×

3 நாடுகள் பயணம் தொடங்கியது ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி: ஜி7 மாநாட்டில் இன்று பங்கேற்பு

புதுடெல்லி: பிரதமர் மோடி ஜப்பான், பப்புவா நியூ கினியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை நேற்று தொடங்கினார். முதற்கட்டமாக ஜப்பான் சென்றடைந்த அவர், ஹிரோஷிமாவில் இன்று ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். கனடா, பிரான்ஸ், ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து ஜி7 அமைப்பை உருவாக்கி உள்ளன. இந்த அமைப்பின் உச்சி மாநாடு ஜப்பானின் ஹிரோஷிமாவில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க பிரதமர் மோடிக்கு ஜப்பான் பிரதமர் கிஷிடா அழைப்பு விடுத்துள்ளார். இதை ஏற்று ஜி7 மாநாட்டில் பங்கேற்கவும், அதைத் தொடர்ந்து பப்புவா நியூ கினியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கு செல்லவும் 6 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று புறப்பட்டுச் சென்றார்.

முதற்கட்டமாக ஜப்பானின் ஹிரோஷிமாவுக்கு சென்றடைந்த அவருக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த பயணத்திற்கு முன்பாக பிரதமர் மோடி தனது டிவிட்டரில், ‘‘ஜி20 மாநாட்டை நடத்தும் பொறுப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ள நிலையில், ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்பது மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கும். சர்வதேச நாடுகள் சந்திக்கும் பிரச்னைகள், அவற்றை எதிர்கொள்வதில் இருக்கும் சவால்கள் போன்றவை இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட இருக்கிறது’’ என்றார். உக்ரைன் விவகாரம், உணவு, உரம், எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட சர்வதேச விவகாரங்களில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து பிரதமர் மோடி விளக்க உள்ளார்.

மேலும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உள்ளிட்ட உலக தலைவர்களையும் மாநாட்டின் இடையே சந்தித்து பேச உள்ளார். நாளை வரை ஹிரோஷிமாவில் இருக்கும் பிரதமர் மோடி, 22ம் தேதி பப்புவா நியூ கினியாவில் உள்ள போர்ட் மோர்ஸ்பிக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு இந்தோ பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு 3வது உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். இதில் பப்புவா நியூகினியா பிரதமர் ஜேம்ஸ் மராப் மற்றும் 14 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.பயணத்தின் 3வது மற்றும் கடைசி கட்டமாக 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை பிரதமர் மோடி ஆஸ்திரேலியா செல்கிறார்.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் நாடுகளை கொண்ட குவாட் உச்சி மாநாடு நடக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அமெரிக்காவில் கடன் உச்ச வரம்பு அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருப்பதால் ஆஸ்திரேலிய பயணத்தை அமெரிக்க அதிபர் பைடன் ரத்து செய்தார். இதன் காரணமாக குவாட் மாநாடு தற்போது ஹிரோஷிமாவிலேயே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பிரதமர் மோடி ஏற்கனவே திட்டமிட்டபடி ஆஸ்திரேலியா சென்று அந்நாட்டு பிரதமர் அல்பானிசை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். மேலும் சிட்னியில் இந்திய வம்சாவளியினரை சந்தித்து பேசவும் உள்ளார். 3 நாடுகள் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி வரும் 24ம் தேதி நாடு திரும்புவார்.

The post 3 நாடுகள் பயணம் தொடங்கியது ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி: ஜி7 மாநாட்டில் இன்று பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Modi ,G7 ,Japan ,New Delhi ,Papua New Guinea ,Australia ,Dinakaran ,
× RELATED விரக்தியடைந்து, ஏமாற்றமடைந்துள்ள...