×

பாலில் கலப்படம் செய்து விற்றால் கடும் நடவடிக்கை: அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை

சென்னை: கலப்படம் செய்யப்பட்ட தரமற்ற பாலை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் இல்லத்தில் பால்வளத்துறையின் அமைச்சராக புதிதாக பொறுப்பேற்ற மனோ தங்கராஜ் தலைமையில் முதல் மாதாந்திர ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதாவது:
ஆவின் நிறுவனம் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு இடையே பாலமாக விளங்குகிறது. ஆவின் நிறுவனத்தை மேம்படுத்துவதற்கு விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் கருத்துகள் கேட்கப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தினசரி பால் கையாளும் திறனை 40 லட்சம் லிட்டரில் இருந்து 70 லட்சமாக உயர்த்த இந்த ஆண்டிற்குள் நடவடிக்கை எடுக்கப்படும். ஆவினில் இனி வரும் காலங்களில் உறுதியாக மாற்றம் ஏற்படும்.

அரசின் அனுமதியின்றி பால் விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கலப்பட பால் விற்பனை செய்வது மன்னிக்க முடியாத குற்றம். விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தரமற்ற பால் விற்பனை செய்து, பாதிப்பு ஏற்பட்டால் அரசு பதில் சொல்லியாக வேண்டும். அதனால் அனுமதியின்றி பால் விற்பனையை தவிர்க்க வேண்டும். உணவு தர கட்டுப்பாட்டு அதிகாரிகளை முழுமையாக பயன்படுத்த இருக்கிறோம். மேலும் அனுமதி இன்றி செயல்படுகின்ற பால் விற்பனையாளர் சங்கங்கள் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தரமற்ற பால் விற்பனை செய்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆவின் பால் தரம் சிறப்பாக உள்ளதால் அதனை மேலும் மேம்படுத்த தற்போது முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆவின் குடி தண்ணீர் திட்டம் இந்த வருடம் மீண்டும் கொண்டுவரப்படும். இவ்வாறுஅவர் கூறினார்.

The post பாலில் கலப்படம் செய்து விற்றால் கடும் நடவடிக்கை: அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Minister ,Mano Thangaraj ,Chennai ,Resources ,
× RELATED 10 ஆண்டுகளில் மோடியின் பிரதமர் பதவி...