
சென்னை : தமிழ்நாட்டின் குழந்தைகள் அறிவார்ந்தவர்களாக – திடமானவர்களாக வளர அவர்களின் ஊட்டச்சத்தை உறுதிசெய்திடுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021-ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற இரு மாதங்களில் சமூகநலத்துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் தமிழ்நாட்டை ஊட்டச்சத்துக் குறைபாடில்லாத மாநிலமாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தியிருந்தேன்.
தொடர்ந்து எடுக்கப்பட்ட புள்ளிவிவரம் எனக்கு மனவேதனை அளித்தது. தமிழ்நாட்டில் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் பலர் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் வயதுக்கேற்ற எடை, உயரமில்லாமல் மெலிந்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தமிழ்நாட்டின் குழந்தைகளைத் திடமானவர்களாக ஆக்கவேண்டும் என்ற உறுதியுடன் சிறப்பு ஊட்டச்சத்துத் திட்டத்தைக் கழக அரசு பொறுப்பேற்று இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாளில் அறிவித்தேன்.சில வாரங்களில், ஊட்டச்சத்துக் குறைபாடுடைய குழந்தைகளைக் கண்டறிய சிறப்பு மருத்துவ முகாமினை நீலகிரி மாவட்டம் முத்தோரை குழந்தைகள் மையத்தில் மே 21 அன்று தொடங்கி வைத்தேன்.
அதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டு பிப்ரவரி 28 அன்று #ஏற்றமிகு7திட்டங்கள்-இல் ஒன்றாக, #ஊட்டச்சத்தை_உறுதிசெய் திட்டத்தின்கீழ், 6 வயதுக்குட்பட்ட கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடுடைய 1 லட்சத்து 11 ஆயிரத்து 216 குழந்தைகளுக்குச் சிறப்பு உணவாக RUTF உணவு அளிப்பதையும், 6 மாதத்துக்குட்பட்ட கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடுடைய 11 ஆயிரத்து 917 குழந்தைகளுக்குத் தேவையான தாய்ப்பால் கிடைப்பதை உறுதிசெய்யத் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகங்கள் வழங்குவதையும் தொடங்கிவைத்தேன்.
இதன்படி ஊட்டச்சத்து உணவு, மருத்துவ உதவி வழங்கி இத்தகைய குழந்தைகளின் வளர்ச்சி கண்காணிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் எந்த அளவுக்குச் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பதை எழுத்தாளர் சரவணன் சந்திரனின் இந்தப் பதிவு படம்பிடித்துக் காட்டுகிறது.இதற்குக் காரணமான அமைச்சர்கள், அதிகாரிகள், பணியாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. தமிழ்நாட்டின் குழந்தைகள் அறிவார்ந்தவர்களாக – திடமானவர்களாக வளர அவர்களின் ஊட்டச்சத்தை உறுதிசெய்திடுவோம்!,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்தாளர் சரவணன் சந்திரனின் பதிவு
கடையில் வேலைபார்க்கும் தம்பி ஒருத்தன் அன்னை சத்யா நகரில் வசிக்கிறான். அவனுக்குச் சமீபத்தில்தான் குழந்தை பிறந்தது. பிறக்கையிலேயே எடை குறைந்த குழந்தை. அவனுடைய மனைவியுமே சிறுத்துப் போய்த்தான் திரிவார். விட்டால் அரை ப்ளேட் பிரியாணியைக் கூட ஐந்தாறு நாள் வைத்துத் தின்பார். “ஏம்மா நல்லா சாப்பிடறதுக்கு என்ன?” எனக் கேட்டால், “அவ்ளோதாண்ணே திங்க முடியுது” என்பார் பரிதாபமாக.நேற்று திடீரென வந்து நின்ற அவன், “சார் ஒரு அரைமணி நேரம் வீடு வரைக்கும் ஓடிப் போய்ட்டு வந்திரவா? பால்வாடில அவசரமா வரச் சொல்றாங்க” என்றான்.
போய்விட்டு வந்தவனிடம் எதற்காக அழைத்தார்கள் என்று கேட்டேன். “செர்லாக் ரெண்டு பாக்கெட் குடுக்கறதுக்காக” என்றான். அவனிடம் ஆற அமர அதுபற்றிக் கேட்டேன். இதுவரைக்கும் பால்வாடியில் என்ன நடக்கிறது என்பது எனக்கு உண்மையிலேயே தெரியாது.”மாசமா இருக்கறப்பயே அட்டை போட்டிருவாங்க. இதுவரைக்கும் ஆறாயிரம் ரூபாய் வரைக்கும் எனக்கு வந்திருக்கு. மிச்சம் பன்னெண்டாயிரம் மெது மெதுவா வந்திரும்ணு சொல்லி இருக்காங்க. பையன் எடை குறைஞ்சு பிறந்ததால கூடுதல் கவனிப்பு. பேரிச்சம்பழம், ஹார்லிக்ஸ் பாட்டிலு, சத்து மாவு, அப்புறம் நெய் டப்பா, துண்டு, ஒரு ப்ளாஸ்டிக் டம்ளர், சத்து டானிக் ரெண்டு பாட்டில் போட்டு பாக்ஸ் தருவாங்க. அப்புறம் அப்பப்ப சத்துமாவு செர்லாக்குன்னு தந்துகிட்டே இருப்பாங்க” என்றான்.
எனக்கு வியப்பாக இருந்தது. “அவங்களே அப்பப்ப போனை போட்டு கொழந்தையை தூக்கிட்டு வரச் சொல்லுவாங்க. கொழந்தையை போட்டோ எடுத்து அவங்க உயரதிகாரிங்களுக்கு அனுப்பறதுக்கே பயந்துக்குவாங்க. எம்பொண்டாட்டியை ஒழுங்கா சாப்பிடமாட்டீயா? பால் ஊறனும்லன்னு கடுமையா சத்தம் போடுவாங்க” என்றான்.இறுதியாய், “ஒண்ணு சொல்ல மறந்திட்டேன் சார். பெத்த அப்பனை விட குழந்தையை நல்லா பாத்துக்குவாங்க” என்றபோது உண்மையிலேயே எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அரசுத் துறை ஒன்றைக் குறித்து அதன் பயனாளியே மகிழ்வாய் சொல்லும் விந்தையை எப்படிச் சுட்டிக்காட்டாமல் தவிர்ப்பது?
The post தமிழ்நாட்டின் குழந்தைகள் அறிவார்ந்தவர்களாக – திடமானவர்களாக வளர அவர்களின் ஊட்டச்சத்தை உறுதி செய்திடுவோம்! : முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.