×

வைகாசி விசாகமும் திரிபுரமெரித்த ஐதீகத் திருவிழாவும்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

உலகம் இன்பத்தில் திளைத்துக் கொண்டிருந்ததைப் பொறாத மூன்று அசுரர்கள் மூன்று மலைகளாக மாறி, உலகை அழிக்கத் தொடங்கினர். அப்போது சிவபெருமான் அம்மூவரையும் அழித்து அருளியதையே “திரிபுர சம்ஹாரம்’’ என்கிறோம். இப்படி திரிபுரம் எரித்த அருட்செயல் இன்னும் ஆண்டு தோறும் ஐதீக விழாவாக ஒருதலத்தில் கொண்டாடப்படுகிறது.

இறைவன் தன்னுடைய ஒப்பற்ற வீரத்தைக் காட்டிய எட்டு வீரட்டத் தலங்களுள் (அட்டவீரட்டம்) ஒன்றான திருவதிகை வீரட்டானத்தில் இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தீராத வயிற்றுவலி வந்து திலகவதியாரால் திருநீறு கொடுத்து ஆட்கொள்ளப்பட்டு திருநாவுக்கரசர் முதன்முதலில் தேவாரம் பாடியதும்இத்தலத்தில்தான்.

இத்திருத்தலத்தில் வைகாசி விசாகத்தையொட்டி, இந்த திரிபுரமெரித்த ஐதீகவிழா முறையே கொண்டாடப்படுகிறது. வைகாசி விசாகத்தை நிறைவு விழாவாகக் கொண்ட இத்திருவிழாவில் ஒன்பதாம் நாளில் இந்த ஐதீக விழா நடைபெறுகிறது. அன்றையதினம் திரிபுர சம்ஹார மூர்த்திக்கு அபிஷேகம் சிறப்பாக நடத்தப்பட்டு, யாக பூஜை, மந்திர புஷ்பம் போன்றவை நடத்தப்படுகின்றன.

பின்னர் யாத்திரை செல்லும்முன் தருகின்ற யாத்ராதானம் (திருவுலா திருக்கொடை) செய்து இறைவன் திருத்தேருக்கு எழுந்தருளுகிறார். தேர் வடம்பிடிக்கப்பட்டு அக்னி மூலையை வந்தடைகிறது. பிறகு, முன்னிரவு தேரின் அச்சு முறிதல், அப்போது திருமால் காளையாக மாறி தாங்குதல் போன்ற ஐதீகத்தை நினைவூட்டும் வகையில், இவ்வூரின் கிழக்கேயுள்ள சரநாராயணப் பெருமாள் கருட வாகனத்தில் இங்கு எழுந்தருள்கிறார். அப்போது, சிவாச்சாரியார்கள் அவரை எதிர்கொண்டு அழைத்துப் பூஜிக்கின்றனர்.

அப்போது சிவபெருமான் கையில் இருக்கும் சந்திரகணை பெருமாள் மீது சாற்றப்படுகிறது. பிறகு மீண்டும் சிவபெருமானின் கையிலேயே வைக்கப்படுகிறது. இது திருமாலே சிவபெருமானின் கரத்தில்அம்பாக மாறுவதை உணர்த்துகிறது.

அப்போது சிவபெருமானுக்கும் பெருமாளுக்கும் ஒரே நேரத்தில் தீபாராதனை நடைபெறுகிறது. பிறகு, ஆலயத்திற்குத் தெற்குப் பகுதியில் ஓடும் கெடிலம் ஆற்றங்கரையில் தேருக்கு எதிராக வைக்கோல், தென்னங்கீற்று மற்றும் பனை ஓலை ஆகியவற்றால் மூன்று கோட்டைகள் செய்யப்பட்டு, அதனுள் மூன்று அசுரர் பொம்மைகளும் வைக்கப்பட்டு தீயிட்டுக் கொளுத்தப்படுகின்றன.

இது மூன்று புரங்களையும் எரித்ததைப்போல் ஆகும். அப்போது இன்பத்தின் வெளிப்பாடாக வானவேடிக்கை நடைபெறுகிறது. இவ்விழா முடிந்ததும் பெருமாள் சகல மரியாதையுடன் ஆலயத்திற்குத் திரும்புகிறார். பின் இறைவன் தேரிலிருந்து இறங்கி மகா மண்டபத்தை அடைந்து, பெரிய அளவில் பிராய்ச்சித்த அபிஷேகம் ஏற்றுக்கொள்கிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்புவரை, இவ்விழாவில் காரணங்கள் சொல்லப்பட்டு நடத்தப்பட்டன. தற்போது விழாமட்டும் ஐதீகத்தின்படி நடைபெறுகிறது. முன்னாளில் திருவாதிரையன்று வீரட்டகாசர் நடராஜருடன் எழுந்து நடனமாடியதாக சொல்லப்படுகிறது.

தொகுப்பு: சிவ.சதீஸ்குமார்

The post வைகாசி விசாகமும் திரிபுரமெரித்த ஐதீகத் திருவிழாவும் appeared first on Dinakaran.

Tags : Vaikasi Visagam ,Tripura Merittha Atheek Festival ,kumkum ,Anmigam ,
× RELATED பழநி கோயிலில் வைகாசி விசாக திருவிழா மே 16ல் துவங்குகிறது