சிவகங்கை, மே 19: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் பல்வேறு திறன் பயிற்சிகள் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம்(தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. வார்டு பாய் (ஆண் மற்றும் பெண் உதவியாளர்), உதவி சமையல்காரர், வீட்டு வேலை செய்பவர்(பொது), உதவி குழாய் பழுது பார்ப்பவர்(பொது) வாடிக்கையாளர் பராமரிப்பு நிர்வாகி (அழைப்பு மையம்), ஆயுதமற்ற பாதுகாப்புக் காவலர், இலகு ரக மோட்டார் வாகன ஓட்டுநர், நான்கு சக்கர வாகன சேவை உதவியாளர் மற்றும் வீட்டுக்காப்பாளர் (பொது) போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.
பயிற்சி அளிக்கப்பட்டு வேலை வாய்ப்பும் வழங்கப்பட உள்ளது. 18 முதல் 35 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான கால அளவு 10 முதல் 14 நாட்கள் ஆகும். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி மற்றும் மதுரை மாவட்ட பயிற்சி நிலையங்களில் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி பெற்றவர்களுக்கு பல்வேறு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். உதவித்தொகை ரூ.375 பயிற்சி நாட்களில் வழங்கப்படும். பயிற்சி பெற விரும்புவோர் www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான மொத்த செலவும் (விடுதி செலவு உட்பட) தாட்கோ வழங்கும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தாட்கோ மூலம் திறன் பயிற்சி பெற அழைப்பு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.
