×

முந்தைய ஆட்சியாளர்களால் தரப்படாமல் நிலுவையில் இருந்த ஒரு லட்சம் மனுக்களுக்கு தீர்வு கண்டுள்ளோம்: தொமுச மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: தொழிலாளர் நல வாரியங்களில் முந்தைய ஆட்சியாளர்களால் தரப்படாமல் நிலுவையில் இருந்த 1 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு, நலத்திட்ட உதவிகள் செய்து தரப்பட்டுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை, கலைவாணர் அரங்கத்தில் தொமுச பேரவையின் 25-வது பொதுக்குழுக் கூட்டம் மற்றும் பொன்விழா மாநாடு நேற்று நடந்தது. இந்த மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:
ராணுவ வீரர்களுக்கும், காவல் துறையினருக்கும் சீருடை இருப்பதைப் போல – கழகத்தில் கருப்பும், சிவப்பும் கலந்திருக்கக்கூடிய சட்டை, பேண்ட் சீருடையாக அணிந்து இங்கு வந்து கலந்துக் கொண்டிருக்கக்கூடிய தொழிலாளர் தோழர்களை நான் பார்க்கிறேன். கம்பீரமாக காட்சி அளித்துக் கொண்டிருக்கக்கூடிய இந்த காட்சியைப் பார்க்கிறேன். இப்படிப்பட்ட ஒரு காட்சியைப் பார்க்கிறபோது, அத்தனை பேருக்கும் எழுச்சியும், உணர்ச்சியும் நிச்சயமாக ஏற்படும், அதுவும் எங்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது.

சிந்தனைச் சிற்பி சிங்கார வேலர் 1923-ஆம் ஆண்டு மே நாளை கொண்டாடியதைத் தொடர்ந்து இந்த ஆண்டு மே நாள் நூற்றாண்டைக் கொண்டாடியிருக்கிறோம். அத்தகைய நூற்றாண்டில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உருவான நமது திமுகவின் துணை அமைப்பாக விளங்கும் இந்த தொமுச பேரவையினுடைய பொன்விழா காண்பது நமக்கெல்லாம் பெருமை கொள்ளக்கூடிய ஒன்றாக அமைந்திருக்கிறது. தொழிலாளர் அணியோடு எனக்கு எப்போதும் ஒரு நட்பு கலந்த ஒரு மோதல் ஒன்று உண்டு. மோதலும் சொல்லலாம், ஊடலும் சொல்லலாம். ஆனால் மோதலாக இருந்தாலும், ஊடலாக இருந்தாலும் எப்போதும் உங்களுடன் நான் கூடலாகத்தான் இருப்பேன். என்ன மோதல், கூடல் சொல்றானே என்று சிலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம், என்ன என்று ஒரு கேள்வி கூட எழுந்திருக்கலாம்.

இன்றைக்கு அறிவாலயம் தலைமைக் கழகத்தினுடைய செயலகமாக, கழகத்தினுடைய தலைமைக் கழகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தொடக்க காலத்தில் வடசென்னை பகுதியில் இருக்கக்கூடிய ராயபுரத்தில் அறிவகம். அதற்குப் பிறகு அன்பகம். அதற்குப் பிறகு அறிவாலயத்தை கட்டி முடித்ததற்குப் பிறகு தலைமைக் கழகம் அன்பகத்திலிருந்து அறிவாலயத்திற்கு மாற்றப்பட்டது. அப்போது நாங்கள் ஒரு போட்டி வைக்கிறோம். ‘பத்து லட்சம் ரூபாயை திரட்டிக் கொண்டு யார் முதலில் எங்களிடத்திலே தருகிறார்களோ அவர்கள் அதை பயன்படுத்துவதற்கு அனுமதி தருகிறோம் என்றார்கள். தொழிலாளர் அணியோடு போட்டி போடுவது என்பது சாதாரண விஷயமல்ல. முயற்சித்தோம், வெற்றியும் கண்டோம். நாங்கள் அன்பகத்தை பயன்படுத்துவதற்கு அனுமதியைப் பெற்றோம். இறுதியாக அந்த வெற்றி எங்களுக்கு கிடைத்திருந்தாலும் அதைக் கிடைப்பதற்கு எங்களுக்கு ஊக்கம் தந்தவர்கள் யார் என்று கேட்டால் இங்கே அமர்ந்திருக்கக்கூடிய இந்த தொழிலாளர் அணி தான்.

திமுக, உழைக்கின்ற மக்கள், அடித்தட்டு மக்களுக்காக பாடுபடுகின்ற ஒரு இயக்கமாக, சாதிய ரீதியாக அடக்கப்பட்ட மக்கள் அனைவரும் தொழிலாளர்கள்தான் என்று சொன்னவர் பெரியார். அதனால் தான் ‘திராவிட விவசாய – தொழிலாளர் சங்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கினார். அந்த வழித்தடத்தில் தான் தொழிற்சங்கங்களை உருவாக்க வேண்டும் என்று அண்ணா சொன்னார். இங்கே நம்முடைய பொதுச் செயலாளர் சொன்னதுபோல, தனித்தனியாக இயங்கி வந்த சங்கங்களையெல்லாம் இணைத்து ஒரு மத்திய தொழிற்சங்கமாக உருவாக்க வேண்டும் என்ற சிந்தனைக்கு கலைஞர் உரு அமைத்துத் தந்தார். அதையொட்டி ஒரு குழுவினையும் அமைத்தார். அந்தக் குழுவின் அறிக்கையின் பேரில்தான் தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவை என்னும் அமைப்பை 1.05.1970 அன்று அதற்குரிய சட்டவிதிகளின்படி துவக்கி வைத்தார். தொ.மு.ச. பேரவைக்கென்று ஒரு கொடியையும் உருவாக்கிக் கொடுத்தார்.

தொ.மு.ச. பேரவை துவங்கிய காலத்தில் அனைத்து துறையிலும் இணைப்புச் சங்கங்கள் உருவாக்கப்பட்டது. கழகத்தின் முதல் தொழிலாளர் அணியின் செயலாளராக நம்முடைய பேராசிரியர் அன்பழகன் இருந்தார். முதல் தலைவராக நாஞ்சிலார், பொதுச்செயலாளராக காட்டூர் கோபால் நியமிக்கப்பட்டனர். ‘ தொ.மு.ச. பேரவையின் நடவடிக்கையால் இந்தியாவில் 19 மாநிலங்களில் இணைப்புச் சங்கங்கள் உருவாகியிருக்கின்றன. குறிப்பாக, ஒடிசா மாநிலத்தில் 40 சங்கங்கள் இணைக்கப்பட்டிருக்கிறது. போக்குவரத்து கழக தொழிற்சங்கப் பணிகளை பாராட்டி, சர்வதேச தொழிலாளர் பேரவையும் நம்முடைய சங்கங்களை இணைத்துக் கொண்டது.

அவசரச் சட்டம் பிறப்பித்து, வேளாண் தொழிலாளர்களுக்கு நியாயமான கூலி வழங்க வழிவகை செய்தது கழக அரசுதான். கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்துடன், விவசாயத் தொழிலாளர் நல வாரியம், மீனவர் நலவாரியம், கிராமக் கோயில் பூசாரிகள் நலவாரியம், தூய்மைப் பணிபுரிவோர் நலவாரியம் – உள்ளிட்ட 36 அமைப்புசாரா நலவாரியங்களை உருவாக்கி உதவிகள் செய்தது தி.மு.க. அரசினுடைய மிகப் பெரிய மகத்தான சாதனை. 1990ம் மே நாள் நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னை நேப்பியர் பூங்காவிற்கு ’மே தின பூங்கா’ என்று பெயரிட்டு, மே நாள் நினைவுச் சின்னத்தை நிறுவியவரும் நம்முடைய கலைஞர்தான். அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கு வாதாட உருவானதுதான் உடலுழைப்புத் தொழிலாளர் சட்டம் மற்றும் தொழிலாளர் நல வாரிய சட்டம்.

போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு அரசு ஊழியர்களைப் போல ஓய்வூதியம் வழங்கியது, பஞ்சப்படி உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் வழங்கியது கழக ஆட்சி. தொழில் வளருவதற்கு தொழிலாளர்களுடைய முக்கியத்துவத்தை உணர்ந்த கலைஞர், குறைந்தபட்ச போனஸ் 8.33 விழுக்காடு மற்றும் அதிகபட்ச போனஸ் 20 விழுக்காடு என ஒன்றிய அரசு சட்டத் திருத்தத்தை கொண்டு வரச் செய்ததும் கழக அரசுதான். அந்த வழியில்தான் இன்றைக்கு உங்கள் அன்போடு நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய நமது திராவிட மாடல் அரசும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தொழிலாளர் நல வாரியங்களில் முந்தைய ஆட்சியாளர்களால் தரப்படாமல் நிலுவையில் இருந்த 1 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு, நலத்திட்ட உதவிகள் செய்து தரப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஆண்டு காலத்தில், 6 லட்சத்து 71 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

25-க்கும் மேற்பட்ட தொழில்களுக்கு குறைந்த பட்ச ஊதியத்தினை நிர்ணயித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 10 ஆயிரம் தொழிலாளர்களுக்கு வீட்டு வசதித் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அ.தி.மு.க. அரசைப் போல் இல்லாமல் ஆட்சிக்கு வந்தவுடன், அவர்களுடைய ஊதிய முரண்பாடுகளைக் களைந்து 5 விழுக்காடு ஊதிய உயர்வையும், ஊதிய அட்டவணை முறையையும் அளித்திருக்கிறோம். ஒன்றிய அரசினுடைய மக்கள் விரோத, தொழிலாளர் விரோதப் போக்குகளைக் கண்டித்து 12 மத்திய தொழிற்சங்கங்கள் நடத்தும் போராட்டத்தில் தொ.மு.ச. பேரவையும் கலந்து கொண்டு இந்திய அளவில் உழைக்கின்ற மக்களுக்கு பெருமை சேர்த்து வருகின்றது. அதற்கான உரிமையை தலைமைக் கழகத்தின் சார்பில் தொ.மு.ச.-விற்கு வழங்கி இருக்கிறோம். இந்தப் பேரவை அமைப்பில்தான், மூன்றாண்டுக்கு ஒரு முறை தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெற்றது.

தொழிலாளர்களே, தொழிலாளர்களை நிர்வாகிகளாக தேர்ந்தெடுத்து செயல்படக்கூடிய ஒரு ஜனநாயக அமைப்பாக சீரும் சிறப்புமாக செயல்பட்டு வருகின்றது. தொழிலாளர் தோழர்கள் தங்கள் உழைப்போடு சேர்ந்து உங்கள் உடல் நலத்திலும் அக்கறை செலுத்துங்கள் என்று உங்களில் ஒருவனாக, இந்தத் தருணத்தில் உங்கள் அத்தனை பேரையும் நான் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் குடும்பத்தை நன்கு கவனியுங்கள். உங்கள் குழந்தைகளை நன்கு படிக்க வையுங்கள். கல்லூரிகள், உயர்கல்வி வரை நிச்சயமாக படிக்க வைக்கவேண்டும். அதுதான் அவர்களுக்கு நீங்கள் தர வேண்டிய மாபெரும் சொத்தாகும். ஆற்றல் மிக்க அறிவியக்கப் போராளிகளை உருவாக்கும் அமைப்பாக தொ.மு.ச. தொடர்ந்து செயல்பட வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். உங்கள் குடும்பத்தை நன்கு கவனியுங்கள். உங்கள் குழந்தைகளை நன்கு படிக்க வையுங்கள். கல்லூரிகள், உயர்கல்வி வரை நிச்சயமாக படிக்க வைக்கவேண்டும். அதுதான் அவர்களுக்கு நீங்கள் தர வேண்டிய மாபெரும் சொத்தாகும்.

The post முந்தைய ஆட்சியாளர்களால் தரப்படாமல் நிலுவையில் இருந்த ஒரு லட்சம் மனுக்களுக்கு தீர்வு கண்டுள்ளோம்: தொமுச மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Chief of the Conference of the Chief of the Chief of the Chief of the Chief of the CM. G.K. Stalin ,Chennai ,Labour Welfare Boards ,President ,B.C. ,G.K. Stalin ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...