×

கள்ளச்சாராய வழக்கு ஆவணங்கள் ஒப்படைப்பு மரக்காணத்தில் சிபிசிஐடி போலீஸ் விசாரணை துவங்கியது

 

விழுப்புரம், மே 19: மரக்காணம் கள்ளச்சாராய வழக்கு ஆவணங்கள் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், விசாரணை அதிகாரியான சிபிசிஐடி கூடுதல் எஸ்பி கோமதி தலைமையிலான போலீசார் இன்று(19ம் தேதி) விசாரணையை துவங்குகின்றனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியர்குப்பத்தில் மெத்தனால் கலந்த விஷச்சாராயம் குடித்ததில் 14 பேர் உயிரிழந்தனர். 45க்கும் மேற்பட்டோர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக விழுப்புரம் எஸ்பி நாதா, மதுவிலக்கு டிஎஸ்பி பழனி, மரக்காணம் இன்ஸ்பெக்டர் எஸ்ஐ, மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர், எஸ்ஐ மற்றும் விஏஓ, உதவியாளர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

விஷச்சாராயம் விற்பனை தொடர்பாக மரக்காணம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு அப்பகுதியைச் சேர்ந்த அமரன்(28), முத்து(38), ஆறுமுகம்(46), ரவி(56), மண்ணாங்கட்டி(57), குணசீலன்(41) ஆகிய சாராய வியாபாரிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர். முக்கிய குற்றவாளிகள் புதுச்சேரி முத்தியால்பேட்டை ராஜா(எ)பர்கத்துல்லா(51), வில்லியனூர் ஏழுமலை(50), சென்னை திருவேற்காடு இளயநம்பி(46) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் நடத்திய ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு வழக்கை கொலை வழக்காக மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். தொடர்ந்து மரக்காணம் காவல் நிலையத்தில் கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், விசாரணை அதிகாரியாக விழுப்புரம் சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் கோமதி நியமிக்கப்பட்டார்.மரக்காணம் காவல் நிலையத்திலிருந்து எப்ஐஆர் உள்ளிட்ட வழக்கு ஆவணங்களை, நேற்று மாலை சிபிசிஐடி கூடுதல் எஸ்பி கோமதியிடம் வழங்கப்பட்டது. இந்த ஆவணங்களை பெற்றுக்கொண்ட சிபிசிஐடி போலீசார் விசாரணையை துவங்ககினர். மரக்காணம் பகுதியில் நேரில் சென்று விசாரணை நடத்திய பின்னர், மெத்தனால் வழங்கிய ஆலைகளிலும் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

விஷச்சாராயம் விற்பனை செய்து கைதாகி சிறையில் உள்ளவர்களை காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர். சாராய விற்பனையில் தொடர்புடையவர்கள் யார், காவல்துறை, வருவாய்த்துறையில் தொடர்பிலிருந்தவர்களின் பட்டியலை கேட்டறிந்தும் விசாரணை நடத்த உள்ளனர். அதேபோல், சஸ்பெண்ட் செய்யப்பட்ட மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர், எஸ்ஐயிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். இதனால் போலீசார் கலக்கம் அடைந்துள்ளனர்.

The post கள்ளச்சாராய வழக்கு ஆவணங்கள் ஒப்படைப்பு மரக்காணத்தில் சிபிசிஐடி போலீஸ் விசாரணை துவங்கியது appeared first on Dinakaran.

Tags : cbcid ,Viluppuram ,Marakkanam ,CPCID ,CPCIT ,CPCID Police ,Dinakaran ,
× RELATED கரும்பு விவசாயத்திற்கு பெயர்போன...