×

புதிய சவால்கள்

கர்நாடக மாநிலத்தில் பாஜ ஆட்சியை வீழ்த்தி காங்கிரஸ் பிரமாண்ட வெற்றியை பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றியை நாட்டில் உள்ள அனைத்து மாநில காங்கிரசார் உள்பட எதிர்க்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். இது ஒன்றிய பாஜ அரசை அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெளியேற்றுவதற்கான முன்னோட்டம் என்று புகழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக கர்நாடக காங்கிரஸ் கட்சியில் முதல்வர் பதவிக்கான குழப்பம் நீடித்தது. இதற்கு காங்கிரஸ் தலைமை முற்றுப்புள்ளி வைத்து சித்தராமையாவை முதல்வராகவும் மாநில தலைவர் டி.கே.சிவகுமாரை துணை முதல்வராகவும் அறிவித்துள்ளது. இருவரும் நாளை பதவியேற்கின்றனர்.

புதிய காங்கிரஸ் ஆட்சி சந்திக்க வேண்டிய சவால்கள் அதிகம் உள்ளன. இவற்றை அனுபவமிக்க சித்தராமையா மிக திறம்பட சமாளித்து அனைவருக்குமான ஆட்சியை அளிப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. முதல் அமைச்சரவை கூட்டத்தில் தேர்தலின் போது மக்களுக்கு அளித்த 5 வாக்குறுதிகளுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். அதற்கு முன்பு முந்தைய அரசு கஜானாவில் விட்டு சென்ற நிதி நிலையை சரிபார்க்க வேண்டும். 5 வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆண்டுக்கு 50 ஆயிரம் கோடி தேவை என்று நிதி ஆலோசகர்கள் கருத்து தெரிவித்துள்ளதால் அது குறித்து புதிய அமைச்சரவை ஆலோசித்து விரைந்து முடிவெடுத்து செயல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் காங்கிரஸ் தனது வாக்குறுதிகளை நிபந்தனைகளுடன் செயல்படுத்தும் என்ற கருத்து பரவியது. இதற்கு பாஜ உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நிபந்தனையின்றி வாக்குறுதிகளை மக்களுக்கு செயல்படுத்த வேண்டும் என்று குரல் கொடுத்துள்ளது. புதிய அரசு இன்னும் அமையவே இல்லை. அதற்குள் காங்கிரசிடம் இருந்து எதிர்க்கட்சிகள் அதிகம் எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம். பதவியேற்ற பின் படிப்படியாக அனைத்து வாக்குறுதிகளையும் நிச்சயமாக நிறைவேற்றும். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வருகிறது.

எனவே, காங்கிரஸ் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருந்தால் மக்களிடம் நம்பிக்கை இழந்துவிடும் என்பதை காங்கிரஸ் தலைவர்களும் அறிந்திருக்கிறார்கள். பாஜ உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு எந்த ஒரு நடவடிக்கையையும் அரசியலாக்க முயற்சிப்பார்கள். இதை சாமர்த்தியமாக காங்கிரஸ் அரசு எதிர்கொள்ள வேண்டும். புதிய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து ஏற்கனவே உள்ள திட்டங்கள் மற்றும் புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும்.

பாஜ ஆட்சியின் போது பிறப்பிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு ரத்து செய்ததை திரும்ப பெறுதல், ஹிஜாப் தடை ரத்து உள்ளிட்ட பல்வேறு சட்டங்களில் திருத்தம் கொண்டு வர வேண்டும். தேர்தலின் போது தங்கள் பதவியை ராஜினாமா செய்து பாஜவில் இருந்து பலர் காங்கிரசில் இணைந்தார்கள். இதனால் சட்டமேலவையில் 5 இடங்கள் காலியாக உள்ளன. மேலும் மேலவையிலும் பாஜ பெரும்பான்மை இழந்துள்ளது. 5 இடங்களில் 3 இடங்களை காங்கிரஸ் பிடிப்பது உறுதி. எனவே, மேலவையிலும் பெரும்பான்மை கிடைத்துவிடும். இதனால் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை மேலவையில் நிறைவேற்றுவதிலும் எந்த சிக்கலையும் காங்கிரஸ் எதிர்கொள்ளாது. மக்கள் நல பணிகளை புதிய அரசு செவ்வனே செய்ய வாழ்த்துகள்.

The post புதிய சவால்கள் appeared first on Dinakaran.

Tags : congress ,kharnataka ,
× RELATED வங்கிக் கணக்கு முடக்கத்தால் நிதிச்...