×

கர்நாடக மாநிலத்தில் இழுபறி நீடித்த நிலையில் சித்தராமையா முதல்வராக தேர்வு: காங்கிரஸ் தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் அடுத்த முதல்வர் யார் என்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சியில் நான்கு நாட்களாக நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்தது. முதல்வராக சித்தராமையாவும், துணைமுதல்வராக டி.கே.சிவகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சி தலைமை அதிகாரபூர்வமாக அறிவித்தது. இந்நிலையில் நாளை புதிய முதல்வராக சித்தராமையா பதவியேற்றுக்கொள்கிறார். கர்நாடக சட்டப்பேரவைக்கு நடந்து முடிந்த பொது தேர்தலில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதன் மூலம் தனி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி பிடித்துள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் சித்தராமையா, டி.கே.சிவகுமார் இடையே முதல்வர் போட்டி எழுந்தது.

இந்நிலையில் காங்கிரஸ் சட்டமன்றத் குழு தலைவர் தேர்ந்தெடுப்பது தொடர்பாக புதிதாக வெற்றி பெற்ற கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் பெங்களூருவில் உள்ள சாங்கிரிலா ஓட்டலில் கடந்த ஞாயிற்றுகிழமை இரவு நடந்தது. காங்கிரஸ் மூத்த தலைவரும் மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வருமான சுஷில் குமார் ஷிண்டே தலைமையில் நடந்த கூட்டத்தில் புதிதாக வெற்றி பெற்ற கட்சி எம்எல்ஏக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் காங்கிரஸ் சட்டமன்றத் குழு தலைவரை தேர்வு செய்யும் அதிகாரத்தை கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வழங்கி ஒரு வரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை தொடர்ந்து டெல்லியில் இருந்து வந்த மேலிட பார்வையாளர்கள் ஒவ்வொரு எம்எல்ஏவிடமும் யாரை கட்சி சார்பில் முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யலாம் என்று கருத்து கேட்டு பதிவு செய்தனர்.

இதையடுத்து காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் தேர்ந்தெடுப்பது தொடர்பாக டெல்லியில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து ஆலோசனை கூட்டம் நடந்தது. மல்லிகார்ஜுன கார்கே, சோனியாகாந்தி, ராகுல்காந்தி, கட்சி மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜிவாலா, தேசிய பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்பட கட்சியின் மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். சித்தராமையா மற்றும் டி.கே. சிவகுமார் ஆகிய இருவரும் முதல்வர் பதவி வேண்டும் என்று அடம் பிடித்தனர். இருவரையும் ஓரு வழியாக கட்சி மேலிட தலைவர்கள் சமாதானம் செய்தனர், அதை தொடர்ந்து நான்கு நாட்கள் நீடித்த இழுபறிக்கு தீர்வு கிடைத்துள்ளது.

* முதல்வராக சித்தராமையா தேர்வு
இதைதொடர்ந்து நேற்று காலை டெல்லியில் உள்ள கே.சி.வேணுகோபால் வீட்டில் ஏற்பாடு செய்திருந்த காலை சிற்றுண்டி விருந்தில் சித்தராமையா, டி.கே.சிவகுமார், ரன்தீப்சிங் சுர்ஜிவாலா ஆகியோர் வந்து கலந்து கொண்டனர். அங்கு இறுதி கட்ட ஆலோசனை நடத்தியபின், ஒரே காரில் சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் ஆகியோர் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டிற்கு சென்று அவரை சந்தித்து கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு முழு ஆதரவு கொடுப்பதாக உறுதியளித்தனர். அவர்கள் இருவருக்கும் கார்கே வாழ்த்து தெரிவித்து காங்கிரஸ் ஒற்றுமையுடன் செயல்படுகிறது என்ற அறிகுறியுடன் இருவரின் கையை உயர்த்தி பிடித்து புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தார்.

அதை தொடர்ந்து டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கே.சி.வேணுகோபால் மற்றும் ரன்தீப்சிங் சுர்ஜிவாலா ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி பிடித்துள்ளது. மக்களுக்கு கொடுத்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டியது கட்சியின் கடமையாகும். காங்கிரஸ் தேசிய கட்சியாக இருக்கும்போது, முதல்வர் பதவி மீது பலரும் விருப்பம் தெரிவிப்பது ஜனநாயகத்தில் ஏற்று கொள்ள வேண்டிய ஒன்று என்பதில் மாற்று கருத்தில்லை.இருப்பினும் கட்சி தலைமை நடத்திய பேச்சுவார்த்தையில் தீர்வு கிடைத்துள்ளது.

முதல்வராக சித்தராமையாவும் துணைமுதல்வராக டி.கே.சிவகுமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக டி.கே.சிவகுமார் தொடர்ந்து செயல்படுவார். புதிய முதல்வர் மற்றும் துணைமுதல்வர் மற்றும் அமைச்சர்கள் வரும் 20ம் தேதி சனிக்கிழமை பகல் 12.30 மணிக்கு பெங்களூருவில் நடக்கும் விழாவில் பதவியேற்று கொள்வார்கள்’ என்று தெரிவித்தனர். அதன் மூலம் நான்கு நாட்கள் இழுபறிக்கு தீர்வு கிடைத்துள்ளது.

* காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்
இந்நிலையில் கடந்த ஐந்து நாட்களாக டெல்லியில் முகாமிட்டிருந்த சித்தராமையா, டி.கே.சிவகுமார் உள்ளிட்ட தலைவர்கள் நேற்று மாலை பெங்களூரு திரும்பினர். நேற்று மாலை 7 மணிக்கு பெங்களூரு, குயின்ஸ் சாலையில் உள்ள மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகம் பின்புறம் கட்டியுள்ள இந்திராகாந்தி பவனில் புதியதாக வெற்றி பெற்ற எம்எல்ஏகள் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொள்ளும்படி பேரவை, மேலவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் கடிதம் எழுதி இருந்தார். அதையேற்று அனைவரும் கூட்டத்தில் பங்கேற்றனர். இதில் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக முறைப்படி சித்தராமையா தேர்வு செய்யப்பட்டார்.

* ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர்
இதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்க அழைக்கும்படி சித்தராமையா உள்ளிட்ட தலைவர்கள் நேற்று ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து முறைப்படி கடிதம் கொடுத்தார். அதையேற்று கொண்டுள்ள ஆளுநர் விரைவில் அழைப்பு விடுப்பதாக உறுதியளித்தார். இந்நிலையில் பதவியேற்பு விழா நடக்கும் பெங்களூரு கண்டீரவா விளையாட்டு அரங்கில் ஏற்பாடுகள் செய்யும் பணி புயல் வேகத்தில் தொடங்கியுள்ளது. மேலும் பெங்களூருவில் உள்ள சித்தராமையாவின் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

* சித்தராமையா, சிவகுமார் டிவிட்
முதல்வராக சித்தராமையா அறிவிக்கப்பட்டபின் வெளியிட்ட முதல் டிவிட் பதிவில், ‘மக்களின் விருப்பங்களை பூர்த்தி செய்வது எங்கள் முதல் கடமையாகவுள்ளது. நாங்கள் ஒரே குடும்பமாக இருந்து, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். வெளிப்படையாக, ஊழலற்ற, நேர்மையான ஆட்சியாக மக்கள் போற்றும் நிர்வாகம் கொடுப்போம். 7 கோடி கன்னடர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்வோம்’ என்று கூறியுள்ளார்.

டி.கே.சிவகுமார் வெளியிட்டுள்ள டிவிட் பதிவில், ‘கட்சிக்குள் எந்த குழப்பமோ, கருத்து வேறுபாடோ கிடையாது. எங்கள் உரிமையை கட்சி தலைமையிடம் கேட்டோம். தலைமை எடுத்துள்ள முடிவை மகிழ்ச்சியுடன் ஏற்று கொண்டு, மக்கள் எந்த நம்பிக்கையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வர வாய்ப்பு கொடுத்தார்களோ? அதை ஒன்றாக இணைந்து செயல்படுத்துவோம். எங்கள் நோக்கம் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதாக மட்டும் இருக்கும்’ என்று கூறியுள்ளார்.

The post கர்நாடக மாநிலத்தில் இழுபறி நீடித்த நிலையில் சித்தராமையா முதல்வராக தேர்வு: காங்கிரஸ் தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Sidderamaiah ,Karnataka ,Congress ,Bengaluru ,Congress party ,CM ,Siddaramaiah ,Dinakaran ,
× RELATED இடஒதுக்கீடு தொடர்பாக கர்நாடக பாஜக...