×

உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரொலி; ஜல்லிக்கட்டு கிராமங்களில் கொண்டாட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கிராம மக்கள் நன்றி

அலங்காநல்லூர்: ஜல்லிக்கட்டு நடத்த தடையில்லை தீர்ப்பு எதிரொலியாக அலங்காநல்லூர், பாலமேட்டில் மக்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர். மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்தனர். மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் மற்றும் பாலமேட்டில் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு நடைபெறும். இது தவிர தமிழகம் முழுவதும் கோயில் திருவிழாக்களையொட்டி சாதி, மத வேறுபாடு இல்லாமல் ஜல்லிக்கட்டு நடக்கும். இந்நிலையில், ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதாகவும், காளைகளால் மனிதர்களுக்கும், மனிதர்களால் காளைகளுக்கும் பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் விலங்குகள் நலவாரிய கூட்டமைப்பு மற்றும் பீட்டா அமைப்பு சார்பாக நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டது.

வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு:
மேலும், ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த விடாமல் நிரந்தர தடை விதிக்க வலியுறுத்தி வழக்கு நடந்து வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை இல்லை என்றும், எப்போதும் போல் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளோடு நடத்தலாம் என உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு நேற்று வெளியானது. இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை வரவேற்று மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் மற்றும் பல்வேறு ஜல்லிக்கட்டு விழா கமிட்டினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கிடைத்த தீர்ப்பையொட்டி வாடிப்பட்டி பேரூர் திமுக சார்பில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இதில் பேரூராட்சி சேர்மன் பால்பாண்டியன், துணை சேர்மன் கார்த்திக், பேரூர் துணை செயலாளர் ஜெயகாந்தன், அவை தலைவர் திரவியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா கமிட்டி நிர்வாகிகள் ரகுபதி, கோவிந்தராஜன் கூறுகையில், ‘‘ஜல்லிக்கட்டை தடுத்து நிறுத்துவதற்காக பல்வேறு அமைப்புகள் பல ஆண்டுகள் தொடர்ந்து வழக்குகளை நடத்தி வந்தது. இவ்வழக்குகளில் தகுந்த சட்ட வழிமுறைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டுக்கு இருந்த தடையை நிரந்தரமாக விலக்கி, தொடர்ந்து நடைபெற வழிவகுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி’’ என்றனர். ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற அலங்காநல்லூர் பேரூராட்சி சேர்மன் ரேணுகா ஈஸ்வரி கூறுகையில், ‘‘தமிழ்நாட்டின் பாரம்பரிய விழாவான ஜல்லிக்கட்டை நடத்த தடை இல்லை என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை வழங்கிய உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்விற்கும்,

ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து மக்களுக்கும், மாணவர்களுக்கும் மற்றும் சட்டப் போராட்டத்தினை தொடர்ந்து தொய்வின்றி நடத்தி நல்லதொரு தீர்ப்பினை பெற்று தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன் மற்றும் அனைத்து ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் அலங்காநல்லூர் கிராம மக்கள் சார்பாக நன்றி’’ என்றார்.

The post உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரொலி; ஜல்லிக்கட்டு கிராமங்களில் கொண்டாட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கிராம மக்கள் நன்றி appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Jallikattu ,Chief Minister ,G.K. ,Stalin ,Alanganallur ,Palamette ,B.C. G.K. ,
× RELATED நீட் வினாத்தாள் கசிவு: தேர்வை மீண்டும் நடத்தக்கோரி மனு