×

விஷ சாராய விஷயத்தில் அப்செட் ஆன புதுவை பிரமுகர்களை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘விஷசாராய வழக்கில் தமிழ்நாடு போலீசுக்கு பதிலாக, வேறு மாவட்ட விவிஐபிக்கள் டென்ஷனில் இருப்பது ஏன்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் எக்கியர்குப்பம் மீனவர் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 13 பேர் பலியானது தமிழகத்தையே உலுக்கியது. காரணம், சாராய வியாபாரிகள் மெத்தனாலில் தண்ணீர் கலந்து கொடுத்ததால் தான் பலி எண்ணிக்கை உயர்ந்தது என அதிர்ச்சி ரிப்போர்ட்டை தமிழக போலீஸ் உறுதி செய்தது. புதுச்சேரியில் இருந்து எரிசாராயத்தை சாராய வியாபாரிகள், வாங்கி வந்து தண்ணீர் கலந்து மரக்காணம் பகுதியில் பல மாதங்களாக விற்றுவந்துள்ளனர். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்ததால் அங்கிருந்து புதுச்சேரிக்கு எரிசாராயம் வருவது தடைப்பட்டது.

இதையடுத்து சாராயத்துக்கு மாற்றாக மெத்தனால் பயன்படுத்தி சாராயமாக விற்க முடிவு செய்த வியாபாரிகள், புதுச்சேரி ஏஜெண்ட் மூலம் சென்னை தொழிற்சாலைக்கு மெத்தனாலை கொண்டு வந்து அங்கிருந்து மரக்காணம் பகுதிக்கு சப்ளை செய்துள்ளனர். அன்றைய தினம் அதனை குடித்தவர்கள் பலியானார்கள். கள்ளச்சாராயம் சாவு தொடர்பாக தமிழக தலைமை செயலர், புதுச்சேரி தலைமை செயலருக்கு விரிவான கடிதம் எழுதினாராம். அதனை புதுவை அரசு கிடப்பில் போட்டுள்ளது. ஆதாரங்களுடன் மீண்டும் கடிதம் எழுதி இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது தொடர்பாக கேள்வி எழுப்பி உள்ளார். இதையடுத்து கண்துடைப்பாக கலால் துறையில் முக்கிய அதிகாரி டம்மியான துறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். இவரது மாற்றத்துக்கு ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் முக்கிய இரு தலைமைக்கு இஷ்டம் இல்லையாம்.

காரணம் இவர் தான் இருவருக்கும் மாத மாதம் கமிஷன் தொகையை வழங்குவாராம். அதிகாரியின் மாற்றம் இருவருக்கும் கை உடைந்த மாதிரி ஆகிவிட்டதாம். இதனால் ஓரிரு மாதங்களில் மீண்டும் இவர் அதே துறைக்கு மாற்றிடலாம் என்ற நினைப்பில் தான் இந்த டிரான்ஸ்பராம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ பொதுப்பணிதுறை அதிகாரிகளை பதற வைத்த கலெக்டர் பற்றி சொல்லுங்கோ…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘அல்வா மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கால்வாய் பாசன ஆக்ரமிப்பு தொடர்பாக பொதுப்பணித்துறை அளித்த பதிலால் அந்த மாவட்ட கலெக்டருக்கு கோபம் வந்துவிட்டதாம். அந்த மீட்டிங்கில் பொதுப்பணித்துறை அதிகாரிகளை ஒரு பிடி பிடித்து விட்டார். அதாவது, பொதுப்பணித் துறை குளங்கள் அனைத்தையும் நில அளவைத் துறையினர் உதவியுடன் சர்வே செய்து ஜிஐஎஸ் மேப்பிங் தயார் செய்து விட்டனர்.

எதற்கு மீண்டும் கடிதப் போக்குவரத்து, வருவாய் துறையுடன் இணைந்து கூட்டாக தணிக்கை செய்து ஆக்ரமிப்பு இல்லை அல்லது இருக்கிறது என பதில் சொல்லுங்கள் என அரசு ஆணையை சுட்டிக் காட்டி புட்டுப் புட்டு வைத்தாராம் கலெக்டர். அது மட்டுமா, அரசு ஆணையை நீங்கள் படிக்கவில்லை, அதனால் தான் இப்படி பதில் எழுதுகிறீர்கள். கடித போக்குவரத்து இருக்கவே கூடாது என அதிகாரிகளை வறுத்து விட்டாராம். பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு வியர்த்து போய் விட்டதாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ தொட்டதுக்கெல்லாம் கை நீட்டுவது யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘ஸ்டேட்ல காக்கி அதிகாரிகள் முதல் கவர்மெண்ட் அதிகாரிகள் வரையில, தப்பு செஞ்சா பாரபட்சமில்லாம நடவடிக்கை எடுக்கப்பட்டு வருது. குயின்பேட்டை மாவட்டத்துல மட்டும் பாக்கம்னு முடியுற காக்கிகள் நிலையத்துல இருக்குற காக்கிகள் எதுக்கும் பயப்படாம கை நீட்டுறாங்களாம்.

சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது பாக்கம் காவல் நிலையம். இதன் எல்லையில பெயரின் முடிவுல வெளிதாங்கிபுரம், பட்டு என்று முடியுற ஏரியா, ஜங்ஷன்கள்ல ஆக்சிடெண்ட் நடந்தா புகார் கொடுக்க காக்கிகள் நிலையத்துக்கு பப்ளிக் வரமறுக்குறாங்களம். காரணம் புகார் கொடுக்க வர்றவங்ககிட்டயே 5 ஆயிரம் வரை கேட்குறாங்க. இதனால புகார் கொடுக்க பப்ளிக் வருவதே இல்லையாம். ஆடு, மாடு திருட்டு கேசுக்கும் பீஸ் வாங்குறாங்களாம். இப்படி தொட்டதுக்கெல்லாம் கை நீட்டுனா ஏழைகள் எங்கே போவாங்க. அதனால, காக்கிகள் மீது நடவடிக்கை எடுக்கணும் என்ற மக்களின் குரல் ஓங்கி ஒலிக்கிறதாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘எடைக் கல்லுக்கு ஏற்ப தானே அரிசி இருக்கும்… கட்சியின் பலத்துக்கு ஏற்ப தானே ெதாண்டர்கள் கூட்டம் இருக்கும் என்று எதிர்கட்சி தலைவர்கள், தாமரை தலைவரை பார்த்து பேசுவது காதில் கேட்குதா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.

‘‘கடலோர மாவட்டத்தில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை அரசு மருத்துவக்கல்லூரிக்கு இடமாற்றம் செய்வதை கண்டித்து தாமரை கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில், அதிக அளவில் தொண்டர்கள் வருவார்கள் என தாமரை மாநில நிர்வாகி எதிர்பார்த்து இருந்தார். ஆனால் எதிர்பார்த்த அளவில் கூட்டம் வரவில்லை. குறைவான தொண்டர்கள் தான் வந்தாங்க. இதனால் மாநில நிர்வாகி கடும் அதிர்ச்சி அடைந்தார். ஆர்ப்பாட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் காக்கி அதிகாரிக்கு எதிராக கோஷம் எழுந்ததாம். இதனால் ஆர்ப்பாட்டத்துக்கு வந்திருந்த தொண்டர்கள் டென்ஷனாகிட்டாங்களாம். அரசு மருத்துவமனை இடமாற்றத்தை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் காக்கிக்கு எதிராக கோஷம் எழுப்புவது ஏன் என அவர்களுக்குள் புலம்பினாங்க.

அரசு மருத்துவமனைக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டம், திசை மாறி காக்கி அதிகாரிகளை ஏகத்துக்கும் திட்டும் அளவுக்கு மாறி போச்சாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கஞ்சா வியாபாரியை நம்பி ஏமாந்த போலீஸ் பற்றி சொல்லுங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘சென்னை டாமரின்ட் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் போலீசார் பெண் கஞ்சா வியாபாரி ஒருவரை பிடிச்காங்க. அவரது வீட்டில் இருந்து மூன்றரை கிலோ கஞ்சா கிடைச்சுதாம். அது இல்லாம அவரது வீட்டில் இருந்த 3 சின்ன பசங்கள் குறித்து விசாரிச்சாங்க. அவர்களிடமிருந்து நான்கு பெரிய கத்திகள் இருந்ததாம். அவர்களை காவல் நிலையத்தில் வைத்து காக்கிகள் தங்கள் பாணியில் விசாரிச்சாங்க.

அதற்கு அந்த பெண் கஞ்சா வியாபாரி நாளை எனக்கு பெரிய அளவில் சரக்கு வருது. அதை தருகிறேன், இப்போ எங்களை விடுங்க என்று கூறி 3 சிறுவர்களுடன் போலீஸ் நிலையத்தைவிட்டு அந்த பெண் எஸ்கேப் ஆகிட்டாராம். பெண் கஞ்சா வியாபாரியை பக்கத்து லிமிட்டில் உள்ள தலைமைச் செயலக போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். இதன்மூலம் சிறுவர்கள் ஏன் கத்தியுடன் அங்கு இருந்தாங்க. பெண் கஞ்சா வியாபாரிக்கும், சிறுவர்களுக்கும் என்ன தொடர்பு என்று ேபாலீசார் விசாரிக்கிறாங்களாம். எனினும் டாமரின்ட் போலீசார் தாங்கள் திறமையாக ஏமாற்றப்பட்டதை நினைத்து கொதித்து போயிருக்காங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

The post விஷ சாராய விஷயத்தில் அப்செட் ஆன புதுவை பிரமுகர்களை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Puduvai ,Yananda ,Tamil Nadu police ,Uncle ,Peter ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு;...