×

திருப்பத்தூரில் கும்கிகளின் உதவியுடன் பிடிபட்ட 2 யானைகள்: ஒசூர் அருகே அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது..!

கிருஷ்ணகிரி: திருப்பத்தூரில் பிடிக்கப்பட்ட 2 காட்டு யானைகள் ஒசூர் அருகே அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது. கர்நாடக வனப்பகுதியில் இருந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு 5 காட்டு யானைகள் வெளியேறின. இதில் 2 ஆண் யானைகள் கடந்த 6ம்தேதி தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சுற்றித்திரிந்துவிட்டு திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே கடந்த 6 நாட்களுக்கு முன் வந்தது. இந்த யானைகள் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்தன. தொடர்ந்து ஏலகிரிமலை, ஜோலார்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வந்த யானைகள், நேற்றுமுன்தினம் திருப்பத்தூரில் உள்ள குடியிருப்பு பகுதிகள் அருகே இடம் பெயர்ந்தன.

பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாவிட்டாலும் பொதுமக்கள் கடும் பீதியில் இருந்தனர். இந்த யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கான முயற்சிகளில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டனர். ஆனால் அவற்றுக்கு சரியான பாதை தெரியாததால் விரட்டுவதில் சிக்கல் நீடித்தது. இதையடுத்து கும்கி யானைகள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் மூலம் மயக்க ஊசி செலுத்தி இவற்றை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி நேற்று நீலகிரி மாவட்டம் முதுமலை சரணாலயத்தில் இருந்து சின்னத்தம்பி, வில்சன், உதயன் ஆகிய 3 கும்கி யானைகள் லாரிகளில் தனித்தனியாக கொண்டுவரப்பட்டது. நேற்று மாலை காட்டு யானைகள் நடமாடும் பகுதிக்கு கும்கிகளை அழைத்து வந்தனர்.

புதருக்குள் மறைந்திருந்த காட்டு யானைகளை பட்டாசுகள் வெடித்து புதரில் இருந்து சம நிலபரப்பு பகுதிக்கு இடம்பெயரச்செய்தனர். அப்போது தயார் நிலையில் இருந்த கால்நடை மருத்துவ குழுவினர் துப்பாக்கி மூலம் 3 முறை மயக்க ஊசி செலுத்தினர். தொடர்ந்து 2 யானைகளும் அடுத்தடுத்து மயங்கி விழுந்தன. அதன்பிறகு 2 யானைகளையும் வேட்டை தடுப்பு காவலர்கள், வனத்துறையினர் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் முன்னிலையில் காலில் கயிறுகள் கட்டி அங்குள்ள மரத்தில் கட்டிபோட்டு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தனர். இதையடுத்து 2 யானைகளும் கும்கிகளின் உதவியுடன் லாரிகளில் ஏற்றப்பட்டன. இதையடுத்து இன்று அதிகாலை 2 மணியளவில் லாரிகள் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டன. ஒசூர் பகுதியில் உள்ள தமிழக-கர்நாடக பகுதி நோக்கி லாரிகள் புறப்பட்டன.

இந்த 2 காட்டு யானைகளையும் தமிழக-கர்நாடக பகுதிகளில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் இன்று மாலைக்குள் விட திட்டமிடப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து கூட்டமாக வரும்போது ஒசூர் அருகே வழிதவறியதால் அந்த யானை கூட்டம் அங்குதான் இருக்கும் என்பதால் தற்போது பிடிபட்ட 2 யானைகளையும் அவற்றுடன் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் இந்த 2 காட்டு யானைகள் ஒசூர் அருகே அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 6 நாட்களாக அட்டகாசம் செய்த யானைகள் பிடிபட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

The post திருப்பத்தூரில் கும்கிகளின் உதவியுடன் பிடிபட்ட 2 யானைகள்: ஒசூர் அருகே அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது..! appeared first on Dinakaran.

Tags : Kumkis ,Tirupattur ,Osur ,Thirupathur ,Karnataka forestland ,
× RELATED வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர்...