×

ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு தமிழ்நாட்டின் பண்பாடு நிலைநாட்டப்பட்டுள்ளது: அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் தமிழ்நாட்டின் பண்பாட்டு மரபு நிலைநாட்டப்பட்டு இருக்கிறது என்று அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கே.எஸ்.அழகிரி(தமிழக காங்கிரஸ் தலைவர்): உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம், எதிர்காலத்தில் ஜல்லிக்கட்டு போட்டி சட்ட அனுமதியோடு தமிழர்களின் வீர விளையாட்டாக தொடர்ந்து நடைபெறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டிருப்பதையும், இதற்கான சட்டப் போராட்டத்தை நடத்திய தமிழக அரசையும் பாராட்டுகிறேன். உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன்.

வைகோ(மதிமுக பொது செயலாளர்): ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க மறுத்துள்ள , ஜல்லிக்கட்டு தொடர்பாக, ‘தமிழ்நாடு அரசு சமர்ப்பித்த ஆவணங்கள் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது. ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் கலாசாரத்தோடு ஒருங்கிணைந்த பகுதி என்பதை ஏற்றுக்கொள்கிறோம்’ என்று கூறி உள்ளது.

கே.பாலகிருஷ்ணன்(மார்க்சிஸ்ட் மாநில செயலாளர்): தமிழ்நாட்டின் பாரம்பரிய கலாசாரம் மற்றும் பண்பாட்டின் பிரதிபலிப்பான ஜல்லிக்கட்டு போட்டியை தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு தடையில்லை என்று தீர்ப்பளித்துள்ளது வரவேற்கத்தக்கது. இத்தீர்ப்பு ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிப்பதோடு, மாணவர்கள், இளைஞர்களின் போராட்டத்திற்கும், தமிழ்நாடு அரசின் சார்பில் நடத்திய சட்டப்போராட்டங்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

முத்தரசன்(இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்): விடுதலைக்குப் பின் தமிழ்நாட்டில் நடந்த மிக முக்கியமான போராட்டங்களில் ஜல்லிக்கட்டும் ஒன்றானது. பொதுமக்கள் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது. பாரம்பரிய விளையாட்டைப் பாதுகாக்க போராட்ட களத்தில் இறங்கிய மக்களுக்கும், சரியான தீர்ப்பை பெற சட்டப் போராட்டத்தை நடத்திய தமிழ்நாட்டு அரசுக்கும் பாராட்டுகளை தெரிவிக்கிறது.

ஓ.பன்னீர்செல்வம் (அதிமுக ஒருங்கிணைப்பாளர்): உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பில், ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு என்பது தமிழ்நாட்டின் கலாசாரத்தோடு ஒருங்கிணைந்த பகுதி என்றும், அரசால் இயற்றப்பட்ட சட்டம் அடிப்படை உரிமைகளை மீறவில்லை என்றும் தெரிவித்து, என்னால் முன்மொழியப்பட்டு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2017ம் ஆண்டு விலங்குகள் வதை தடுப்பு (தமிழ்நாடு திருத்தம்) சட்டம் செல்லும் என்று கூறியுள்ளது. இதனை அதிமுக சார்பில் வரவேற்கிறேன்.

ஜி.கே.வாசன்(தமாகா தலைவர்): உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டு நடத்துவது சம்பந்தமாக அளித்திருக்கும் தீர்ப்பு தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டுக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரமாக, தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்திருக்கிறது உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறேன்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்: எடப்பாடி பழனிசாமி சார்பில் கடுமையான வாதங்கள் உச்ச நீதிமன்றத்தில் அதிக நேரம் வாதிடப்பட்டது. உச்ச நீதின்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, தமிழர்களின் கலாசாரத்துக்கு மதிப்பளித்திருக்கிறது. ஜல்லிக்கட்டு பாதுகாக்கப்பட்ட விளையாட்டாக மாற்றப்பட்டது.

நெல்லை முபாரக்(எஸ்.டி.பி.ஐ.கட்சி தலைவர்): ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பளித்துள்ளது.

கி.வீரமணி(திராவிடர் கழக தலைவர்): ஜல்லிக்கட்டு நடத்தத் தடையில்லை என்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கதும் வரலாற்றுச் சிறப்புமிக்கதும் ஆகும். இது, சிந்துவெளி நாகரிகம் முதல் இன்று வரை தொடரும் திராவிடர் வரலாற்றுத் தொடர்ச்சியின் அடையாளத்திற்குக் கிடைத்த பெரு வெற்றியாகும்.

The post ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு தமிழ்நாட்டின் பண்பாடு நிலைநாட்டப்பட்டுள்ளது: அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Jallikattu ,Tamil Nadu ,Chennai ,
× RELATED மதிப்பெண், சீனியாரிட்டி முறையில் பதவி...