×

அரசியலில் கைவிட்ட தாமரையை வறுத்தெடுத்த தேனிகாரர் தரப்பு பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘தாமரை மற்றும் அக்கட்சியின் பிக் பிரதரை யார் வெளுத்து வாங்கினாங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தாமரை கட்சியை தேனிக்காரர் குரூப் திடீரென அட்டாக் பண்ணியது வியப்பும் அதிர்ச்சியும் கலந்த புது தகவலாக இருக்கே என்று அரசியல் கட்சி வட்டாரத்தில் பேச்சு ஓடுது. அதாவது, சேலத்துக்காரரும், தேனிக்காரரும் குரூப் பாலிடிக்ஸ் செய்தாலும் அவர்களின் பின்னால் இருந்து வழிநடத்தும் தாமரை கட்சியை முடிந்தவரை அட்ஜெஸ்ட் செய்துட்டு போவாங்க. அதிலும் தேனிக்காரரு, தாமரை கிட்ட ஏகத்துக்கும் பம்முவாரு என்பது அவரது கட்சிக்காரர்களுக்கே தெரிந்த விஷயம். இப்படிப்பட்ட நிலையில் அவரது பெங்களூரு நண்பரும் கட்சிக்காரருமானவர், தாமரையை வறுத்தெடுத்துள்ளாராம். அதுவும் சேலத்துக்காரின் சொந்த ஊரில் தானாம். தாமரை ஒரு கட்சியா, தமிழ்நாட்டுல ஒரு கவுன்சிலருக்கே துப்பில்லாத கட்சி அது.

தமிழ்நாட்டுல பார்லிமென்ட் தேர்தல்ல 20 சீட்டு கேட்டு வாங்கினாலும் வேட்பாளரை நிற்க வைக்கவே ஆள் இல்லை. அதன் மாநிலத்தலைவரு அரசியல்வாதியே அல்ல. கஞ்சியில காக்கி டிரஸ் போட்டவரு மாதிரி இதயத்தையும் கஞ்சி போட்டு ஸ்டிப்பா வைச்சிருக்காரு. அவரு எங்க கர்நாடகாவுல அரசியல்வாதிகளுக்கு சல்யூட் அடித்துக் கொண்டிருந்தவர் என்று ஒரு விளாசிவிளாசிட்டாராம். இதற்கு தேனியில் இருந்து கிடைத்த சிக்னல்தான் காரணம் என தாமரை நிர்வாகிகள் பேசிக்கிறாங்க. இலைகட்சியின் உரிமை விஷயத்தில் தாமரையின் தலைமை சேலத்துக்காரருக்கே பெரிய சப்போர்ட் பண்ணிச்சு. இதுதாங்க தாமரையை அண்ணன் அட்டாக் பண்ணுவதற்கு முக்கிய காரணம்னு தேனிகாரரை சேர்ந்தவர்கள் பேசிக் கொண்டனர்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ சேலம் தலைவரின் வரவேற்பு எல்லாம் நாடகமா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சியின் தலைவரான சேலத்துக்காரர் மாங்கனி நகரில் இருந்து சென்னைக்கு போகும்போது வழியனுப்ப வரணுமுன்னு முன்கூட்டியே சொல்லிடுவாராம். அதன்படியே கொடியோடு ரயில் நிலையத்திற்குள் வரும் அடிப்பொடிகள் நரம்பு புடைக்கும்படி கோஷத்தை எழுப்பி ரயிலேத்தி வைப்பாங்களாம். அதே போல சென்னையிலும் வரவேற்பாங்களாம். இதுவே இவரது எளிமைக்கு எடுத்துக்காட்டுன்னு அடிப்பொடிகள் சொல்றாங்க. ஆனா அவரது எதிர் பார்ட்டியோ இது ஒரு வெத்து வெளம்பரமுன்னு சொல்லிக்கிட்டு அதுக்கு எடுத்துக்காட்டையும் சொல்றாங்க. கடந்த 2019ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு கூட தனியாளா ரயில் நிலையத்துக்கு போவாராம். அப்போது யாராச்சும் ஒருத்தராவது வாங்கன்னு ரெயில்நிலையத்திற்கு கூட்டிக்கிட்டுத்தான் போவாராம்.

ஆனா பவர் வந்தவுடன் கூட்டத்தை கூட்டிக்கிட்டு போறாருன்னு.. சிரித்தபடி சொன்னார் விக்கியானந்தா. ‘‘குக்கர் கூட்டணியை வெறுக்கும் தொண்டர்கள், வேறு கட்சி தாவும் முடிவில் இருக்கிறாங்களாமே, உண்மையா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இலை கட்சியில எதிரும், புதிருமாக இருந்த குக்கர் தலைவரும், தேனிக்காரரும் இணைந்து செயல்பட முடிவு செஞ்சிருக்காங்க. இதனால, கூடிய விரைவில குக்கர் கட்சியோட தேனிக்காரர் இணைவாருன்னு சொல்றாங்க. ஆனா, குக்கர் கட்சியோட, இணைய, தேனிக்காரர் அணியில உள்ள நிர்வாகிங்க தயங்குறாங்களாம். ஏற்கனவே ஒவ்வொரு மாவட்டத்துலயும் குக்கர் கட்சியும், தேனிக்காரர் அணியும் தனி, தனி மாவட்ட நிர்வாகிகளோட செயல்பட்டு வருது.

அவர்கள்ல பல பேரு, சீனியர்களாக இருக்காங்க. குக்கர் கட்சியில யாரும் பெரிய அளவுல சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லையாம். அப்படி இருக்க, மாவட்ட அளவில, தேனிக்காரர் அணியில இருக்குறவங்க, குக்கர் கட்சிக்கு போனா.. அங்கேயே நம்மை யாரும் மதிக்கமாட்டாங்க.மேலும் நமக்கு பின்னால கட்சிக்கு வந்தவங்ககிட்ட கைகட்டி வேலை பார்க்க வேண்டிய நிலை ஏற்படும்னு நினைக்கிறாங்களாம். கடைசியில, குக்கர் கட்சி நிர்வாகிங்களோட கை தான் ஓங்கும். இதனால் தேனிக்காரர், குக்கர்கட்சி தலைவருடனான சந்திப்பை நிர்வாகிங்க யாரும் விரும்பலையாம். வேறு கட்சி அல்லது வேறு அணிக்கு தாவ ரெடியாகி வர்றாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘நாகர்கோவில்ல யாருக்கு யார் பிரச்னையா இருக்காங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.

‘‘இலை கட்சியில் குமரி கிழக்கு மற்றும் மேற்கு என்று நிர்வாக ரீதியாக இரு மாவட்டங்கள் இருக்கு. மேற்கு மாவட்ட நிர்வாகியாக தற்போது தங்கமானவர் உள்ளார். ஆனால், அவரிடம் செயல்பாடு இல்லையாம். கிழக்கு மாவட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் ஒருவரும், முன்னாள் மாவட்ட செயலாளராக இருந்தவரும், முன்னாள் எம்எல்ஏ ஒருவரும் என்று போட்டியில் உள்ளாராம். ஆனால் இவர்களில் யாருக்கேனும் வாய்ப்பை அளித்து விட்டால் நாளை அது நமக்கே சிக்கலாகி விடக்கூடாது என்று எண்ணும் தற்போதைய பவர் பாயின்ட் ஆக உள்ள முன்னாள் அமைச்சரானவர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டத்துக்கு சேர்த்து ஒரே ஒருங்கிணைந்த தலைவராக தானே ஆகிவிடலாமா? என்று எண்ணிக்கொண்டு இருக்கிறாராம்.

இது தொடர்பாக சேலம்காரரிடம் பேசிவிட்டதாகவும், இதனால் விரைவில் குமரி மாவட்ட ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் அறிவிப்பு வெளிவரலாம் என்று பேசிக்கிறாங்க இலை கட்சி தொண்டர்கள்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘டெஸ்ட்டிங் சென்டர் தேவையா என்று கேட்கும் அளவுக்கு ரொம்ப கேவலமாக உள்ள மாவட்டம் எது…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கோவையில் ரோடு தரம் கண்டறிய தரக்கட்டுப்பாட்டு பிரிவு இருக்கு. இந்த பிரிவின் பணிகள் முடங்கி மந்தமாயிடுச்சு. தர பரிசோதனை கூடமும் காட்சி பொருளாக இருக்குது. இன்னொரு பரிசோதனை கூடத்தில் இயந்திரங்கள் அகற்றி அங்கே பொறியாளர்கள் வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாத்திட்டாங்க. ரோடு தரம், தார் அளவு, ரோட்டின் தடிமன் சரியா என தரக்கட்டுபாட்டு பிரிவுக்காரங்க பாக்கிறதில்லை. பணி நடக்கும் இடத்திற்கும் இன்ஜினியர் போறதில்லை. மண், கல் தரமும் ஆய்வு செய்ய மாட்டீங்கறாங்க.

மேம்பாலம், ரோடு பணிகள் நடத்தும் இடத்திற்கு தர கட்டுப்பாட்டு பிரிவுக்காரங்க எட்டி பாக்கிறதில்லை. பல இடங்களில் ரோடு சமமாக இல்லாமல் ஏற்ற தாழ்வாக இருப்பதாக புகார் சொல்றாங்க. ரோடு போடும்போதே இந்த தவறுகளை தரக்கட்டுப்பாட்டு பிரிவு கண்காணிக்காமல் விடறதால ரோடு குழியும் மேடுமாக காட்சி தருவதாக வாகன ஓட்டிகள் புலம்பறாங்க. தார் கலவையின் அளவை சரியான முறையில் கணக்கிடணும். பணிமனையில் பெயரளவிற்கு ஜல்லி, மண் குவித்து வைத்திருக்கிறாங்க. எந்த டெஸ்டும் நடத்தாமல் இந்த டெஸ்டிங் சென்டர் எதற்கு வைத்திருக்கிறாங்கன்னு தெரியலனு ஹைவேஸ் ஊழியர்கள் கேலியாக பேசிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா.

The post அரசியலில் கைவிட்ட தாமரையை வறுத்தெடுத்த தேனிகாரர் தரப்பு பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Thenikara ,wiki ,Yananda ,Tamara ,Big Brother ,Peter ,Thenikaran ,lotus ,Dinakaran ,
× RELATED ரூ4 கோடி விவகாரத்தில் சொந்த கட்சி...