×

39 பேருடன் மாயமான சீன கப்பலில் 2 பேர் பலி மீட்பு பணியில் இந்திய விமானம்

பீஜிங்: இந்திய பெருங்கடல் பகுதியில் 39 பேருடன் மாயமான சீன மீன்பிடி கப்பலில் 2 பேர் பலியானார்கள். மீதம் உள்ளவர்களை தேடும் பணியில் இந்திய கடற்படைக்கு சொந்தமான பி81 விமானம் ஈடுபட்டுள்ளது. இந்திய பெருங்கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த சீன மீன்பிடி கப்பல் மே 16ம் தேதி அதிகாலை கடலில் மூழ்கியது. இந்த விபத்தில் கப்பலில் இருந்த 17 சீனர்கள், 17 இந்தோனேசியர்கள் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த 5 பேர் உள்பட 39 பேர் மாயமாகினர். அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இதில் 2 பேர் பலியானது தெரிய வந்தது. கடலில் மூழ்கி மாயமானவர்களை மீட்க சர்வதேச கடல்சார் தேடல் மற்றும் மீட்பு குழுவின் உதவியை சீனா நாடியுள்ளது.

சீனா விடுத்த கோரிக்கையை ஏற்று பல்வேறு நாடுகள் மாயமான கப்பலை மீட்க உதவி செய்து வருகின்றன. அதன்படி இந்திய கடற்படைக்கு சொந்தமான பி-81 கடல் ரோந்து விமானத்தை இந்தியா அனுப்பியுள்ளது. இந்திய பெருங்கடல் பகுதியில் மோசமான வானிலை இருந்த போதிலும் பி-81 ரோந்து விமானம் நடத்திய விரிவான தேடுதல் வேட்டையில் மூழ்கிய கப்பலின் பல பாகங்களை கண்டுபிடித்துள்ளது.

ஆஸ்திரேலிய கடல்சார் தேடல் மற்றும் மீட்பு குழுவும் இந்திய பெருங்கடல் பகுதிக்கு ஒரு விமானம் மற்றும் கப்பலை அனுப்பியுள்ளது. இதேபோல், இலங்கை, இந்தோனேசியா, மாலத்தீவு, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளும் மாயமான கப்பலை தேட, தங்கள் நாட்டு குழுக்களை அனுப்பியுள்ளனர். இதுகுறித்து சீன வௌியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தேடுதல் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. எங்களுக்கு உதவ கப்பல், விமானங்களை அனுப்பிய நாடுகளுக்கு சீனா நன்றியை தெரிவித்து கொள்கிறது” என்று தெரிவித்தார்.

The post 39 பேருடன் மாயமான சீன கப்பலில் 2 பேர் பலி மீட்பு பணியில் இந்திய விமானம் appeared first on Dinakaran.

Tags : Beijing ,Indian Ocean region ,
× RELATED இந்தியா-சீனா இடையே வலுவான உறவு இரு...