×

கர்நாடகா புதிய முதல்வராக சித்தராமையா இன்று பதவியேற்பு: மு.க.ஸ்டாலின் உள்பட 11 மாநில முதல்வர்கள் பங்கேற்பு

பெங்களூரு: கர்நாடக மாநில 16வது சட்டப்பேரவையின் புதிய முதல்வராக சித்தராமையா, துணைமுதல்வராக டி.கே.சிவகுமார் உள்பட அமைச்சர்கள் இன்று பதவியேற்கிறார்கள். இவ்விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட 11 மாநில முதல்வர்கள் மற்றும் தேசியளவில் தலைவர்கள் பங்கேற்கிறார்கள். கர்நாடக மாநிலத்தின் 15வது சட்டப்பேரவையின் பதவி காலம் வரும் 24ம் தேதி முடிகிறது. 16வது சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 10ம் தேதி நடந்தது. அதில் பதிவான வாக்குகள் 13ம் தேதி எண்ணப்பட்டது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் 135, பாரதிய ஜனதா கட்சி 66, மஜத 19 தொகுதிகளிலும் 4 பேர் சுயேட்சைகளாக வெற்றி பெற்றனர்.

காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றதை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டமன்ற கட்சி தலைவராக சித்தராமையா நேற்று முன்தினம் தேர்வு செய்யப்பட்டார். அதை தொடர்ந்து தங்கள் கட்சியை ஆட்சி அமைக்க அழைக்கும்படி ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் உள்பட கட்சியின் மூத்த தலைவர்கள் நேரில் சந்தித்து கடிதம் கொடுத்தனர். அதையேற்று கொண்ட ஆளுநர் மே 20ம் தேதி (இன்று) பகல் 12.30 மணிக்கு பதவியேற்பு விழா பெங்களூரு கண்டீரவா விளையாட்டு அரங்கில் நடத்தப்படும் என்று தெரிவித்தார். அதன்படி இன்று பகல் பதவியேற்பு விழா நடக்கிறது. இதில் முதல்வராக சித்தராமையா, துணைமுதல்வராக டி.கே.சிவகுமார் உள்பட சில அமைச்சர்கள் பதவியேற்கிறார்கள். அவர்களுக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.

இவ்விழாவில் கலந்து கொள்ளும்படி காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல்காந்தி உள்பட பல மாநில முதல்வர்கள், முன்னாள் முதல்வர்கள், இடதுசாரி கட்சி தலைவர்கள் என பலருக்கும் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியதுடன், தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்தார். கார்கே அழைப்பை ஏற்று பலர் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதாக உறுதியளித்தனர். அதன்படி இன்று நடக்கும் விழாவில் சோனியாகாந்தி, ராகுல்காந்தி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக்கெலாட், பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார், இமாச்சலபிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங், புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி, ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரான், சத்தீஷ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பகேல் உள்பட 11 மாநில முதல்வர்கள், தேசிய தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

வெளி மாநிலங்களில் இருந்து வரும் முதல்வர்களுக்கு ‘இசட் பிளஸ்’, மற்றும் ‘இசட்’ கேடரில் போலீஸ் பாதுகாப்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பதவியேற்பு விழாவின் போது அசம்பாவிதம் நடக்காமல் தவிர்க்க மாநில போலீசாருடன் சிஆர்பிஎப், எஎஸ்எல் பெட்டாலியன் படையும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மாநகரில் 12 துணை போலீஸ் கமிஷனர்கள், 11 ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 11 ஆயுதப்படை துணை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்பட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

* விழாவில் பங்கேற்க டி.கே.சிவகுமார் அழைப்பு

இதனிடையில் பெங்களூரு கண்டீரவா உள்விளையாட்டு அரங்கில் செய்தியாளர்களிடம் நேற்று டி.கே.சிவகுமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, நாளை (இன்று) முதல் மக்கள் விரும்பும் ஆட்சி பொறுப்புக்கு வருகிறது. இது காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி கிடையாது. 7 கோடி மக்களின் ஆசிர்வாதத்தால் அமைந்துள்ள ஆட்சி, நாங்கள் மட்டும் சொந்தம் கொண்டாட மாட்டோம். ஒட்டு மொத்த மாநில மக்களும் கொண்டாடும் ஆட்சியாக இருக்கும். நாளை (இன்று) நடக்கும் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் மட்டுமில்லாமல், பாரதிய ஜனதா, மதசார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள் உள்பட அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன் என்று கேட்டு கொண்டார்.

The post கர்நாடகா புதிய முதல்வராக சித்தராமையா இன்று பதவியேற்பு: மு.க.ஸ்டாலின் உள்பட 11 மாநில முதல்வர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Siddaramaiah ,Chief of ,Karnataka ,Stalin ,Bengaluru ,Sidderamaiah ,D.C. K.K. ,Sivamar ,Sitaramaiah ,B.C. ,Dinakaran ,
× RELATED வறட்சி நிவாரணத்தை உடனடியாக விடுவிக்க...