×

வரங்களை தந்தருளும் அம்மன்கள்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி

பிரம்மனின் கர்வத்தை அடக்குவதற்காக ஈசன் பிரம்மனின் ஐந்தாவது தலையை பிய்த்துப் போட்டார். பிரம்மனின் தலையை கொய்த பாவமும், சரஸ்வதியின் சாபமும் ஈசனைத் துரத்தின. திருவோடு ஏந்தி பசியோடு ஈசன் அலைந்தார். இத்தலத்தில்தான் புற்றுருவாக பார்வதி எழுந்தருளி பிரம்ம கபாலத்தை ஈசனிடமிருந்து பறித்து சாப நிவர்த்தி பெற்றுத் தந்தாள். எளிமையான மக்களிடையே அவர்களுக்குள் ஒருத்தியாக அங்காளம்மன் புற்றுக்கு பின்னால் எழுந்தருளியிருக்கிறாள். பிரதி அமாவாசையன்று பல லட்சம் பக்தர்கள் இங்கு கூடுவார்கள்.

திண்டிவனம் – செஞ்சி சாலையின் நடுவே பிரியும் சாலையிலிருந்து 15 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. சகல தோஷங்களையும் சிதறடிக்கும் சீரியவள் இவள்.

தாயமங்கலம் -ஸ்ரீமுத்துமாரி

முத்து என்பவர், மழலைச் செல்வம் கோரி, மதுரை மீனாட்சியிடம் வேண்டிய வண்ணம் இருந்தார். அப்படி ஒருமுறை மதுரையிலிருந்து வந்தபோது சின்னக் கண்ணனூர் காட்டுப் பகுதியில் மூன்று வயது சிறுமி அழுதபடி தனியே நின்றிருந்தாள். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை யாரையும் காணவில்லை. குழந்தையை தூக்கிக் கொண்டார். இது மீனாட்சி பிரசாதம் என்று நினைத்து நடக்கத் தொடங்கினார். வழியில் தாகத்தைத் தணித்துக்கொள்ள, குழந்தையை கீழே விட்டுவிட்டு, ஊருணியில் நீர் அருந்தினர். திரும்ப வந்து பார்த்த போது, குழந்தையை காணவில்லை. அதிர்ந்தார். சோகத்தோடு வீடு வந்து சேர்ந்தார். அன்றிரவு கனவில் குழந்தை தோன்றினாள்.

தான், கற்றாழை காட்டிற்குள் தங்கியிருப்பதாகவும், தன்னைப் போன்றே உருவம் செய்து வழிபடுமாறும் கூறினாள். மறுநாள் ஊர்ப் பெரியவர்களோடு சென்றபோது சிறுமியின் காலடித் தடங்கள் தெரிந்தன. தடம் காட்டிய பாதையில் சென்றவர்கள் ஓரிடத்தில் அமர்ந்தார்கள். அங்கிருந்த மண்ணைக் குழைத்து மாரியம்மனை வடித்தார்கள். முத்துவின் கனவில் வந்து கூறியதால் முத்துமாரி என்றழைத்தார்கள். இந்த தாயமங்கலத்து முத்துமாரி ராமநாதபுரத்து மக்களின் கண்கண்ட தெய்வமாக மாறினாள். குழந்தைப் பேறுக்காக இந்த அன்னையை பக்தர்கள் வேண்டிக்கொள்கிறார்கள்.

மதுரையிலிருந்து மானாமதுரை வழியாகவே அல்லது சிவகங்கை சென்றோ தாயமங்கலத்தை அடையலாம்.

வீரசிங்கம்பேட்டை ஸ்ரீமாரியம்மன்

குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் அமைந்திருக்கும் கிராமம், வீரசிங்கம்பேட்டை. இவ்வூரின் மையத்தில் அருள் கிறாள், மாரியம்மன். பொதுவாக மாரியம்மனின் சகோதரிகள் ஏழு பேர் என்பார்கள். அவர்களில் கடைசி தங்கையே வீரசிங்கம் பேட்டையில் வீற்றிருக்கும் இளமாரியம்மன். புன்னைநல்லூர் கோயிலைவிட பழமையானது. இப்பகுதி மக்களுக்கு எங்கு திருமணம் நடந்தாலும் இங்கு அம்மனை வழிபட்ட பின்னரே தங்கள் இல்வாழ்வைத் தொடங்குகின்றனர்.

தஞ்சாவூர் – திருவையாறு வழியில், திருக்கண்டியூரிலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.

மாகாளிக்குடி ஸ்ரீஉஜ்ஜயினி காளி

வடக்கே உஜ்ஜயினியை ஆண்ட விக்ரமாதித்யன், தன் அமைச்சரான பட்டியின் ஆலோசனைப்படி உஜ்ஜயினி காளியை பூஜைக்காக எடுத்து வந்து இத்தலத்தில் வைத்து வழிபட்டான். கருவறையில் காளியம்மன் விரிசடையுடன் தனது வலது கரங்கள் இரண்டிலும் சூலம், தீஜுவாலையை தாங்கியுள்ளவள். இடது கரத்தில் கபாலம் தாங்கியிருக்கிறாள். காதுகளில் அழகிய பத்ர குண்டலங்கள். விக்ரமாதித்தனது வாகனமான வேதாளத்திற்கு இங்கு தனி சந்நதி உள்ளது. 700 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் போசள மன்னர்களால் கட்டப்பட்டது.

திருச்சி – சமயபுரத்திற்கு தென் கிழக்காக ஒரு கி.மீ. தூரத்தில் மாகாளிக்குடி அமைந்துள்ளது.

சிறுவாச்சூர் – மதுரகாளியம்மன்

காளியின் அருளால் மதுரையை எரித்தாள் கண்ணகி. அங்கிருந்து சிறுவாச்சூர் செல்லியம்மன் ஆலயத்திற்கு வந்தாள். “செல்லியம்மனோ நீ இங்கு இருக்க வேண்டாம். என்னிடமிருந்து வரம் பெற்ற அரக்கன் ஒருவன் என்னையே அடிமைப் படுத்தி வைத்துள்ளான். கொடுத்த வரத்தை கொடுஞ்செயலுக்கு உபயோகப்படுத்துகிறான். எனவே, நீ இங்கிருந்து சென்று விடு தாயே’’ என்றாள். கண்ணகி கண்கள் மூடி காளியை வணங்கினாள். அரக்கன் வரும் நேரத்திற்காக காத்திருந்தாள்.

வந்த அரக்கனும் அகம்பாவத்துடன் பேச அங்கேயே அவனை காளி வதம் செய்தாள். செல்லியம்மன் மலைமீது குடிகொள்ள மதுகாளி யம்மன் என்று திருப்பெயரோடு காளி கீழே குடிகொண்டாள். திங்கள் மற்றும் வெள்ளி மட்டும்தான் ஆலயம் திறந்திருக்கும். மாவிளக்கு ஏற்றினால் எண்ணமெல்லாம் ஈடேறும். ஆலய வளாகத்திலேயே உரல்களும் உலக்கைகளும் வைக்கப்பட்டிருக்கின்றன. அரிசி கொண்டு வந்து ஊற வைத்து அங்கேயே இடித்து விளக்கேற்றுகின்றனர். குழந்தைப்பேறு வேண்டுவோர், கணவன் மனைவி பிரச்னை இருப்போர் அவசியம் தரிசிக்க வேண்டிய தலம் இது.

திருச்சி – பெரம்பலூர் நெடுஞ்சாலையில் இத்தலம் உள்ளது.

தஞ்சாவூர் – வடபத்ரகாளி

தஞ்சை பூமால் ராவுத்தர் கோயில் தெருவில் வடபத்ரகாளியம்மன் எனும் பெயரில் உள்ள நிசும்ப சூதனி ஆலம் அமைந்துள்ளது. சுமன் நிசும்பன் எனும் அசுரர்களின் அட்டகாசத்தை பொறுக்க முடியாத தேவர்கள் தேவியை நோக்கி துதித்தனர். தேவி காளியாக கௌசீகி எனும் பெயரோடு வெளிப்பட்டு அசுரர்கள் வதைத்தாள். அதனாலேயே நிசும்பசூதனி எனும் பெயர் வழங்கப்படுகிறது. விஜயாலயச் சோழன் முதல் ராஜராஜன், ராஜேந்திரன் என்று மாபெரும் சோழ அரசர்கள் இந்த காளியை வணங்கிச் சென்றனர். தீய சக்தியால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தல மண்ணை மிதித்தாலே போதும். தெளிவு பெறுவது நிச்சயம்.

தொகுப்பு – பரிமளா

The post வரங்களை தந்தருளும் அம்மன்கள் appeared first on Dinakaran.

Tags : Ammans ,Kunkumum Spiritum Mellayanur ,Angabarameshwari ,
× RELATED அற்புத வரங்கள் தரும் அரைக்காசு அம்மன்