×

6 பேரை கொன்ற 2 யானைகள் மயக்க ஊசி செலுத்தி பிடிப்பு

திருப்பத்தூர்: தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் ஆந்திர எல்லையில் 6 பேரை கொன்றுவிட்டு, திருப்பத்தூர் மாவட்டத்தில் அட்டகாசம் செய்து வந்த 2 யானைகளை மருத்துவ குழுவினர் மயக்க ஊசி செலுத்தி நேற்று பிடித்தனர். அரசு நடவடிக்கையால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர். கர்நாடக வனப்பகுதியில் இருந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியேறிய 5 காட்டு யானைகளில் 2 ஆண் யானைகள் கடந்த 6ம் தேதி வழி தவறி தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சுற்றித்திரிந்து அங்கு 4 பேரை மிதித்து கொன்றது. அதன் பிறகு ஆந்திர மாநிலம் மல்லானூர்- தமிழ்நாடு ஆந்திர எல்லையில் 2 பேரை மிதித்துக் கொன்றது.

இதையடுத்து, திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி, ஜோலார்பேட்டை, ஏலகிரி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்தது. யானைகளை வனத்துறையினர் 5 குழுக்களாக பிரிந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை முதல் திப்பசமுத்திரம் பகுதியில் விவசாய நிலத்தில் 2 யானைகளும் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது. 6 நாட்களாக பொதுமக்களை அச்சுறுத்தி வரும் நிலையில்யானைகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ,அரசுக்கு கோரிக்கை வைத்தார். இதையடுத்து அரசு உத்தரவின்பேரில், நீலகிரி மாவட்டம் முதுமலை சரணாலயத்தில் இருந்து சின்னத்தம்பி, வில்சன், உதயன் ஆகிய 3 கும்கி யானைகள் திருப்பத்தூருக்கு நேற்று வரவழைக்கப்பட்டது.

கால்நடை மருத்துவ குழுவினரும் வரவழைக்கப்பட்டு யானைகளை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். தொடர்ந்து நேற்று மாலை திப்பசமுத்திரம் பகுதியில் சுற்றித்திரிந்த 2 யானைகளையும் மருத்துவக்குழுவினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். தொடர்ந்து 3 கும்கி யானைகள் உதவியுடன் 2 யானைகளையும் லாரிகளில் ஏற்றி, திருப்பத்தூரில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் தங்க வைத்தனர். முதுமலை சரணாலயத்தில் இன்று யானைகளை விட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார். அரசின் நடவடிக்கையால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

The post 6 பேரை கொன்ற 2 யானைகள் மயக்க ஊசி செலுத்தி பிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Tirupattur ,Darmapuri ,Krishnagiri ,Andhra ,Attakasam ,Dinakaran ,
× RELATED வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர்...