×

குஜிலியம்பாறையில் தெருநாய்களின் தொல்லை அதிகரிப்பு: கட்டுப்படுத்த கோரிக்கை

 

குஜிலியம்பாறை, மே 19: குஜிலியம்பாறையில் அதிகரித்து வரும் தெருநாய்களால் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் அச்சம் அடைகின்றனர். தெருநாய்களை கட்டுப்படுத்த பாளையம் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட குஜிலியம்பாறையில் 8, 11, 12, 13 ஆகிய 4 வார்டுகள் உள்ளன. இங்குள்ள தெருக்கள் மற்றும் சாலைகளில் தெருநாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இதன்படி சில நேரங்களில் 10க்கும் மேற்பட்ட தெருநாய்கள் ஒன்று சேர்ந்து சாலையில் கூட்டமாக சுற்றித்திரியும் போது திடீரென சண்டையிட்டுக்கொள்கின்றன.

அந்த நேரத்தில் சாலையில் டூவீலரில் செல்வோர் கீழே விழுந்து காயமடைகின்றனர். மேலும் புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் கறிக்கடைகளின் முன்பு ஒட்டு மொத்த தெருநாய்களும் ஒன்று சேர்ந்து நிற்கின்றன. அத்துடன், காலை நேரங்களில் சைக்கிள்களில் செல்லும் சிறுவர்களையும், நடந்து செல்லும் பொதுமக்களையும் துரத்தி கடிக்கின்றன. மேலும் இரவு நேரத்தில் தெருக்களில் உள்ள குடியிருப்புகளுக்கு செல்வோரையும் துரத்துகிறது. இவ்வாறு நாளுக்கு நாள் குஜிலியம்பாறையில் அதிகரித்து வரும் தெருநாய்களை கட்டுப்படுத்த பாளையம் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post குஜிலியம்பாறையில் தெருநாய்களின் தொல்லை அதிகரிப்பு: கட்டுப்படுத்த கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kujiliamparai ,Gujiliamparai ,
× RELATED குஜிலியம்பாறை அருகே 5,000 ஆண்டு பழமையான கல் பதுகை கண்டுபிடிப்பு