×

இனி தடை ஏதும் இல்லை

ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுகளில் ஒன்று. மதுரை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் ஜல்லிக்கட்டின் சொர்க்க பூமியாக கருதப்படுகிறது. இப்போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் என விலங்குகள் நல அமைப்புகள் சார்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையில், நீதிபதிகள் அஜய், அனிருத்தா, ரிஷிகேஷ் ராய், சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டம் செல்லும் என வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பளித்துள்ளது.

அதில், கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் ஜல்லிக்கட்டு உள்ளது. ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழ்நாடு அரசு கொண்டுவந்த சட்டத்தில் எந்த தவறும் இல்லை, தமிழ்நாடு அரசின் சட்டம் திருப்தி அளிக்கிறது என குறிப்பிட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு கலாச்சார நிகழ்வு என்பதை மாநில அரசின் சட்டமே தீர்மானிக்கும், ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படாமல் இருப்பதை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியுள்ளனர். இதன் மூலம் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பாரம்பரிய போட்டிகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

இந்த தீர்ப்பினை, ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பவர்களும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் கொண்டாடி வருகின்றனர். இந்த தீர்ப்பு குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘‘தமிழர்தம் வீரத்தையும், பண்பாட்டையும் வெளிப்படுத்தும் விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தடையில்லை என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்திருப்பது தமிழ்நாட்டு வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது’’ என்று பதிவிட்டுள்ளார். ‘‘ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் கலாச்சாரம் சார்ந்த நிகழ்வு, பாரம்பரியம், இறை வழிபாடு அம்சங்களுடன் தொடர்புடையது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு கொண்டுவந்த சட்டத்திற்கு குடியரசு தலைவரும் ஒப்புதல் அளித்ததால், விலங்குகள் நல அமைப்புகளின் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று தமிழ்நாடு அரசு வாதிட்டது. இதை, உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, வரலாற்று சிறப்புமிக்க இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் மகத்தான இந்த தீர்ப்பை தமிழ்நாடே கொண்டாடுகிறது. இனி, ஒவ்வொரு தை மாதம் பிறக்கும்போதும் ஜல்லிக்கட்டு போட்டி பற்றி கவலை கொள்ள வேண்டியதில்லை. போட்டி வழக்கமான விறுவிறுப்புடன் நடைபெறும், தமிழர் வீர விளையாட்டு மற்றும் கலாச்சாரம் உலகெங்கும் மீண்டும் ஒலிக்கும் என போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

இது, தமிழ்நாட்டின் பண்பாட்டுக்கும், மரபுக்கும் கிடைத்த வெற்றி என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த வெற்றிக்காக திமுக உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் போராடியுள்ளனர். இருப்பினும், இளைஞர்கள் தாமாக முன்வந்து, சென்னை மெரினா கடற்கரையில் குவிந்து, அறவழி போராட்டம் நடத்தி, உலகையே திரும்பி பார்க்க வைத்த நிகழ்வையும் யாரும் மறக்க முடியாது.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கிறது. இது, இளைஞர்களின் போராட்டத்துக்கும், தமிழக அரசுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். இதன்மூலம் தமிழ்நாட்டின் பண்பாட்டு மரபு நிலைநாட்டப்பட்டுள்ளது. நமது இளைஞர்கள் மீண்டும் களம் இறங்கி, தமிழர்களின் வீரத்தை நிலைநாட்ட இனி தடை ஏதும் இல்லை.

The post இனி தடை ஏதும் இல்லை appeared first on Dinakaran.

Tags : Jallikatu ,Tamils ,Madurai ,Pudukkotta ,Jallikat ,
× RELATED மகளிர் நோய்களும் சித்த மருத்துவமும்!