×

செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூரில் ரூ.36 கோடியில் புதிய மாவட்ட காவல் அலுவலகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ரூ.36.39 கோடி செலவில் கட்டப்பட்ட மாவட்ட காவல் அலுவலகங்களை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்து, இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 3,271 நபர்களுக்கு பணி ஆணைகளை வழங்கினார். சென்னை, தலைமைச்செயலகத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காவல் துறை சார்பில் செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய இடங்களில் ரூ.36.39 கோடி செலவில் கட்டிய 3 மாவட்ட காவல் அலுவலகக் கட்டிடங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். மேலும், 3,271 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளையும் அவர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா, காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு, தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் விசுவநாதன், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவர் சீமா அக்ரவால், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், காணொலிக் காட்சி வாயிலாக செங்கல்பட்டிலிருந்து குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ். பாலாஜி, எம்.பாபு, வரலட்சுமி மதுசூதனன், கலெக்டர் ராகுல்நாத், காஞ்சிபுரம் சரக காவல் துணைத் தலைவர் பகலவன், எஸ்.பி., (பொறுப்பு) எம்.சுதாகர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள், அதேபோல, ராணிப்பேட்டையிலிருந்து கலெக்டர் வளர்மதி, எஸ்பி டி.வி.கிரண் ஸ்ருதி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள், திருப்பத்தூரிலிருந்து சட்டமன்ற உறுப்பினர்கள் நல்லதம்பி, தேவராஜீ, வில்வநாதன், கலெக்டர் பாஸ்கர பாண்டியன், எஸ்பி பாலகிருஷ்ணன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

* 3,271 காவலர்களுக்கு பயிற்சி
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் வாயிலாக இரண்டாம் நிலை காவலர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 2617 ஆண்கள் மற்றும் 654 பெண்கள், என மொத்தம் 3271 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, முதற்கட்டமாக 10 நபர்களுக்கு இரண்டாம் நிலை காவலர் பணியிடத்திற்கான பணிநியமன ஆணைகளை முதல்வர் வழங்கி உள்ளார். இதன்மூலம், தேர்வு செய்யப்பட்ட இரண்டாம் நிலை காவலர்களுக்கு திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், திருச்சி, சேலம், கோயம்புத்தூர், மதுரை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள நிரந்தர காவலர் பயிற்சி பள்ளிகளில் அடுத்தமாதம் 1ம் தேதி முதல் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

The post செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூரில் ரூ.36 கோடியில் புதிய மாவட்ட காவல் அலுவலகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : New District Office ,Chengalpadu, Ranipetta, Tirupathur ,CM ,G.K. Stalin ,Chennai ,Tamil ,Nadu ,Chief Minister ,Chengalpattu ,Ranipette ,Tirupattur ,New District Officer ,Chengalputtu, Ranipetta, Tirupatur ,Chief Chief Chief Chief Officer ,Dinakaran ,
× RELATED குமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி...