×

தமிழ்நாடு அரசின் அவசர சட்டம் செல்லும் ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

புதுடெல்லி: தமிழ்நாட்டில் நடத்தப்படும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை என உச்ச நீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு பிறப்பித்த அவசர சட்டம் செல்லும் என்று தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனர். காளை மாடுகளை காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் இருந்து மத்திய அரசு நீக்கியதால் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்துவதை தடை செய்ய வேண்டும் என விலங்குகள் நல வாரியம் வழக்குத் தொடர்ந்தது. இதையடுத்து ஜல்லிக்கட்டு போட்டிக்கு கடந்த 2014ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்தன. இதையடுத்து தமிழ்நாடு அரசு ஜனாதிபதி ஒப்புதலோடு புதிய சட்ட திருத்தம் கடந்த 2017ம் ஆண்டு கொண்டு வந்ததால் ஜல்லிக்கட்டு போட்டிக்கு இருந்த தடை நீங்கி மீண்டும் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்டது. இந்த நிலையில் தமிழக அரசின் இந்த சட்டத்தை எதிர்த்து பீட்டா மற்றும் பல்வேறு விலங்குகள் நலவாரிய அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த மனுக்கள் மீது நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கடந்தாண்டு நவம்பர் 23ம் தேதி விசாரணையை துவக்கியது. அப்போது தமிழ்நாடு அரசு உட்பட எதிர்மனுதாரர்கள் தரப்பு வாதத்தில், ‘‘தமிழ்நாட்டு கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பாதுகாக்கவும், நாட்டு மாடு இனம், காளை இனம் காக்கவும் தான் ஜல்லிக்கட்டு விளையாட்டு தமிழகத்தில் நடத்தப்படுகிறது. மேலும் காளைகளின் உயிர், நல்வாழ்வை உறுதி செய்யும் விதமாக அனைத்து விதிமுறைகளையும் கடை பிடித்து தான் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. அதனால் அதில் எந்தவித விதி மீறல்களும் கிடையாது. குறிப்பாக ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தமிழகத்தில் சிறப்பு சட்டம் இயற்றப்பட்டு அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. பிரதான மிருகவதை சட்டத்தில் இருந்து ஜல்லிக்கட்டுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இது தமிழர் கலாச்சாரம், பண்பாட்டோடு ஒன்றிய விஷயம் ஆகும்.

குறிப்பாக ஜல்லிக்கட்டு சட்டத்தில் காளைகளை தேவையில்லாமல் துன்புறுத்தக் கூடாது என்ற வார்த்தை சேர்க்கப்பட்டுள்ளது. அது ஏனெனில் காளைகளின் நலனை காக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக தான். ஜல்லிக்கட்டு விவகாரத்தை பொருத்தமட்டில் சிறப்பு சட்டத்திற்கு எப்போது ஜனாதிபதி ஒப்புதல் பெறப்பட்டதோ, அப்போது இருந்தே அனைத்து சட்ட விதிகளும் உடனடியாக அமலுக்கு வந்து விட்டது. மேலும் ஜல்லிக்கட்டு என்பது விளையாட்டு அல்ல அது திருவிழா. அது கோயிலோடு தொடர்புடையது ஆகும். காளை என்பது எங்களது குடும்ப உறுப்பினர். அவ்வாறு இருக்க எப்படி ஒரு குடும்ப உறுப்பினரை நாங்கள் துன்புறுத்துவோம்?. ஜல்லிக்கட்டுக்கு இரு நாட்களுக்கு முன் ஊரே கோவிலில் கூடி காளைக்காக சிறப்பு பிரார்த்தனை செய்வோம். மேலும் அந்த காளைகளை தெய்வமாக பாவித்து வணங்குகிறோம்.

சுமார் 5000 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டில் காளைகள் ஈடுபடுத்தப்படுகிறது. எனவே இது கலாச்சாரம், பண்பாடு, மதம், பாரம்பரரியம் என அனைத்தையும் ஒன்றிணைந்த பொதுத்திருவிழா ஜல்லிக்கட்டு ஆகும். அதனால் தமிழகத்தின் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு எதிரான அனைத்து ரிட் மனுக்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்’ என வாதங்கள் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா,‘‘ஜல்லிகட்டு விளையாட்டை பொருத்தமட்டில் எந்த விதி மீறலும் கிடையாது. இதில் சட்ட விதிகள் மீறுபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5லட்சம் அபராதமும் விதிக்கப்படுவதாக சட்டத்தில் தெரிவிக்கப்பட்டு நடைமுறையில் இருக்கிறது. ஜல்லிக்கட்டு விவகாரத்தை ஆய்வு செய்த நிபுணர் குழு கூட அதில் எந்த விதி மீறல்களும் இல்லை என தெளிவாக தெரிவித்துள்ளது.

மேலும் இது மாநில அரசின் கொள்கை சார்ந்த விவகாரம் ஆகும். அதற்கு தடை விதிக்க முடியாது’’ என தெரிவித்தார். இதேப்போன்று ஒன்றிய அரசின் விலங்குகள் நல வாரியமும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வாதங்களை முன்வைத்தது. இதைத்தொடர்ந்து மேற்கண்ட வாதங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பீட்டா மற்றும் விலங்குகள் நல அமைப்புகள், ‘‘ஜல்லிக்கட்டு விவகாரத்தில் ஏற்கனவே இந்த நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம் இந்த பழக்கத்தை காட்டுமிராண்டித்தனம் என அறிவித்து விட்டதால் அதனை மீண்டும் இந்த நீதிமன்றம் மாற்றி அமைக்கக் கூடாது. மேலும் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மனித உரிமை மீறல்கள் மேலும் பாரம்பரிய காளை இனங்களை காப்பாற்றுவதற்காக தான் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது என்பதை கண்டிப்பாக ஒருபோதும் ஏற்க முடியாது. இது காளைகளுக்கு இழைக்கப்படும் கோடூரமாக உள்ளது’’ என தெரிவித்திருந்தது.

இதையடுத்து அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்றம் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த ஆண்டு டிசம்பர் 8ம் தேதி ஒத்திவைத்தது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் கே.எம்.ஜோசப், அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ஹெச்.ராய் மற்றும் சி.டி.ரவிக்குமார் ஆகிய ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், ‘‘இந்த விவகாரத்தை பொருத்தமட்டில் எங்களுக்கு அனுப்பப்பட்ட ஐந்து கேள்விகளுக்கு மட்டும் தீர்ப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்யப்பட்ட அனைத்து ஆவனங்களும் உச்ச நீதிமன்றத்திற்கு திருப்தி அளிக்கும் விதமாக உள்ளது. அதனை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அதில் எந்த விதமான விதிமீறல்களும் இல்லை.

குறிப்பாக இந்திய அரசியல் சாசனப் பிரிவின் 14 மற்றும் 21ன் படி அடிப்படை உரிமைகள் எதுவும் தமிழ்நாட்டில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டில் பாதிக்கப்படவில்லை. அதனால் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தம் செல்லும். மேலும் ஜல்லிக்கட்டு என்பது தமிழ்நாட்டின் கலாச்சாரத்தின் ஒருங்கிணைந்த பகுதி இருக்கிறது. குறிப்பாக பல நூறு ஆண்டுகளாக இந்த கலாச்சாரம் பின்பற்றப்பட்டு வருகிறது. எனவே கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் அங்கமாக உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளை தொடர்ந்து நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளிக்கிறது. அதற்கு எந்தவித தடையும் கிடையாது. இதைத்தவிர கலாச்சாரம் என்ற வகையில் ஜல்லிக்கட்டு இருந்தாலும் கூட அதில் துன்புறுத்தல் என்று வரும்போது அதனை தவிர்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மாநில அரசு எடுக்க வேண்டும். வழிமுறைகளையும் முழுமையாக கடை பிடிக்க வேண்டும்’’ என தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், ஜல்லிக்கட்டுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து ரிட் மனுக்களையும் தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்தனர்.

* தமிழ்நாட்டு வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து
சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: தமிழர் தம் வீரத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தத் தடையில்லை என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்திருப்பது தமிழ்நாட்டு வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது.
தமிழ்நாடு அரசு கொண்டு வந்த அவசரச் சட்டம் செல்லும் என்பதை நிலைநாட்ட அரசு நடத்திய சட்டப் போராட்டத்துக்கு மகத்தான வெற்றி கிடைத்துள்ளது. அலங்காநல்லூரில் மாபெரும் ஜல்லிக்கட்டு மைதானத்தை நாம் கட்டி வருகிறோம். வரும் சனவரி மாதம் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு வெற்றி விழாவைக் கொண்டாடுவோம். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

* சட்டப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி: அமைச்சர் ரகுபதி
ஜல்லிக்கட்டு வழக்கின் தீர்ப்பை நேரில் பார்ப்பதற்காக தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று உச்ச நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதில், ‘‘ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் ஒருமித்த தீர்ப்பை வழங்கியுள்ளனர். இது தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியானதாகும்.மேலும் இது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும். மேலும் வரும் காலங்களில் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்தப்படும் போது உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படி அனைத்து பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்கப்படும்’’ என தெரிவித்தார்.

* தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை என உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு நேற்று வெளியானது. இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை வரவேற்று மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் மற்றும் பல்வேறு ஜல்லிக்கட்டு விழா கமிட்டினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இதேபோல், தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு நடக்கும் மாவட்டங்களில் கொண்டாட்டம் களைகட்டியது. இதுகுறித்துஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா கமிட்டி நிர்வாகிகள் ரகுபதி, கோவிந்தராஜன் கூறுகையில், ‘‘ஜல்லிக்கட்டுக்கு இருந்த தடையை நிரந்தரமாக விலக்கி, தொடர்ந்து நடைபெற வழிவகுத்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி’’ என்றனர்.

அமைச்சர் பி.மூர்த்தி மதுரையில் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ உச்சநீதிமன்றத்தின் நல்ல தீர்ப்பு வர முழு காரணமாக இருந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழர்களின் சார்பாகவும், காளை வளர்ப்போர், மாடுபிடி வீரர்கள் சார்பாகவும் நன்றி’’ என்றார். தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை மாநில தலைவர் பி.ராஜசேகரன் கூறுகையில், ‘‘உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, ஒரே மாதிரியான தீர்ப்பை வழங்கியுள்ளதை மிகப்பெரிய வெற்றியாக கருதுகிறோம். இந்த வெற்றி சத்தியம், உண்மை, உழைப்புக்கு கிடைத்த வெற்றி. இதற்காக தமிழக அரசுக்கு மீண்டும் நன்றி’’ என்றார். பாலமேடு ஜல்லிக்கட்டு விழா கமிட்டி செயலாளர் பிரபு கூறுகையில், ‘‘இனிவரும் காலங்களில் ஜல்லிக்கட்டுக்கு தடை கோரும் அமைப்புகளை நீதிமன்றம் வன்மையாக கண்டிக்க வேண்டும் ’’ என்றார்.

The post தமிழ்நாடு அரசின் அவசர சட்டம் செல்லும் ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Govt ,Supreme Court ,New Delhi ,Tamils ,Tamil Nadu ,
× RELATED தேர்தல் பத்திரங்களின் எண்கள் உட்பட...