×

பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தில் வளர்க்கப்படும் மரக்கன்றுகளை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு

சென்னை: பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தில் வளர்க்கப்படும் மரக்கன்றுகளை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு செய்தார். செங்கல்பட்டு மாவட்டம் நன்மங்கலத்தில் உள்ள தமிழ்நாடு உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்ட மேலாண்மை அலுவலக கூட்ட அரங்கில் இன்று (18.05.2023) தமிழ்நாடு வனத்தோட்டக் கழகம், தமிழ்நாடு மாநில பல்லுயிர்ப்பெருக்க வாரியம், காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டம் மற்றும் அரசு ரப்பர் கழகம் பணிகள் குறித்து மாண்புமிகு வனத்துறை அமைச்சர் டாக்டர் மா. மதிவேந்தன் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியின் மூலம் காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டம் 2022-23ம் ஆண்டு முதல் 2029-30 வரை எட்டு ஆண்டுகளுக்கு ரூ.920.52 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படுவதனை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். இத்திட்டத்தின் கீழ் 2022-23ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு திட்டப் பணிகள் மற்றும் 2023-24ஆம் ஆண்டில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தக்க அறிவுரை வழங்கினார்கள்.

தமிழ்நாடு வனத் தோட்டக் கழகம் சார்பாக 21,540 எக்டேர் பரப்பளவில் பராமரிக்கப்பட்டு வரும் மரங்கள், அவற்றின் மூலம் ஈட்டப்படும் வருவாய், இத்திட்டத்தில் ஏற்படும் இடர்பாடுகள் குறித்து ஆய்வு செய்த அமைச்சர் தமிழ்நாடு வனத்தோட்டக் கழகம் மூலம் அதிகளவு மரக்கன்றுகள் நடவும், அதன் மூலம் வருவாயினை பெருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். தமிழ்நாடு பல்லுயிர்ப் பெருக்க வாரிய நடவடிக்கைகள் மற்றும் அவ்வாரியத்தின் மூலம் அமைக்கப் பெற்றுள்ள உயிர்ப்பன்மை மேலாண்மை குழுக்களின் நடவடிக்கைகள் மற்றும் அரசு ரப்பர் கழகத்தின் செயல்பாடுகள், மேலும் வருவாய் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் குறித்தும் வனத்துறை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (வனத்துறைத் தலைவர்) சுப்ரத் மஹாபத்ர, தமிழ்நாடு மாநில பல்லுயிர்ப்பெருக்க வாரிய செயலாளர் சேகர் குமார் நீரஜ், தமிழ்நாடு வனத்தோட்டக் கழகத் தலைவர் பொ.ராஜேஸ்வரி, அரசு ரப்பர் கழக தலைவர் கே.கே. கவுஷல், காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்ட தலைமை திட்ட இயக்குநர் ஐ. அன்வர்தீன், மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னதாக நன்மங்கலத்தில் உள்ள மத்திய நாற்றங்கால் பண்ணையில் பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்திற்காக நடப்பாண்டிற்கு 41 ஆயிரம் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருவதையும் வனக்களப்பணியார்களுக்கு வழங்கப்படவுள்ள மின்கல இருசக்கர வாகனம் (இ பைக்) பயன்பாட்டையும் அமைச்சர் மா. மதிவேந்தன் ஆய்வு செய்தார்.

The post பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தில் வளர்க்கப்படும் மரக்கன்றுகளை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Minister Madhivendan ,Chennai ,Minister ,Madivendhan ,Chengalpadu District ,Nanamangalam ,Mathivendan ,
× RELATED போதைப்பொருள் வழக்கில் அதிமுக...