×

ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார் ஆளுநர்: நாளை மறுநாள் கர்நாடக முதல்வராக சித்தராமையா பதவியேற்பு..!

பெங்களூரு: கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து சித்தராமையா ஆட்சி அமைக்க உரிமை கோரினார். கர்நாடக சட்டசபை தேர்தலில் 224 தொகுதிகளில் 135 இடங்களை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது. இதனால் தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கவுள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி 34 ஆண்டுகளுக்கு பிறகு அதிக இடங்களை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் காங்கிரஸ் சார்பில் யார் முதல்வர் என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னாள் முதல்வர் சித்தராமையா, கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் முதல்வர் பதவியை பிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். பெங்களூருவில் 15ம் தேதி நடந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் புதிய முதல்வரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் கட்சி மேலிடத்துக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் கருத்துக்களை கேட்டு ரகசிய வாக்கெடுப்பு நடத்திய மேலிட பார்வையாளர்கள், அதன் அறிக்கையை கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் வழங்கினர். இதில் பெரும்பான்மை எம்எல்ஏக்களின் ஆதரவு சித்தராமையாவுக்கு கிடைத்ததாக தெரிகிறது. இதனால் மேலிடத்தின் அழைப்பின்பேரில் சித்தராமையா டெல்லி புறப்பட்டு சென்றார். மறுநாள் சிவக்குமாரும் டெல்லி சென்றார். நேற்று முன்தினம் மல்லிகார்ஜுன கார்கேவை அவரது இல்லத்தில் சித்தராமையா, சிவக்குமார் தனித்தனியாக சந்தித்து பேசினர். அப்போது சிவக்குமார், தான் கஷ்டப்பட்டு கட்சியை பலப்படுத்தி வெற்றி பெற வைத்ததாகவும், தனக்கு முதல்வர் பதவியை வழங்கியே தீர வேண்டும். முதல்வர் பதவி வழங்காவிட்டால் ஆட்சியில் தான் பங்கேற்க போவதில்லை என்று கூறியதாக தகவல் வெளியானது.

இதேபோல், தான் 5 ஆண்டுகள் முதல்வராக இருந்தபோது எந்த தவறும் செய்ததில்லை. கட்சியின் வெற்றிக்கு தனது பங்களிப்பு அதிகமாக இருப்பதால் தனக்கு முதல்வர் பதவி வழங்க வேண்டுமென சித்தராமையா கூறியதாக தெரிகிறது. இதைதொடர்ந்து ராகுல் காந்தியை சந்தித்து இருவரின் கருத்துகளையும் மல்லிகார்ஜுன கார்கே கூறினார். இந்த நிலையில் ராகுல் காந்தியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலை சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் தனித்தனியாக சந்தித்து பேசினர். அப்போது, சித்தராமையாவிடம் பேசிய அவர், தங்களுக்கு முதல்வர் பதவி வழங்க இருப்பதாகவும், அனைவரையும் அரவணைத்து சிறப்பான முறையில் ஆட்சி நிர்வாகத்தை நடத்த வேண்டுமெனவும் ராகுல் காந்தி கூறினாராம். இதைதொடர்ந்து சந்தித்த சிவக்குமாரிடம் அடுத்தாண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அடிப்படையில் முதல்வர் பதவி சித்தராமையாவுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தங்களுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படும். வருங்காலத்தில் உரிய பதவி வழங்கப்படும் என்று ராகுல் காந்தி உறுதியளித்தாராம். இதை ஏற்க மறுத்த சிவக்குமார், தனக்கு முதல்வர் பதவி வழங்காவிட்டால், சித்தராமையாவுக்கும் அந்த பதவி வழங்கக்கூடாது. அதற்கு பதிலாக மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முதல்வர் பதவி வழங்க வேண்டுமென கூறியதாக தகவல் வெளியானது. இதை ஏற்காத ராகுல்காந்தி, கட்சியின் நலன்கருதி இந்த முடிவை தாங்கள் ஏற்க வேண்டுமென சிவக்குமாரிடம் கேட்டுக்கொண்டார். இதற்கு சம்மதம் தெரிவித்து விட்டு அதிருப்தியுடன் சிவக்குமார் வெளியே வந்து மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், தனக்கு முதல்வர் பதவி வழங்காதது குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் வரும் 20ம் தேதி பெங்களூருவில் பதவியேற்பு விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் பதவி ஏற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே அமைச்சர் பதவிகளை பிடிக்க இருதரப்பு ஆதரவு எம்எல்ஏக்கள் மற்றும் மூத்த எம்எல்ஏக்களிடையே போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது. சித்தராமையா மற்றும் சிவக்குமார் ஆதரவாளர்கள் முக்கிய இலாகாக்களை கேட்டு அடம் பிடிக்க துவங்கியுள்ளனர். இந்நிலையில் பெங்களூருவில் நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கர்நாடக காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து ஆட்சி அமைக்க சித்தராமையா உரிமை கோரினார். சித்தராமையாவின் கோரிக்கையை ஏற்று ஆட்சி அமைக்க கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அழைப்பு விடுத்தார். முதல்வராக சித்தராமையா, துணை முதல்வராக டி.கே.சிவகுமார் பதவி ஏற்க ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அழைப்பு விடுத்தார். நாளை மறுநாள் பெங்களூரு கண்டிர்வா மைதானத்தில் பகல் 12.30 மணிக்கு பதவி ஏற்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.

The post ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார் ஆளுநர்: நாளை மறுநாள் கர்நாடக முதல்வராக சித்தராமையா பதவியேற்பு..! appeared first on Dinakaran.

Tags : Governor ,Siddaramaiah ,Chief Minister of Karnataka ,Bengaluru ,Karnataka ,Thavarchand Gehlot ,Karnataka assembly elections ,
× RELATED காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடக...