×

காஞ்சிபுரத்தில் 2,112 வீடுகள் கட்டியதில் பல கோடி ஊழல் அதிகாரிகள் உட்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு: விசாரணை வளையத்தில் 3 மாஜி அமைச்சர்கள்

சென்னை: காஞ்சிபுரத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் 2,112 வீடுகள் கட்டியதில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. இது தொடர்பாக அரசு அதிகாரிகள் உட்பட 6 பேர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர். காஞ்சிபுரம் வேகவதி ஆற்றில் 2015ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஆற்று கரையோரம் வசித்த நூற்றுக்கும் மேற்பட்டோரின் வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதையடுத்து, அப்போதைய அதிமுக ஆட்சி காலத்தில் வீடுகளை இழந்த மக்களுக்கு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் வீடுகள் கட்டித்தர ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

அதன்படி காஞ்சிபுரம் கீழ்கதிர்பூர் பகுதியில் 6.99 ஹெக்டேர் பரப்பரவில், 33 பிளாக் 400.53 சதுர மீட்டர் பரப்பளவில் 2,112 வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதற்கான ஒப்பந்தம் நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கோரப்பட்டது. ஒப்பந்தத்தை சென்னை அண்ணாநகர் 17வது மெயின் ரோடை சேர்ந்த பி.என்.ஆர் என்ற தனியார் கட்டுமான நிறுவனம் ரூ.179.69 கோடிக்கு ஒப்பந்தம் எடுத்தது. அதன்படி கீழ்கதிர்பூர் பகுதியில் 4 மாடிகள் கொண்ட 2,112 குடியிருப்புகள் கட்டப்பட்டது. கட்டிய சில மாதங்களிலேயே கட்டிடத்தில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தரமற்ற நிலையில் கட்டிடம் கட்டியதாக கடந்த 20.9.2018ம் ஆண்டு ஜெகதீசன் என்பவர் புகார் அளித்தார்.

இதற்கிடையே திமுக ஆட்சியில் காஞ்சிபுரத்தில் ரூ.182.44 கோடியில் கட்டப்பட்ட 2,112 குடியிருப்புகள் தரமில்லை என தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் மற்றும் கட்டிட ஒப்பந்த நிறுவனம் மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் படி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில், நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அளிக்கப்பட்ட ஒப்பந்தத்தில் 37.21 எம்.சதுரடி வழங்கப்பட்டது. ஆனால் அந்த அளவை ஒப்பந்தம் எடுத்த பி.என்.ஆர் கட்டுமான நிறுவனம் தன்னிச்சையாக 33.04 எம்.சதுரடியாக குறைத்து கட்டிடம் கட்டியது. கட்டுமான பணியின்போது, விலைவாசி உயர்வை காரணம் காட்டி நிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்தம் தொகையுடன் கூடுதலாக ரூ.5 கோடியே 61 லட்சத்து 13 ஆயிரத்து 273 நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

மொத்தம் கட்டிடம் கட்டிய ஒப்பந்த நிறுவனத்திற்கு ரூ.182 கோடியே 44 லட்சத்து 47 ஆயிரத்து 631 வழங்கப்பட்டது. இது அரசு விதிகளுக்கு முரணானது. கட்டிடம் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்ட தொகை 168 கோடியே 90 லட்சத்து, 34 ஆயிரத்து 500 ரூபாய். இந்த தொகையில் சிவில் வேலைகள் அனைத்தும் சேர்ந்து 147 கோடியே 51 லட்சத்து 39 ஆயிரத்து 331 ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால் இந்த தொகையும் சேர்த்து கணக்கிட்டு ஒப்பந்ததாரருக்கு ஆதரவாக இந்த 5 அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர். இது மிகப்பெரிய விதி மீறலாகும். மேலும், விசாரணையில் சிவில் வேலைக்காக ஒதுக்கப்பட்ட ரூ.147.51 கோடி மற்றும் வாரியத்திற்கான தொகை ரூ.12.75 கோடிவுடன் சேர்ந்து மொத்தம் ரூ.160.26 கோடி ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டது. மேலும், ஒரிஜினல் அக்ரிமென்ட் தொகையாக ரூ.179.69 கோடியாக கணக்கிட்டு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

இதனால் அரசுக்கும் வாரியத்திற்கு 32 கோடியே 17 லட்சத்து 66 ஆயிரத்து 450 ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளனர். கூடுதலாக வழங்கப்பட்ட பணம் அந்த துறையை கவனித்து வந்த முன்னாள் அதிமுக அமைச்சரின் தலையீட்டின் படி வழங்கப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், அரசு விதிகளுக்கு முரணாக கட்டப்பட்ட கட்டிடத்திற்கு அனைத்து பணிகளையும் அப்போது நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் தலைமை அலுவலக மேற்பார்வை பொறியாளராக இருந்த தேவதாஸ், தலைமை பொறியாளர் ராஜூ மற்றும் காஞ்சிபுரம் நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் கோட்ட நிர்வாக பொறியாளர் மாலா, இளநிலை பொறியாளர் சுந்தரமூர்த்தி, உதவி பொறியாளர் திருப்பதி ஆகியோர் உடந்தையாக இருந்தது விசாரணை மூலம் உறுதியானது.

அதோடு இல்லாமல் ஒப்பந்த நிறுவனத்திற்கு ஒப்பந்த புள்ளி வழங்கிய போது, 12 விழுக்காடு ஜிஎஸ்டியுடன் பணம் வழங்கப்பட்டது. இதனால் தனியாக ஜிஎஸ்டி வரி கொடுக்க தேவையில்லை. ஆனால் உண்மையை மறைத்து ஒப்பந்ததாரருக்கு ரூ.1.29 கோடி பணம் கொடுக்கப்பட்டு 6 மாதங்கள் அரசு பணம் தனி நபரிடம் பாதுகாப்பு அற்ற முறையில் இருந்ததற்கு அதிகாரிகளே காரணம் என தெரியவந்தது.

அதைதொடர்ந்து காஞ்சிபுரத்தில் கீழ்கதிர்பூர் பகுதியில் தரமற்ற நிலையில் 2,112 குடியிருப்புகள் கட்டிய ஒப்பந்த நிறுவனம், அதன் நிர்வாகி சரண் பிரசாத் மற்றும் மோசடிக்கு துணையாக இருந்த நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் தலைமை அலுவலக மேற்பார்வை பொறியாளராக இருந்த தேவதாஸ், தலைமை பொறியாளர் ராஜூ மற்றும் காஞ்சிபுரம் நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் கோட்ட நிர்வாக பொறியாளர் மாலா, இளநிலை பொறியாளர் சுந்தரமூர்த்தி, உதவி பொறியாளர் திருப்பதி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை ஐபிசி 120(பி), 409, 167, 468, 471, 477(ஏ) மறறும் ஊழல் தடுப்பு சட்டம் 1988ன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதில் முதல் குற்றவாளியான நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைமை அலுவலக மேற்பார்வை பொறியாளர் தேவதாஸ் கடந்த 2018ம் ஆண்டு முன்பு ஓய்வு பெற்றுள்ளார். 2வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள மாலா, தற்போது சென்னை கிழக்கு சர்க்கல் -1ல் மேற்பார்வை பொறியாளராக பணியாற்றி வருகிறார். மூன்றாவது குற்றவாளியான ராஜூ கடந்த 31.5.2018ம் ஆண்டு ஓய்வு பெற்றுள்ளார். 4வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சுந்தரமூர்த்தி தற்போது சென்னை கோட்டம்-3ல் உதவி நிர்வாக பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

5வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள திருப்பதி, தற்போது சென்னை கோட்டம் 8ல் கண்ணகி நகரில் உதவி நிர்வாக பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். மேலும், வீடுகள் கட்டப்பட்டபோது வீட்டு வசதித்துறை அமைச்சராக வைத்திலிங்கம் இருந்தார். அதன் பின்னர் உடுமலை ராதாகிருஷ்ணன், பன்னீர்செல்வமும் அந்தப் பதவியை கூடுதலாக கவனித்து வந்தனர். தற்போது ஊழல் வெளியாகியுள்ளதால், அதிமுக அமைச்சர்கள் பலர் தற்போது கலக்கத்தில் உள்ளனர்.

The post காஞ்சிபுரத்தில் 2,112 வீடுகள் கட்டியதில் பல கோடி ஊழல் அதிகாரிகள் உட்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு: விசாரணை வளையத்தில் 3 மாஜி அமைச்சர்கள் appeared first on Dinakaran.

Tags : Kanjipuram ,Maji ministers ,Chennai ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...