பார்சிலோனா: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் இருந்து விலகியுள்ள ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால், 2024 சீசனுடன் ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 22 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று மகத்தான சாதனை வீரராகத் திகழும் நடால் (36 வயது), இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின்போது இடுப்பு பகுதியில் காயம் அடைந்தார். நீண்ட ஓய்வுக்குப் பிறகும் முழு உடல்தகுதி பெற முடியாமல் தவித்து வரும் அவர் தொடர்ச்சியாக பல போட்டிகளில் இருந்து விலக நேர்ந்தது.
நடாலின் அபிமான தொடராக விளங்கும் பிரெஞ்ச் ஓபனில் எப்படியும் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மே 28ம் தேதி தொடங்க உள்ள அந்த தொடரில் இருந்தும் விலகுவதாக நேற்று அறிவித்தார். களிமண் தரை மைதானத்தில் நடக்கும் பிரெஞ்ச் ஓபனில் அவர் 14 முறை சாம்பியன் பட்டம் வென்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 2024 சீசனே தான் விளையாடும் கடைசி சீசனாக இருக்கும் என்றும் அதன் பிறகு டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாகவும் நடால் தெரிவித்துள்ளது, அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
The post பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் விலகினார் நடால்: 2024 சீசனுடன் ஓய்வு appeared first on Dinakaran.