×

தனியார் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு வாடகையில்லா குடியிருப்பு கோரி வழக்கு: ஒன்றிய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

சென்னை: அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள், ஆசிரியர்களுக்கு வாடகையில்லாத குடியிருப்புகள் கட்டிக் கொடுப்பதை கட்டாயமாக்கக் கோரிய வழக்கில் ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் பதில் தருமாறு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் புருஷோத்தமன் தாக்கல் செய்துள்ள மனுவில், மாணவர்களிடம் இருந்து அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் அவற்றை ஆசிரியர்களின் நலனுக்காக பயன்படுத்துவதில்லை. ஆசியர்களுக்கு குறைவான ஊதியம் அளிப்பதோடு, வசூலிக்கப்படும் கட்டணத்தை மற்ற தேவைகளுக்கு பயன்படுத்துகிறார்கள். அதனால், ஆசிரியர்களுக்கு வாடகையில்லா குடியிருப்புக்களை கட்டிக் கொடுப்பதை கட்டாயமாக்க ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.

மேலும், ஆசிரியர்கள் குடியிருப்புகள் கட்ட தேவையான நிலத்தை ஒதுக்கீடு செய்யவும், வீடு வாங்க விரும்பும் ஆசிரியர்களுக்கு மானியம் வழங்கவும், வட்டியில்லா வீட்டுக்கடன் வழங்கவும் உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் இந்த மனுவை ஏற்றுக் கொண்டால் தேவையில்லாத சிக்கல் ஏற்படும் என்று அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி ஒன்றிய அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

The post தனியார் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு வாடகையில்லா குடியிருப்பு கோரி வழக்கு: ஒன்றிய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Union ,State Governments ,CHENNAI ,
× RELATED தமிழக மீனவர்களின் எதிர்கால...