×

விஷசாராயம் குடித்து 21 பேர் இறந்த விவகாரம் சிபிசிஐடி விசாரணை தொடங்கியது: அதிகாரிகளுடன் 2 பெண் கூடுதல் டிஎஸ்பிக்கள் ஆலோசனை

சென்னை: விஷசாராயம் குடித்து 21 பேர் இறந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை தொடங்கியது. விழுப்புரம் அடுத்த மரக்காணம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட எக்கியர்குப்பம் பகுதியை சேர்ந்தவர்கள் 13ம் தேதி விஷசாராயம் குடித்ததில் 13 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக மரக்காணம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து 8 பேரை கைது செய்தனர். அதேபோல், செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருவேறு சம்பவங்களில் பெருக்கரணை மற்றும் பேரம்பாக்கம் கிராமங்களை சேர்ந்த 8 பேர் விஷசாராயம் குடித்து உயிரிழந்தனர். இதுதொடர்பாக சித்தாமூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரை கைது செய்துள்ளனர்.

மேலும் விஷசாராயத்தை விற்பனை செய்த தொழிலதிபர் இளையநம்பி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, விஷ சாராய வழக்கு, கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் விழுப்புரம் எஸ்பி ஸ்ரீநாதா, மதுவிலக்கு டிஎஸ்பி பழனி, மரக்காணம் இன்ஸ்பெக்டர் எஸ்ஐ, மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர், எஸ்ஐ மற்றும் விஏஓ, உதவியாளர் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட மதுவிலக்கு டிஎஸ்பி துரைபாண்டி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். , செங்கல்பட்டு எஸ்பி பிரதீப் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி கடந்த 16ம் தேதி விஷசாராய வழக்கை, தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார். இதையடுத்து, சிபிசிஐடி போலீசாரிடம் வழக்கு தொடர்பாக மரக்காணம் மற்றும் சித்தாமூர் காவல் நிலைய போலீசார் வழக்கு தொடர்பான ஆவணங்களை ஒப்படைத்தனர். இந்நிலையில் விஷசாராயம் தொடர்பான வழக்கை விசாரிக்க சிபிசிஐடியில் பணியாற்றும் 2 பெண் கூடுதல் டிஎஸ்பிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வழக்கு விசாரணை அதிகாரியாக கூடுதல் டிஎஸ்பி கோமதியும், செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் வழக்கு விசாரணை அதிகாரியாக கூடுதல் டிஎஸ்பி மகேஸ்வரியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு விசாரணை அதிகாரிகளும் தங்களது விசாரணையை நேற்று தொடங்கினர். அதைதொடர்ந்து 2 கூடுதல் டிஎஸ்பிகளும் விஷ சாராயம் தொடர்பாக விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட காவல் துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். அதைதொடர்ந்து இன்று 2 விசாரணை அதிகாரிகளும் அந்தந்த காவல் நிலையத்திற்கு நேரில் ெசன்று தங்களது நேரடி விசாரணையை தொடங்க உள்ளனர்.

* விழுப்புரத்தில் சிபிசிஐடி ஐஜி முகாம்
விஷசாராயம் இறப்பு குறித்து சிபிசிஐடி விசாரணையை தொடங்கி உள்ள நிலையில், விழுப்புரத்தில் அதிகாரிகளுடன் சிபிசிஐடி ஐஜி ஜோஷி நிர்மல்குமார் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் சிபிசிஐடி எஸ்பி முத்தரசி மற்றும் கூடுதல் எஸ்பி கோமதி உள்ளிட்ட போலீசார் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், இந்த வழக்கு தொடர்பாக குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரிப்பது குறித்தும், சாராய வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்த போலீசார், வருவாய்த் துறையினர் கண்டறிந்து விசாரணை நடத்துவது குறித்தும் அறிவுரை வழங்கினார்.

The post விஷசாராயம் குடித்து 21 பேர் இறந்த விவகாரம் சிபிசிஐடி விசாரணை தொடங்கியது: அதிகாரிகளுடன் 2 பெண் கூடுதல் டிஎஸ்பிக்கள் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : CPCIT ,Visharayam ,Chennai ,CPCID ,Vilapuram ,Dinakaran ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!