×

மும்பை தாக்குதல் குற்றவாளி பாக்.வம்சாவளி தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவு: அமெரிக்க நீதிமன்றம் அதிரடி

நியூயார்க்: மும்பை தாக்குதல் குற்றவாளி தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. 2008ம் ஆண்டு நவம்பர் 26 மும்பையின் பல்வேறு இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 அமெரிக்கர்கள் உள்பட 166 பேர் உயிரிழந்தனர். 9 பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டனர். அவர்களில் அஜ்மல் கசாப்பை தவிர மற்றவர்களை ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர். கசாப் 2012ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி தூக்கிலிடப்பட்டார். இந்த தாக்குதலில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி டேவிட் ஹெட்லி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு 35 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

டேவிட் ஹெட்லியின் நண்பரும், கனடாவில் வசித்து வந்த பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த தொழிலதிபர் தஹாவூர் ராணா மும்பை தாக்குதலுக்கு உதவிய வழக்கில் கடந்த 2020ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவர் தற்போது லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பெடரல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மும்பை தாக்குதல் வழக்கில் ராணாவின் பங்கு குறித்து விசாரித்து வரும் தேசிய புலனாய்வு முகமை, ராணாவை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது. இதையடுத்து அவரை நாடு கடத்தும்படி அமெரிக்காவின் கலிபோர்னியா நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு மனு தாக்கல் செய்தது. இந்நிலையில், தஹாவூர் ராணா மீதான குற்றங்களுக்காக அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தலாம் என கலிபோர்னியா மத்திய மாவட்ட நீதிபதி ஜாக்குலின் ஜூல்ஜியான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் பிறப்பித்த 48 பக்க உத்தரவில் கூறியிருப்பதாவது: இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஒப்படைப்பு ஒப்பந்தத்தின் கீழ் 62 வயதான தஹாவூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இந்தியாவின் கோரிக்கைக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றம் பரிசீலித்து, விசாரணையில் முன்வைக்கப்பட்ட வாதங்களையும் பரிசீலித்து இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளது. ராணாவை நாடு கடத்தும் உத்தரவை நிறைவேற்ற அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளருக்கு நீதிமன்றம் அனுமதி அளிக்கிறது. அதே சமயம் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்குக் கோரப்படும் குற்றங்களை அவர் செய்ததாக நம்புவதற்கு சாத்தியமான காரணங்கள் இல்லாவிட்டால், அவரை நாடு கடத்துவதை நீதிமன்றம் சான்றளிக்க முடியாது.

இருப்பினும் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான ஒப்படைப்பு ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவிடம் ராணாவை ஒப்படைக்கப்பட வேண்டும். அப்படி ஒப்படைக்க கோரப்பட்ட குற்றங்களை ராணா செய்ததாக நம்புவதற்கு சாத்தியமான காரணம் இருப்பதாக நீதிமன்றம் கண்டறிந்துள்ளது. எனவே அவரை நாடு கடத்த நீதிமன்றம் அனுமதி அளிக்கிறது. இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்து உள்ளார். இதையடுத்து அதிபர் பைடன் அனுமதி பெற்று ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த தேவையான நடவடிக்கைகளை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் எடுப்பார் என்று தெரிகிறது. இதற்கிடையே நாடு கடத்துவதை தடுக்க ராணா மேல்முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபர் பைடனின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி அமெரிக்கா செல்லவுள்ள நிலையில், அமெரிக்க நீதிமன்றத்தின் அனுமதி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

* பயங்கரவாத நாடாக பாகிஸ்தானை அறிவிக்க உதவும்
மகாராஷ்டிரா துணைமுதல்வர் தேவேந்திர பட்நவிஸ், “அமெரிக்க நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மும்பை தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளது என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை உறுதி செய்கிறது. இது இந்தியாவுக்கு கிடைத்த சட்ட வெற்றி. இதன் மூலம் பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்க, பட்டியலிட, ஐநாவின் ஒப்பந்தங்களின்கீழ் பாகிஸ்தானுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்க நீதிமன்றத்தின் தீர்ப்பு உதவும்” என்று தெரிவித்தார்.

The post மும்பை தாக்குதல் குற்றவாளி பாக்.வம்சாவளி தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவு: அமெரிக்க நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Dahavur ,US court ,New York ,Dahavur Rana ,India ,Dinakaran ,
× RELATED மும்பையில் கடல் சீற்றமாக இருக்கும்;...