×

உரிமம் இல்லாத கழிவுநீர் லாரிகளை பறிமுதல் செய்ய சிறப்பு குழுக்கள்: சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் தகவல்

சென்னை, மே 20: சென்னை குடிநீர் வாரியம் சார்பில், கழிவுநீர் மேலாண்மை ஒழுங்குமுறை மற்றும் செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் குறித்து தனியார் கழிவுநீர் லாரி இயக்கும் உரிமையாளர், ஓட்டுநர் மற்றும் பணியாளர்களுக்கான விழிப்புணர்வு முகாம், சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது.சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் கிர்லோஷ் குமார் தலைமை வகித்து பேசியதாவது: மனித கழிவுகளை அகற்றும் தொழில்புரிவோர் தடுப்பு மற்றும் அவர்களது மறுவாழ்வு சட்டம் 2013, பிரிவு 7-ன்படி, எந்த ஒரு நபரும், ஒப்பந்ததாரரும் அல்லது எந்தவொரு நிறுவனமும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தவொரு நபரையும் அபாயகரமான முறையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்கு ஈடுபடுத்தவோ அல்லது பணியமர்த்தவோ கூடாது. அவ்வாறு ஈடுபடுத்தினால், அந்த நபருக்கு முதல் முறையாக மீறுபவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ₹2 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும். 2வது முறையாக மீறுபவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ₹5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம் உரிமம் பெற்ற லாரி உரிமையாளர்கள் மட்டுமே கழிவுநீர்த் தொட்டியிலிருந்து கழிவுநீரை அகற்ற அனுமதிக்கப்படுவார்கள். மேலும், இதுநாள் வரையிலும் உரிமம் பெறாத லாரி உரிமையாளர்கள் உடனடியாக உரிமம் பெற விண்ணப்பிக்க வேண்டும். சென்னை குடிநீர் வாரியத்தின் அங்கீகரிக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் கழிவுநீர் உந்து நிலையங்களில் மட்டுமே கழிவுநீர் வெளியேற்றம் செய்ய வேண்டும். உரிமம் பெறாத லாரிகளை ஆய்வு செய்ய சிறப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக கழிவுநீர்த் தொட்டியிலிருந்து கழிவுநீரை அகற்றுபவர்களை முதன்முறை விதிமீறலுக்கு ₹25,000 அபராதமும், 2ம் முறை விதிமீறலுக்கு ₹50,000 அபராதமும், தொடந்து விதிமீறும் லாரிகளை உரிய சட்ட விதிகளின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டு குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பணியாளர்களை கழிவுநீர்த் தொட்டி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தி, அவர் இறந்தால், இழப்பீட்டுத் தொகை ₹15 லட்சத்தினை வீட்டு உரிமையாளர் மற்றும் லாரி உரிமையாளர் ஆகிய இருவராலும் இறந்தவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்பட வேண்டும். பகுதிப் பொறியாளர்கள், சட்ட விரோதமாக கழிவு நீரகற்றுவதை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், வாரிய பொறியியல் இயக்குநர் ராஜாராம், தலைமைப் பொறியாளர் ராமசாமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post உரிமம் இல்லாத கழிவுநீர் லாரிகளை பறிமுதல் செய்ய சிறப்பு குழுக்கள்: சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai Drinking Water Board Management ,Chennai, ,Chennai Drinking Water Board ,Dinakaran ,
× RELATED பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக...