×

நாமக்கல் வன்முறை சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் சார்பில் உண்மை கண்டறியும் குழு: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

சென்னை: பரமத்தி வேலூர், ஜேடர்பாளையம் பகுதியில் உண்மை நிலையை கண்டறிய, தமிழக காங்கிரஸ் சார்பில் குழு அமைத்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கடந்த மார்ச் 11ம் தேதி நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையத்திற்கு அருகில் உள்ள கரப்பாளையத்தில் நித்யா என்ற பெண் மர்மமான முறையில் மரணமடைந்ததையொட்டி, அந்தப் பகுதியில் பதட்டமான சூழல் உருவாகியது. மேலும், அந்த பெண் அப்பகுதியில் உள்ள குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். அப்பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அந்தப் பெண்ணின் குடும்பத்தினரும், அச்சமுதாய மக்களும் உடலை வாங்க மறுத்து விட்டனர்.

பிறகு காவல்துறையினரின் சமரச முயற்சியின் காரணமாக சடலத்தை பெற்றுக் கொண்டனர். ஆனால், அதனைத் தொடர்ந்து சில விரும்பத்தகாத வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கரப்பாளையத்தைச் சுற்றியுள்ள பகுதியில் வெல்லம் தயாரிப்பு குடிசைத் தொழிலாக நடந்து வருகிறது. அதில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். வெல்ல ஆலை நடத்துபவர்கள் பல்வேறு சமுதாயத்தைச் சார்ந்தவர்களாக இருக்கிற நிலையில், கலவரத்தினால் பெரிய பாதிப்புக்கு உள்ளானார்கள். அவர்களது வெல்லத் தொழிற்சாலைகள் தீவைப்பு சம்பவங்களுக்கு இரையாகி உள்ளன. இதனால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மார்ச் மாதத்திலிருந்து இத்தகைய வன்முறைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

கடந்த வாரம் வடமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள மேற்கூரை உடைக்கப்பட்டு தீவைப்பு சம்பவங்கள் நடந்து 17.5.2023 அன்று ஒடிசா மாநில தொழிலாளர் ஒருவர் மரணமடைந்துள்ளார். அன்று இரவு 800 வாழை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டு வன்முறை நிகழ்ந்துள்ளன. கோவை சரக உயர் காவல்துறை அதிகாரிகள் முகாமிட்டுள்ள நிலையில் தொடரும் வன்முறைகள் மிகுந்த கவலைக்குரியதாகும். இத்தகைய வன்முறையாளர்களை காவல்துறையினர் அடையாளம் கண்டு கடும் நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமே அந்தப் பகுதியில் சமூக நல்லிணக்கம் ஏற்பட முடியும்.

எனவே, பரமத்தி – வேலூர், ஜேடர்பாளையம் பகுதியில் நடந்துள்ள விரும்பத்தகாத இந்நிகழ்வுகளின் உண்மை நிலையை கண்டறிய, தமிழக காங்கிரஸ் சார்பில் செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் தலைமையில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் பி.ஏ. சித்திக், பி. செல்வகுமார், எஸ்.கே. அர்த்தனாரி, எம்.பி.எஸ். மணி, வி.பி வீரப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மேச்சேரி ஆர். பழனிச்சாமி ஆகியோரைக் கொண்ட உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் அந்தப் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வன்முறைக்கான காரணத்தையும், அதனால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலையை கண்டுணர்ந்து அதற்கான தீர்வு அடங்கிய அறிக்கையை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு உடனடியாக வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post நாமக்கல் வன்முறை சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் சார்பில் உண்மை கண்டறியும் குழு: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Fact Detection Committee ,Congress ,Namakkal ,Anekiri ,Chennai ,Tamil Nadu Congress ,Paramathi Vellore ,Jedarmalayam ,Namakkal Violence ,K. ,Dinakaran ,
× RELATED புதிய செயலி மூலம் வாகன புகை பரிசோதனை சான்று