×

வைத்திலிங்கம் தலைமையில் ஆலோசனை கூட்டம் சேலத்தில் இ.பி.எஸ்-ஓ.பி.எஸ்.,அணிகள் மோதல், கைகலப்பு: கொடி, போஸ்டர்களை கிழித்த எடப்பாடி ஆதரவாளர்கள் 29 பேர் கைது

சேலம்: சேலத்தில் அதிமுக கொடி கட்டுவது தொடர்பாக ஓபிஎஸ்-இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 29 பேர் கைது செய்யப்பட்டனர். சேலம் மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளில் நேற்று 4 இடங்களில் ஓபிஎஸ் அணி ஆதரவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஓபிஎஸ் அணியின் முக்கிய தலைவர்களும் முன்னாள் அமைச்சர்களுமான வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன் மற்றும் ஜேசிடி பிரபாகரன் ஆகியோர் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் தினேஷ் தலைமையில் மாநகரில் அதிமுக கொடிகளை நிர்வாகிகள் கட்டினர்.

சேலம் பேலஸ் தியேட்டர் பகுதியில் கூட்டம் நடக்கும் திருமண மண்டபத்தின் முன்பும் ஏராளமான கொடிகள் கட்டப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இபிஎஸ் அணி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான வெங்கடாசலம், பாலசுப்பிரமணியம் எம்எல்ஏ ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் அப்பகுதியில் திரண்டனர். அப்போது அவர்கள், கொடிகளை கட்டிக் கொண்டிருந்த ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் தினேஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ‘நாங்கள் தான் உண்மையான அதிமுக என்று தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. கட்சிக்கு எந்த தொடர்பும் இல்லாத நீங்கள் எப்படி அதிமுக கொடியை கட்டலாம்?’ என்று கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த வாக்குவாதம் கைகலப்பாகவும் மாறியது. இதற்கிடையில் சிலர் கொடிகளை பிடுங்கி வீசினர். தொடர்ந்து இருதரப்புக்கும் மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து இருதரப்பையும் சமாதானம் செய்தனர். இதற்கிடையில் அதிமுக மாவட்ட செயலாளர் வெங்கடாசலம், மாநகர போலீஸ் உதவி கமிஷனர் வெங்கடேசனை சந்தித்து புகார் ஒன்றையும் அளித்தார். அதில் ‘‘நாங்கள் தான் உண்மையான அதிமுக என்று தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. சம்மந்தம் இல்லாமல் எங்களது கட்சி கொடிகளை பயன்படுத்த அனுமதிக்க கூடாது’ என்றார். இதையடுத்து ஓ.பி.எஸ். அணி மாவட்ட செயலாளர் தினேஷ் மற்றும் நிர்வாகிகளை அழைத்து உதவி கமிஷனர் வெங்கடேசன் பேசினார். இதையடுத்து, சாலைகள் இருந்த அதிமுக கொடிகள் அகற்றப்பட்டது.

இதேபோல், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின், சொந்த ெதாகுதியான, சேலம் மாவட்டம் இடைப்பாடியில் சேலம் மேற்கு மாவட்ட ஓபிஎஸ் அணி ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது. இதையொட்டி கூட்டம் நடைபெறும் இடத்தில் பிளக்ஸ் பேனர், போஸ்டர், கொடிகளை நேற்று முன்தினம் கட்டினர். இதை கண்ட இபிஎஸ் அணியினர், பிளக்ஸ், போஸ்டர்களை கிழித்தனர். மேலும் சாலைகளில் கட்டியிருந்த அதிமுக கொடிகளையும் அகற்றினர். ஆலோசனை கூட்டம் நடத்த அனுமதி பெற்றதால், மண்டபத்தில் மட்டும் கொடிகளை பயன்படுத்த ஓபிஎஸ் அணிக்கு போலீசார் அனுமதி கொடுத்தனர். இந்நிலையில் நேற்று மாலை மேற்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் வைத்தியலிங்கம், புகழேந்தி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டம் நடந்து கொண்டிருந்த போது, இபிஎஸ் அணியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர், மண்டபத்தில் புகுந்து அதிமுக ெகாடியை அகற்றினர். பின்னர் இபிஎஸ் அணியை சேர்ந்த நகர செயலாளர் முருகன் தலைமையில் வந்தவர்கள், இடைப்பாடி- வெள்ளாண்டிவலசு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் 29பேரை குண்டு கட்டாக கைது செய்து, போலீஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்று, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். கூட்டம் இரவு 7மணிக்கு முடிந்ததும், இபிஎஸ் அணியை சேர்ந்த நங்கவல்லி ஒன்றிய அதிமுக செயலாளர் செல்வம் தலைமையில், 20க்கும் மேற்பட்டோர் அதிமுக கட்சி கொடியை நீங்கள் எப்படி பயன்படுத்தலாம் என, ஓபிஎஸ் அணியினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கைகலப்பில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, கலைந்து போகச் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

The post வைத்திலிங்கம் தலைமையில் ஆலோசனை கூட்டம் சேலத்தில் இ.பி.எஸ்-ஓ.பி.எஸ்.,அணிகள் மோதல், கைகலப்பு: கொடி, போஸ்டர்களை கிழித்த எடப்பாடி ஆதரவாளர்கள் 29 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Vaithilingam ,EPS ,OPS ,Salem ,Edappadi ,AIADMK ,Salem.… ,Dinakaran ,
× RELATED கட்சி மேலிடம் வேட்பாளரை அறிவிக்காத...