×

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி; தமிழ்நாட்டின் பண்பாட்டு மரபுக்கு கிடைத்த வெற்றி: வைகோ அறிக்கை

சென்னை: ஜல்லிக்கட்டிற்கு அனுமதி கிடைத்திருப்பது தமிழ்நாட்டின் பண்பாட்டு மரபுக்கு கிடைத்த வெற்றி என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள சட்டத்திற்கு எதிராக, விலங்குகள் நல அமைப்புகள் சார்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையில், நீதிபதிகள் அஜய் ரகுதோகி, அனிருத்தா போகு, ரிஷிகேஷ் ராய், சி.டி. ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை தொடர்ந்து விசாரித்து வந்தது.

இந்த வழக்கின் விசாரணையின் போது, “ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளைகள் துன்புறுத்தப்படுகிறது என்றும், காளைகளை வற்புறுத்தி போட்டிகளில் பங்கேற்க வைக்கின்றனர்” என்றும் விலங்குகள் நல அமைப்புகளால் வாதிடப்பட்டது. இதையடுத்து, “ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் கலாச்சாரம் சார்ந்த நிகழ்வு. பாரம்பரியம், இறை வழிபாடு அம்சங்களுடன் தொடர்புடையது. இது தொடர்பாக தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்திற்கு குடியரசு தலைவரும் ஒப்புதல் அளித்ததால், விலங்குகள் நல அமைப்புகளின் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று தமிழக அரசு வாதிட்டது.

அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நீதிபதி கே.என்.ஜோசப் தலைமையிலான அமர்வு வழக்கின் தீர்ப்பை இன்று வழங்கியுள்ளது. அதன்படி ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க மறுத்துள்ள உச்சநீதிமன்றம், ஜல்லிக்கட்டு தொடர்பாக, ‘தமிழ்நாடு அரசு சமர்ப்பித்த ஆவணங்கள் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது. ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் கலாச்சாரத்தோடு ஒருங்கிணைந்த பகுதி என்பதை ஏற்றுக்கொள்கிறோம்’ என்று கூறி உள்ளது.

ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு வழங்கிய ஒருமித்த தீர்ப்பில், “ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது என்றும், ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு இயற்றிய சட்டம் செல்லும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் அளித்துள்ள இந்தத் தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்க வரவேற்கத்தக்க தீர்ப்பு ஆகும். இதன் மூலம் தமிழ்நாட்டின் பண்பாட்டு மரபு நிலைநாட்டப்பட்டு இருக்கிறது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post ஜல்லிக்கட்டுக்கு அனுமதி; தமிழ்நாட்டின் பண்பாட்டு மரபுக்கு கிடைத்த வெற்றி: வைகோ அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Jallikattu ,VAICO ,Chennai ,Madhyamik General Secretary ,Vaiko ,Tamil Nadu ,
× RELATED தமிழ்நாடு திராவிட பூமி என்பதை இந்தத்...