற்று நடந்தது. பாஜ மாநில தலைவர் அண்ணாமலை உள்பட பல தலைவர்கள் தங்களது ஜல்லிக்கட்டு காளைகளுடன் கூட்டத்துக்கு வந்திருந்தனர். இந்த கூட்டத்தில், சந்தோஷ், சுதாகர் ரெட்டி, சி.டி.ரவி, பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, எம்எல்ஏக்கள் காந்தி, நயினார் நாகேந்திரன், நடிகை நமீதா, இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ராஜாஜியின் பேரன் சி.ஆர்.கேசவன் உட்பட 920 செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

மொத்தம் 4 மணி கூட்டம் நேரம் நடந்தது. இதில், பாஜ மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது: வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தல் என்பது நமக்கு பலப்பரீட்சை. வீடு, வீடாக ஏறி, இறங்க வேண்டும். மக்களை சந்திக்க வேண்டும். இன்றில் இருந்து நமக்கு நாடாளுமன்ற தேர்தல் ஆரம்பித்து விட்டது. வெற்றி, தோல்வி பற்றி கவலைப்படாமல் உழைத்திடுங்கள். கூட்டணியில் இருக்கிறோம், கூட்டணியில் இல்லை, தனியாக போட்டி என எதைப்பற்றியும் கவலை கொள்ளாதீர்கள். அந்த எண்ணங்களை எல்லாம் தூக்கிப்போட்டு விட்டு, வெற்றியை மட்டும் இலக்காக வைத்து உழையுங்கள். எவ்விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் உழையுங்கள்.

இன்னும் 7 மாத காலம் உழையுங்கள். வெற்றி நமக்கு வசப்படும். இவ்வாறு அண்ணாமலை பேசினார். கூட்டணி குறித்து பேச அண்ணாமலைக்கு டெல்லி பாஜ மேலிடம் வாய் பூட்டு போட்டுள்ளது. மேலும், கர்நாடக தேர்தலில் பாஜ படுதோல்வியை சந்தித்தாலும், அண்ணாமலை மீது மேலிடம் அதிருப்தியில் உள்ளது. இதனால், இந்த செயற்குழு கூட்டத்தில் அண்ணாமலை அடக்கி வாசித்ததாக கூறப்படுகிறது. கூட்டத்துக்கு பின் நிருபர்களை சந்தித்த அண்ணாமலையிடம், கர்நாடகாவில் பாஜ படுதோல்வியடைந்தது குறித்து கேள்வி எழுப்பட்டது. இதற்கு அண்ணாமலை பதில் ஏதுவும் கூறவில்லை விறுவிறுவென நடையை கட்டினார்.

The post கோவையில் பாஜ செயற்குழு கூட்டம் கூட்டணி பேச அண்ணாமலை தயக்கம்: கர்நாடகா படுதோல்வி குறித்து ‘கப்சிப்’ appeared first on Dinakaran.

Tags : Anamalai ,Baja Executive Meeting Alliance ,Goa ,Karnataka ,Govai ,Baja Executive Meeting ,Annamalai ,Dinakaran ,
× RELATED மோடி வரும் நிலையில் வெடிகுண்டு மிரட்டல்: கோவையில் பரபரப்பு