×

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் பழைய இரும்பு கிடங்கில் தீ விபத்து: ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசம்

தேனி: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி- தெப்பம்பட்டி சாலையில் பழைய இரும்பு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பூட்டப்பட்டிருந்த கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டு அப்பகுதியில் கரும்புகை பரவியது.

ஆண்டிப்பட்டி- தெப்பம்பட்டி சாலையில் உள்ள அரசு கூட்டுறவு பெட்ரோல் பங்க் எதிரே ஆண்டிப்பட்டி நாடார் தெருவை சேர்ந்த குமார் என்பவர் பழைய இரும்பு குடோன் நடத்தி வருகிறார். இரும்பு கிடங்கை பூட்டிவிட்டு குமார் மதிய உணவிற்காக சென்றபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது.

இதையடுத்து ஆண்டிப்பட்டி தீயணைப்பு படையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியாததால் தேனியில் இருந்து மேலும் 11 தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு 1 மணி நேரத்திற்கும் மேலாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

தீ விபத்தால் குடோனில் இருந்த ரூ.10 லட்சத்திற்கும் மேலான இரும்பு, பழைய பிளாஸ்டிக், அலுமினியம் உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின. இந்த தீ விபத்து மர்ம நபர்களால் ஏற்படுத்தப்பட்டது அல்லது தற்செயலாக நடைபெற்றதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

The post தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் பழைய இரும்பு கிடங்கில் தீ விபத்து: ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசம் appeared first on Dinakaran.

Tags : Antipatti, Theni district ,Theni ,Antipatti-Theppampatti road ,Theni district ,Dinakaran ,
× RELATED தேனி பழைய பஸ்நிலையத்தில் தற்காலிக நிழற்குடையை மாற்றியமைக்க கோரிக்கை